Friday, August 28, 2015

நட்பு நடை


இரண்டு நாட்களாக தனது நண்பன் மக்கட்டா என்ற மரவட்டையை காணவில்லை. வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு அவன் வரவே இல்லை. என்னாச்சு அவனுக்கு என்று கவலைப்பட்டது பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சியின் பெயர் பூம்பூம். வெகுநாட்களாகவே மக்கட்டாவும் பூம்பூமும் நண்பர்கள். சரி வீட்டிற்கே போய்விடலாம் என்று மரவட்டையின் வீட்டை நோக்கிச் சென்றது பூம்பூம் பட்டாம்பூச்சி. அங்கே வீட்டின் மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தது மரவட்டை. “நண்பா மக்கட்டா, என்னாச்சு, ஏன் இப்படி படுத்து இருக்க?” என்று விசாரித்தது.  

விசாரித்து பார்த்தால் ஒரு சின்ன விபத்தில் மரவட்டையின் சில கால்கள் நசுங்கியும் சில கால்களில் காயமும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் நடக்க மிகவும் சிரமப்படுகிறது. இதனால் வீட்டை விட்டே நகர முடியவில்லை. தினசரி உணவிற்கு கூட வெளியே செல்லமுடியவில்லை என்று கூறி மக்கட்டா வருத்தப்பட்டது. பூம்பூம் பட்டாம்பூச்சிக்கு தன் நண்பனுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. உடனே தன்னுடைய மற்றொரு நண்பன் தவளையின் நினைவு வந்தது.  

அந்த தவளையார் ஊரில் உள்ள முக்கியமான செம்மார். செம்மார் என்றால் காலணிகளை தைப்பவர். அவருடைய பெயர் பொம்மர். காட்டில் இருந்து சிங்கம், புலி, கரடிக்கு கூட காலணி தைக்க விண்ணப்பங்கள் வரும். சிறப்பாக காலணிகளை செய்து முடிக்கும். அந்த பொம்மர் தவளையின் இருப்பிடத்திற்கு பட்டாம்பூச்சி பறந்து சென்றது. வாட்டமான முகத்தை பார்த்த பொம்மர், என்ன பிரச்சனை என்று விசாரித்தது. “என்னுடைய மரவட்டை நண்பனுக்கு சில கால்கள் உடைந்துவிட்டன, சில கால்களில் அடிபட்டுவிட்டது, உங்களுடைய அனுபவத்தைக் கொண்டும் அறிவினைக்கொண்டும் அவனுக்கு காலணிகளை செய்து தரவேண்டும்” என கேட்டுக்கொண்டது.

  ஆமாம் மரவட்டைக்கு எத்தனை கால்கள் தெரியுமா? 100க்கும் அதிகமான கால்கள். அதற்கு காலணிகள் செய்வது என்பது சிரமமான காரியம். தவளையார் யோசித்து கொண்டிருந்ததைப் பார்த்த பட்டாம்பூச்சி ”உங்கள் உழைப்புற்கு ஏற்றவாறு நாங்கள் ஏதேனும் பொருள் தருகின்றோம்” என்றது பூம்பூம் பட்டாம்பூச்சி. “இது என் திறமைக்கான சவால், அதனால் இந்த முயற்சியில் வெற்றிபெற்றாலே சந்தோஷம்” என்றது தவளை.

  மரவட்டையின் இல்லத்திற்கு இருவரும் சென்றனர். அதற்குள் தவளை செருப்பு செய்து தரும் செய்தி அறிந்து பக்கத்தில் இருந்த புழு பூச்சிகள் எல்லாம் மரவட்டையின் வீட்டு வாசலில் காத்திருக்க ஆரம்பித்தன. மரவட்டையில் பழுதான கால்கள், அடிபட்டிருக்கும் கால்கள் என எல்லா கால்களின் அளவினையும் தவளை அளந்தது. சின்ன சின்ன கணக்குகளைப் போட்டது. வழக்கமாக பெரிய காலணிகளை மட்டுமே செய்து வந்த தவளைக்கு இப்போது என்ன பொருளைக் கொண்டு காலணி செய்வது என குழப்பம். இது பெரிய சவால்.  

சில நிபுணர்களை கலந்து ஆலோசித்தது. விசேஷமான ஒரு பூவினையும், இலையினையும் கலந்து அதிலிருந்து கிடைக்கும் தழையை கொண்டு காலணி செய்தால் காலின் காயம் குணமாகும், காலணியாகவும் பயன்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதன்படியே அந்த தழையை தவளை தயாரிக்க முடிவு செய்தது.

  ஒரு இரவு முழுக்க அந்த தழையினை தயாரித்தது தவளை. மறுநாள் குட்டி காலணியை செய்ய அதற்கு லென்ஸ் தேவைப்பட்டது. மேலும் சில பொருட்களும் தேவைப்பட்டது. அனைத்தையும் வாங்கிவர மதியம் ஆனது. பிறகு ஒவ்வொரு காலணியாக ஒவ்வொரு காலுக்கு செய்யத்துவங்கியது. சில காலணிகள் பெரியதாகவும் சில சிறியதாகவும் இருந்தது. அந்த இரவு முழுக்க தூங்காமல் எல்லா காலணிகளையும் செய்து மரவட்டையின் காலில் போட்டுவிட்டது. ஒரே சீராக இருக்கட்டும் என்று எல்லா காலணிகளுக்கும் வண்ணத்தை தீட்டியது பொம்மர் தவளை. காலணிகளுடன் மரவட்டையை பார்க்க அழகாக இருந்தது.  

பூச்சிகளின் உலகமே மரவட்டையின் வீட்டு வாசலில் காத்துக்கொண்டு இருந்தது. மரவெட்டை மெல்ல எழுந்து ஆடி அசைந்து வெளியே வந்தது. நடப்பதற்கு சிரமமே இருக்கவில்லை. காலணியுடன் வந்த மரவட்டையை பார்த்ததும் அனைத்து பூச்சிகளும் கைத்தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தன. மிகவும் நன்றியுடன் பொம்மர் தவளையும், தன் நண்பன் பூம்பூமையும் பார்த்தது.



No comments:

Post a Comment