Friday, August 28, 2015

நீநிஜூஜுவை சந்தித்த டினிகா – குழலி


நீநிஜூஜு ஒரு குட்டிப்பெண். நகம் வெட்டிக்கொள்ளாததால் அன்று அவள் பள்ளிக்கு செல்லவில்லை. நீநிஜூஜு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தாள். 'டொக் டொக்...டொக் டொக்' என கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அட யாருப்பா இந்த நேரத்தில என எழுந்து கதவை திறந்தாள். வெளியே யாரும் இல்லை. நான்கு பெரிய்ய்ய்ய் கால்கள் மட்டும் தெரிந்தது. தலையை வெளியே நீட்டி பார்த்தாள் நீநிஜூஜு.

நீநிஜூஜுவை நீநி என்றும் அழைக்கலாம் ஜூஜு என்றும் கூப்பிடலாம். அதனால் குழப்பம் வேண்டாம். வெளியே எட்டிப்பார்த்தபோது நாலு மாடி உயரத்திற்கு ஒரு மிருகம் நின்று கொண்டு இருந்தது. அதனுடைய கால்களை தான் வாசலில் பார்த்திருக்கிறாள் நீநி. அந்த பெரிய மிருகம் பச்சை நிறத்தில் இருந்தது. அதன் பற்கள் ஒவ்வொன்றும் நம்முடைய கைகள் அளவிற்கு இருந்தது. இரண்டு கண்கள். நீண்ட கழுத்து. 'என்ன வேண்டும்' என கைகாட்டி கேட்டாள் அதன் தலையை பார்த்து. அந்த மிருகத்தின் தலை நான்கு மாடி உயரத்தில் இருந்ததால் அதற்கு நீநிஜூஜு பேசுவது கேட்கவில்லை.

உடனே நீநிஜூஜு 'பம்பம்போலே பம்பம்போலே' என்ற மந்திரத்தை கூறினாள். உடனே அவள் அந்த மிருகத்தின் உயரம் அளவிற்கு பெரியவளாக மாறினாள். 'ம்ம் இப்ப சொல், என்ன வேணும் உனக்கு. எதுக்கு இப்ப என்னை எழுப்பின?' என்று கேட்டாள்.

'எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட எதுவுமே கிடைக்கல, ஏதாச்சும் சாப்பிட தாயேன்..'

'சரி, நீ இவ்வளவு பெருசா இருந்தா எப்படி வீட்டுக்குள்ள வருவ. இரு." என்று சொல்லி 'பம்பம்போலே பம்பம்போல' என்ற மந்திரத்தை சொல்லி அதன் தலையில் ஒரு குட்டு குட்டினாள். உடனே அது நாய்குட்டி அளவிற்கு சிறியதாக மாறிவிட்டது. நீநீயும் அவளுடைய சாதாரண உருவத்திற்கு வந்துவிட்டாள். 'வா' என ஒரு நாய்குட்டியை அழைத்து செல்வது போல வீட்டிற்குள் சென்றாள்.

"ஐஸ்கிரீம் சாப்பிட்றியா?"

"ஐஸ்கிரீமா? அப்படின்னா?"

"ஐஸ்கிரீம்னா ஐஸ்கிரீம்தான்?"

"என்ன சுவைல இருக்கும்?"

"ஐஸ்கிரீம் மாதிரி தான் இருக்கும்"

"வேற ஏதாச்சும் இருக்கா?

"நூடுல்ஸ் சாப்பிட்றியா?"v "கஞ்சி ஏதாச்சும் கிடைக்குமா?"

சமையல் அறைக்கு இருவரும் சென்றனர். நீநிக்கு கஞ்சி வைக்க தெரியாது ஆனாலும் சமையல் புத்தகத்தில் இருந்ததை படித்து செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அந்த மிருகத்தை உள்ளே அழைத்து சென்றாள். புத்தகத்தில் சொன்னது மாதிரியே பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, கொஞ்சம் அரிசி போட்டு, கொஞ்சம் உப்பு போட்டனர். குட்டியான அந்த மிருகம் சமையல் அறையின் திட்டு மீது ஏறி பாத்திரத்தில் கஞ்சி தயாராவதை ஆர்வமாக பார்த்தது.

"சீக்கிரம் தயாராகாதா ?" எனக் கேட்டது.

"அப்ப கொதகொதகுள்ளா கொதகொதகுள்ளான்னு சொல்லிட்டு இரு, சிக்கிரம் தயாராகிடும்" என சொன்னாள் நீநிஜூஜு. அந்த மிருகமும் கொதகொதகுள்ளா கொதகொதகுள்ளான்னு சொல்லிகிட்டே இருந்ததாம். கஞ்சி சீக்கிரம் தயாராகியும் விட்டதாம்.

துணியை கொண்டு அந்த சூடான பாத்திரத்தை எடுத்து வந்து முன் அறையில் அமர்ந்துகொண்டனர். சூடு குறைய ஒரு கரண்டியை வைத்து துழவிக்கொண்டே இருந்தாளாம் நீநிஜூஜு.

"ஆமா நீ யாரு? எங்கிருந்து வர்ர?"ன்னு கேட்டாள்

"எங்களை டயனோசர்ன்னு கூப்பிடுவாங்க. நான் பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்து வரேன். இப்ப எப்படி ஊர் உலகம் இருக்குன்னு பார்க்கலாம்னு வந்தேன். பசித்தது உன் வீட்டு கதவை தட்டினேன்."

"ஓ நீ தான் டயனோசரா? " என்று சாதாரணமாக கேட்டாள் நீநி.

"ஆமா உன் பேரு என்ன டயனோசர்?"

"பேரா ? அப்படின்னா"

"எனக்கு நீநிஜூஜுன்னு பேரு, எங்க அப்ப அம்மா பிரண்ட்ஸ் எல்லாம் நீநிஜூஜுன்னு கூப்பிடுவாங்க. உன்னை எப்படி கூப்பிடுவாங்க?"

"எனக்கு பேரு எல்லாம் இல்லை. நீயே ஒரு பேரு வையேன்"

"டினிகா. நல்லா இருக்கா?"

"ஐ. டினிகா. நல்லா இருக்கு."

அதற்குள் கஞ்சி ஆறி இருந்தது. டினிகா அதனை ருசித்து குடித்தது. நேரமாகிவிட்டது நான் கிளம்புகிறேன் என கிளம்பி சென்றுவிட்டது டினிகா. நீநிஜூஜுவும் உறங்க சென்றுவிட்டாள். கொஞ்ச நேரத்தில் 'டொக் டொக் டொக் டொக்' என்று மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்தால் மீண்டும் டினிகா. 'இப்ப என்னப்பா? இப்ப தான சாப்பிட்டு போன.?'

'என்னை குட்டியா மாத்தினியே திரும்ப பெருசா மாத்து, எங்க காலத்தில என்னை சேத்துக்க மாட்டேங்குறாங்க'

'ஓ மறந்தே போயிட்டேன்.'

பம்பம்போலே பம்பம்போலே...

- குழலி + விழியன் (குழலி (எனது மகள்) உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரம் நீநிஜூஜு. நீநிஜூஜுவை வைத்து பல குட்டிக்குட்டிக்கதைகள் தினமும் பள்ளிக்கு போகும் வழியில் சொல்லி இருக்கின்றாள். இந்தக்கதை செப்டம்பர் 2013 சுட்டி விகடனில் வெளியானது. அப்போது குழலியின் வயது 4.25 )



No comments:

Post a Comment