லயாவின் வகுப்பில் செடிகளைப் பற்றி பயின்றாள். அன்று மாலை அவளுடைய அப்பாவிடம் தனக்கும் செடி வளர்க்க ஆசை என்றாள். தோட்டத்தில் அவளுக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ஒரு கட்டம் கட்டி இங்கே நீ உன் செடிகளை வளர்க்கலாம் என்று அப்பா இடம் ஒதுக்கிக்கொடுத்தார். ஒரு குச்சியால் அவள் லயா என்று கட்டத்தின் கீழே எழுதிக்கொண்டாள். “இது என் இடம், யாரும் இங்க வரக்கூடாது” என்றாள் ஆனந்தமாக.
வாக்களித்தபடியே லயாவின் அம்மா வேலை முடித்து வரும் வழியில் லயாவிற்காக விதைகளையும் வாங்கி வந்தார்கள். மொத்தம் ஐந்து வகையான விதைகளை வாங்கி வந்தார்கள். மொச்சை, துவரை, அவரை, பூசணி மற்றும் சூரியகாந்திப்பூ விதைகள் இருந்தன. விதைகளைப் பார்த்தவுடன் லயாவிற்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். இது தான் விதையா? இதில இருந்து தான் செடி வருமா? அவ்வளவு பெரிய செடி இதிலிருந்தாப்பா வரும்? மரம் கூட இதில வருமா? தேங்கா தண்ணி குடிப்போமே அது கூட இது போட்டா வருமா? மாங்காப்பழம் நான் வளர்க்க முடியுமா? அம்மா எனக்கு வெச்சி விடுவாங்களே ரோஜாப்பூ அது வளருமா?” கேள்வி கேட்டுக்கொண்டே உறங்கிவிட்டாள். அவள் கனவிலும் செடிகளும் விதைகளும் தான் வந்தன.
மறுநாள் விடிந்ததும் வழக்கத்திற்கு மாறாக லயா யாரும் எழுப்பாமலே எழுந்துவிட்டாள். வழக்கமாக அவளை அவளுடைய அப்பா அல்லது அம்மா தான் கொஞ்சியபடி எழுப்ப வேண்டும். அன்று எழுப்பியது விதைகள் தான். அப்பாவின் துணையுடன் தோட்டத்திற்கு சென்றாள். கட்டத்தினை அழகாக மாற்றி இருந்தார் அப்பா. கட்டத்தை சுற்றி குட்டியாக மண்னை குவித்து வைத்திருந்தார். ஆங்கில எழுத்து “W”போல ஐந்து விதைகளையும் விதைத்தாள். எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றினாள். பக்கத்தில் இருந்த மரங்களுக்கும் முதல் முதலாக தண்ணீர் ஊற்றினாள் லயா.
பள்ளியில் அவளுடைய நினைவுகள் எல்லாம் விதைகள் மீதே இருந்தன. தான் இல்லாமல் அந்த விதைகள் செடியாக முளைத்துவிட்டால்? யாராவது விதையை திருடிவிட்டால்? மழை பெய்து விதை அடித்து சென்றுவிட்டால்? பலவாறு பயந்தாள். தன் ஆசிரியையிடம் இந்த பயத்தை கூறினாள். ஆசிரியை அவளுக்கு தைரியம் கொடுத்து, அதெல்லாம் எதுவும் நடக்காது லயா, பயப்படவேண்டாம் என்றார்கள்.
மாலை, பள்ளி விட்டதும் கடகடவென வீட்டு தோட்டத்திற்கு ஓடினாள். எந்த மாற்றமும் தெரியவில்லை. இரவு இருட்டும் வரையில் அங்கேயே இருந்தாள். இரவு உணவினைக்கூட அங்கே தான் உண்டாள். இரண்டாம் நாள் காலை மீண்டும் தண்ணீர் ஊற்றினாள். பள்ளிக்கு கிளம்பும்போது அவள் தோட்டத்து பகுதியில் விதைகளை காப்பதைப்போல அவளுடைய குடையையும் விரித்து நிற்க வைத்துவிட்டு சென்றாள். கேட்டதற்கு, மழை வந்தால் விதை நனைந்துவிடும் என்றாள். மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்துவிடும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். அவள் ஒருமுறை மழையில் நனைந்து அப்படி ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. அன்று மாலையும் எதுவும் நிகழவில்லை.
மூன்றாம் நாள் காலையில் அவள் உறங்கிக்கொண்டிருந்தாள். தான் தூக்கப்படுவதை லயா உணர்ந்தாள். அவளுடைய அப்பா அவளை தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார். கீழே இறக்கிவிட்டார். லயாவின் அம்மா லயாவின் கண்களை பின்னால் இருந்து தன் கைகளால் மூடினார். “லயா, மெல்ல கண் திறந்து பாரு” என்றார்.
லயா மெல்ல கண் திறந்து பார்த்தாள். அவள் போட்ட விதைகள் முளைத்து இருந்தது. தலை குனிந்து வணக்கமும் நன்றியும் தெரிவிப்பதுபோல அந்த முளைகள் இருந்தன.
“யே..யே.. “ என ஆனந்தமாக கத்தினாள். அவள்
கூடுதல் ஆச்சர்யம் என்ன தெரியுமா? ‘லயா’ என குச்சியில் எழுதி வைத்திருந்தாள் அல்லவா, அங்கேயும் குட்டி குட்டி செடிகள் முளைத்து இருந்தன. லயாவின் அப்பா அங்கே கடுகுகளை அவள் பெயருக்கு ஏற்றவாறு போட்டிருந்தார். மற்ற செடிகளுடன் அதுவும் வளர்ந்து அழகாக இருந்தது.
”நான் நிறைய செடிகளையும், மரங்களையும் வளர்ப்பேன் அப்பா” என்று சொல்லிவிட்டு அப்பாவையும் அம்மாவையும் கட்டி அணைத்துக்கொண்டாள்
No comments:
Post a Comment