Friday, August 28, 2015

பேர் மாறிப்போச்சு


சரண்யாவிற்கு பெயர் மாற்றி விளையாடும் விளையாட்டு மிகவும் பிடிக்கும். எப்போதும் எங்கே சென்றாலும் பெயர்களை மாற்றி விளையாடுவாள். தன் தோழிகள் வீட்டிற்கு சென்றால் அவள் பெயரை இவளுக்கு வைத்துக்கொள்வாள். இவள் பெயரை அவள் தோழிக்கு கொடுத்து விடுவாள். அப்படித்தான் ஒரு நாள் குழலி வீட்டிற்கு சென்று பெயர் மாற்றி விளையாடினாள். குழலியின் பெற்றோர் வெளியே அவசரமாக கிளம்பினார்கள். அவசர அவரமாக குழலியை கூட்டிச் சென்றதால் குழலியுடன் சரண்யாவின் பெயரும் சென்றுவிட்டது. ’குழலி’ என்ற பெயர் நன்றாக இருந்ததால் சந்தோஷமாக வீட்டை நோக்கி நடந்து சென்றாள் சரண்யா.
அவள் வீட்டை அடைய ஒரு மலையை கடக்க வேண்டும். ஒரு கருப்பு குதிரை இவளுடனே நடந்த வந்தது. குதிரையிடன் அது செல்லும் பக்கமாக தன்னையும் ஏற்றிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். சரி என ஒப்புக்கொண்டது குதிரை. “உன் பெயர் என்ன?” எனக் கேட்டாள். “கறுப்பழகி. Black Beauty” என்று சொன்னது குதிரை. “ஓ அன்னா சீவல் எழுதிய கறுப்பு அழகி நாவலில் வரும் Black Beauty குதிரை நீ தானா?” ஆமாம் ஆமாம் என்று தலையாட்டியது குதிரை. சரி நாம பெயரை மாற்றிக்கொள்வோமா என குழலி என்ற பெயரை குதிரைக்கும் கறுப்பழகி பெயரை தனக்கும் எடுத்துக்கொண்டாள்.
குதிரை வேறு பக்கம் சென்றதால் அங்கிருந்து இறங்கி வேறு திசையில் நடந்தபடி சென்றாள். திடீரென தன் பின்னால் ஒரு பெரிய உருவம் பின் தொடர்வதை கவனித்தாள். ரொம்ப உயரமாக பயங்கர வலிமை வாய்ந்தவராக இருந்தார் அவர். ‘மாமா, எனக்கு கால் வலிக்கின்றது கொஞ்சம் தூக்கிக்கொண்டு செல்கின்றீர்களா?” என்றாள் தைரியமாக. அவரும் சரி என்றார்.”உங்க பெயர் என்ன மாமா?” எனக்கேட்டாள். “கோலியாத்”. டேவிட்டை வீழ்த்திய கோலியாத் நீங்கள் தானா என விசாரித்தாள். ஆமாம் என்றவுடனே தன் வழக்கமான வேலையை செய்தாள். கறுப்பழகி பெயரை கோலியாத் கொஞ்சம் தயக்கத்துடன் பெற்றுக்கொண்டு, கோலியாத் பெயரை சிறுமிக்கு கொடுத்தார். கோலியாத் ஒரு வீரர்.
கோலியாத் பெயரை பெற்றவுடனே ஒரு வீராங்கனை போல உணர்ந்தாள். வீரர் வேறு பக்கம் சென்றதும் அவள் கம்பீரமாக நடந்து வீடு சேர்ந்தாள். வீட்டை அடைந்ததும் சிறுமிக்கு அவள் அம்மா மாலை உணவு கொடுத்தாள். சுவையான உணவு. அரிசி மாவும் வெல்லமும் கலந்த சுவையான உணவு அது. அன்று வழக்கத்திற்கு மாறாக நிறைய சாப்பிட்டாள் சிறுமி. “சரண்யா, நீயேவா இதை எல்லாம் சாப்பிட்ட?” என்று அம்மா வியந்து போனாள். “ஹா ஹா ஹா நான் சரண்யா இல்லை, நான் கோலியாத்” என்று அன்று மாலை நடந்த கதையை விவரித்தாள். கதையை முடிக்கும்போது அவளுக்கு சரண்யா என்ற பெயர் வேண்டும் என்றாள். ஆனால் அந்த பெயர் இப்போது குழலியிடம் இருக்கின்றது.
இருட்ட துவங்கிவிட்டதால் சிறுமியின் தாயே குழலி வீட்டிற்கு சென்று பெயர் மாற்றி வருவதாக தெரிவித்தாள். ஆனால் குழலியின் பெயர் குதிரையிடமும் குதிரையின் பெயர் அந்த பெரிய வீரனிடமும் இருக்கின்றது அல்லவா? அதனால் முதலில் வீரனை சந்தித்து அவன் பெயரை திருப்பித் தரவேண்டும். தாயின் பெயரான ‘அன்பா’வை மகளுக்கு கொடுத்து கோலியாத் பெயரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்..
அந்த வீரனை வழியிலேயே சந்தித்தாள். வீட்டில் இருந்து எடுத்த வந்த பழங்களை அவனுக்கு கொடுத்துவிட்டு பெயர்களை மாற்றிக்கொண்டாள். இருட்டிவிட்டதால் தானும் பாதுகாப்பிற்காக துணைக்கு வருகிறேன் என்றார் கோலியாத். கறுப்பழகி பெயருடைய கருப்பு குதிரையை தேடிச்சென்றனர் இருவரும். அது ஒரு மரத்திற்கு கீழே ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தது. மெல்ல அதன் முதுகில் வருடி, அதற்கும் சில பழங்களை கொடுத்துவிட்டு குழலியின் பெயரை அதனிடம் இருந்து வாங்கினாள். இப்போது வீரனுக்கு அவன் பெயர் சென்றுவிட்டது, குதிரைக்கும் அதன் பெயர் சென்றுவிட்டது. குழலியின் பெயர் அம்மாவிடமும், சரண்யாவின் பெயர் குழலியிடமும் இருக்கு? சரியா? ‘குழலியின் வீடுவரையில் நானும் உங்களுடன் துணைக்கு வருகின்றேன் என்றது கறுப்பழகி. மூவரும் குழலியின் வீட்டை நோக்கி நகர்ந்தனர்.
குழலியின் வீட்டை அடைந்தபோது குழலி அழுதுகொண்டிருந்தாள் . அவளுக்கு தன் பெயர் வேண்டும் என அழுதுகொண்டிருந்தாள். சரியான நேரத்தில் சரண்யாவின் அம்மா அங்கே சென்று பெயரை மாற்றினாள். நன்றாக இருட்ட துவங்கிவிட்டது. கறுப்பழகியும் கோலியாத்தும் வேகமாக சரண்யாவின் தாயினை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வாசலிலேயே காத்திருந்த சரண்யா தன் பெயரை அம்மாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதும் மிகவும் மகிழ்ந்தாள்.
இரவு வணக்கம் சொல்லிவிட்டு கறுப்பழகியும் கோலியாத்தும் விடைபெற்றனர். அவர்கள் இருவரும் தூரத்தில் மறையும் வரையில் சரண்யா கை அசைத்தாள். ஆனாலும் அவள் பெயர் மாற்றிக்கொள்ளும் விளையாட்டை கைவிடவே இல்லை. சரி நாம பேரை மாத்திக்கலமா? ஆனால் இரவிற்குள் திருப்பி கொடுத்திடனும். அப்படின்னா சம்மதம்.

No comments:

Post a Comment