Friday, August 28, 2015

காக்கா ஏன் கருப்பாச்சு


அப்போது தான் உலகத்தில் இருக்கும் எல்லா உயிரும் உருவாகி இருந்தது. ஒவ்வொரு உயிரும் அவர்களுக்கு தேவையான பெயரை குயாங்கிடியாங்கி தாத்தா வைத்துவிட்டு சென்றுவிட்டார்.. பறவையாக வேண்டுமா, வீட்டு விலங்காக வேண்டுமா, காட்டு விலங்காக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம். தங்களுக்கான உருவத்தையும் அவர்களே முடிவு செய்யலாம். தங்களுக்கான நிறத்தையும் முடிவு செய்யலாம். அந்த தேர்வுகள் எல்லாம் ஒரு பெரிய பணிமனையில் நடந்துகொண்டு இருந்தது. ஒவ்வொரு உயிராக வரிசையில் சென்று ஒவ்வொன்றாக தேர்ந்து எடுத்தன.
  நாம் இப்போது பார்க்கும் ஒட்டகச்சிவிங்கி, மாடு போல தான் அப்போது இருந்தது. வரிசையில் நிற்கும்போது உயரமான ஒரு மரத்தின் மீது சிகப்பு நிறத்தில் ஒரு கனி இருப்பதனை கண்டது. அது மிகவும் உயரத்தில் இருந்தது. அதனால் எட்டி சாப்பிடமுடியவில்லை. உருவத்தை மாற்றங்கள் செய்யும் அறைக்கு சென்றபோது “ உங்களுக்கு என்ன மாற்றம் வேண்டும் என்று கேட்டார்கள் “எனக்கு நீளமான கழுத்து வேண்டும்” என்றதால் ஒட்டகச்சிவங்கியின் கழுத்து நீளமாக மாற்றப்பட்டது. தங்களுக்கு தேவையான  தோல் , அதன் நிறத்தை எல்லாம் அங்கே தேர்வு செய்து கொள்ளலாம்.  
  காகங்கள் அப்போது வெள்ளை நிறத்தில் தான் இருந்தன. ஆனால் அதற்கு மயிலின் தோகையைப் பார்த்துவிட்டு அதே போல வண்ண வண்ண நிறம்  வேண்டும் என ஆசைப்பட்டது. ஆமாம் மயில் தோகை விரித்தாடி பார்த்ததுண்டா?. சரி கதைக்கு வருவோம். காகம் மயிலின் தோகை போல தனக்கு வண்ண நிறம் வேண்டும் என ஆசைப்பட்டது. அதனால் நிறங்களை மாற்றுவதற்கு பொறுப்பாக இருந்த ஆந்தையை சந்தித்து தனக்கு மயில் தோகை  போல  வண்ண வண்ண நிறத்தில் தன் உடல் நிறம்  வேண்டும் என்றது.  
  மறுநாள் காலை வருமாறு காகத்தை ஆந்தை அனுப்பியது. ஆந்தை ஒரு விஞ்ஞானி. நிறம் மாற்றும் விஞ்ஞானி. நிறங்களை எல்லாம் ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி புதிய திரவத்தை தயார் செய்தது ஆந்தை. நள்ளிரவு வரையில் அந்த தயாரிப்பு நடந்தது. 12 மணிக்கு மேல் கொஞ்சம் கண் சரியாக தெரியவில்லை. தூக்கமும் சேர்ந்துகொண்டது. தங்க நிறத்தை கொட்டி கலக்குவதற்கு பதிலாக கருப்பு நிறத்தை கொட்டிவிட்டது. தவறுதலாக கொட்டியதை கூட கவனிக்க முடியவில்லை. தூக்கம் அதிகமானதால் வீட்டு வாசலிலேயே உறங்கிவிட்டது. காலையில் மிகுந்த உற்சாகத்துடன் காகம் வந்தது. தூக்க கலக்கத்தில் இருந்த ஆந்தை “உள்ளே இருக்கும் பாத்திரத்தில் குதித்து அரை மணி நேரம் உள்ளே இருக்க வேண்டும். வெளியே வந்தால் நீ கேட்ட நிறங்கள் உன் உடலில் கிடைக்கும், ஆனால் இதன் பின்னர் நிறத்தை மாற்றவே முடியாது” என்றது. மகிழ்ச்சியாக காகம் உள்ளே சென்று அந்த பெரிய பாத்திரத்தில் குதித்தது.  
  அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தால்….. கருமை நிறத்திற்க மாறி இருந்தது காகம். ஓவென அழுதது. ஆனால் இனி நிறத்தை மாற்ற முடியாது. ஆந்தையை பார்த்து இனி உனக்கு இரவில் மட்டும் தான் கண் தெரியும் பகல் முழுக்க நீ உறங்குவாய் என சபித்தது. இப்படித்தான் ஆந்தை இரவில் விழித்திருக்கும் பறவையாகவும் காகங்கள் கறுமை நிறத்திற்கு மாறியது.  
(எழுதிக்கொண்டிருக்கும் ‘காக்கா ஏன் கறுப்பாச்சு’ என்ற புத்தகத்திலிருந்து)

No comments:

Post a Comment