Friday, August 28, 2015

அங்கி செய்த வினை


முன்பு ஒரு காலத்தில, ரொம்ப ரொம்ப முன்னாடி நடந்த கதை இது... அந்த காலத்தில இப்ப இருக்கிற மாதிரி சூரியன் அவ்வளவு பிரகாசமா இருக்காது. இவ்வளவு வெளிச்சமாக இருக்காது. அப்போ சூரியனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனா அந்த குழந்தைக்கு சூரியன் பெயர் எதுவும் வெக்கல . நாமும் அப்படியே குழந்தை குழந்தைன்னு கூப்பிட முடியாது இல்லையா? அதனால ஒரு பேரு வெப்போம். 'அங்கி'. நல்லா இருக்கா பேரு? 'அ...ங்கி'ன்னா வெளிச்சம்னு அர்த்தம். சரி அங்கி சூரியனுக்குள்ளையே தான் இருந்துச்சு. உள்ளயே சாப்பிட்டு உள்ளயே தான் விளையாடிச்சு.

அந்த சமயம் நிலா பிறக்கல. பூமிக்கு ஒரே வெளிச்சம் சூரியன் தான். இரவில கும்மிருட்டா இருக்கும். அங்கி ஒரு நாள் 'அம்மா, அம்மா.. நான் பூமியில போயிட்டு விளையாடிட்டு வரேன்மா. ஒரே ஒரு நாள்மா' ன்னு கெஞ்சி கேட்டுச்சாம். கொஞ்சம் யோசிச்ச சூரியன் 'சரி போய் அதோ தெரியுதோ அந்த பூங்காவில பசங்களோட விளையாடு, ஆனா அது பக்கத்தில இருக்க வட்ட தோட்டத்துக்கு மட்டும் போகக்கூடாது...சரியா...'ன்னு சொல்லுச்சாம். பூமியில இருக்க அந்த பூங்காவை காட்டுச்சாம் சூரியன். சரின்னு தலையாட்டி சூரியனுக்குள்ள இருந்து பறந்து பூமில இருந்த பூங்காவுக்கு வந்துச்சாம் நம்ம அங்கி.

அங்கி ஒரு கத்திரிக்காய்க்கு கை கால் மொளச்சது போல இருக்குமாம். பூங்காவில் விளையாடின பசங்க முதலில் அங்கியை விளையாட்டில சேர்த்துக்கல. போ போன்னு துரத்தினாங்க. அப்புறம் பாவப்பட்டு சரி வான்னு பிறகு சேர்த்துகிட்டாங்க. ஒரு பகல் முழுக்க அந்த பூங்காவில தான் எல்லோரும் விளையாடினாங்க. அந்த சமயம் பள்ளின்னு எதுவும் இல்லவே இல்லை. ஐய்யோ எவ்வளவு சந்தோஷமான நாட்களா இருந்திருக்கும் இல்லை. பசங்களுக்கு காலையில இருந்து இரவு வரை விளையாட்டு மட்டும் தான். அங்கிய அவங்க, நண்பர்கள் குழுவில சேர்த்துகிட்டாங்க. ஓடி விளையாட்றது, ஊஞ்சல், சறுக்கா மரம்னு எல்லா விளையாட்டையும் அங்கியும் விளையாடிச்சு.

இருட்ட ஆரம்பிச்சதும் ஒவ்வொருத்தரா வீட்டுக்குக் கிளம்பினாங்க. மிச்சம் ஒரு நாலு பசங்களும் அங்கியும் மட்டும் இருந்தாங்க. அதில ஒரு பையன் 'டேய், நாம பக்கத்தில இருக்க வட்ட தோட்டத்துக்கு போகலாமா?'ன்னு கேட்டானாம். அப்ப தான் அங்கிக்கு அம்மா அங்க போக வேண்டாம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. இல்லை நான் வரல, அம்மா போகக்கூடாதுன்னு சொன்னாங்க அதனால வரலைன்னு சொல்லுச்சாம் அங்கி. ஆனாலும் பசங்க வலுக்கட்டாயமா கூட்டிட்டு போனாங்க.

அந்த வட்டத்தோட்டம் ரொம்ப விநோதமா இருந்துச்சாம். வட்ட வடிவில தோட்டம். சுத்தி பெரிய வட்டம். அப்புறம் கொஞ்சம் சின்ன வட்டம் அப்புறம் இன்னும் சின்னது. இப்படியே போய் நடுவில ஒரு மரம். ஒவ்வொரு வட்டத்திலும் நிறைய மரங்கள். ஆனா எல்லா மரமும் ஒரே மாதிரியே இருந்துச்சு. அதனுடைய கிளைகளும் ஒரே மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு கிளையிலும் சரியா பத்து இலைகள். ஒவ்வொரு இலையோட நுனியிலும் நட்சத்திரங்கள். சில நட்சத்திரம் பெருசாகவும் சில நட்சத்திரம் சிறுசாகவும் இருந்துச்சாம். இதை பார்த்த அந்த நாலு பசங்க பயந்துபோய் அந்த இடத்தைவிட்டே போயிட்டாங்களாம்.

அங்கி மொதல்ல ஒரு நட்சத்திரத்தை சாப்பிட்டு பார்த்துச்சாம். நல்ல சுவையா இருந்தது போல, ஒரு கிளையை சாப்பிட்டு முடிச்சுது, ஒரு மரத்தை முடிச்சுது, ஒரு வட்டத்தை முடிச்சுது அப்படியே அந்த வட்டத்தோட்டத்தில் இருந்த எல்லா நட்சத்திரங்களையும் சாப்பிட்டு முடிச்சுது. அப்ப தான் அதை கவனிச்சது, அங்கியுடைய வயிறு ரொம்ப பெருசாயிடுச்சு. செம பெருசு. அவ்ளோ நட்சத்திரங்களை சாப்பிட்டு இருக்கு. நடக்கவே முடியல. முன்ன இருந்த அங்கியை விட நூறு மடங்கு பெருசா மாறிடுச்சு. 'அம்மா..அம்மா.. 'ன்னு அம்மாவோட உதவியை கேட்டது. வட்டத்தோட்டத்து நடுவில அங்கியை பார்த்ததும் சூரியனுக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. "அடேய், உன்னை அங்க போகக்கூடாதுன்னு சொன்னேன் இல்ல. உன்னை யாரு அங்க போகச்சொன்னது. இந்த நட்சத்திரங்கள சாப்பிட்டா தான் நான் பிரகாசமாக முடியும். இன்னும் ஒரு நாள்ல நான் சாப்பிடலன்னா பூமிக்கு வெளிச்சமே இருக்காது. போ' என்று கோபமா பேசுச்சு.

உலக மக்கள் எல்லாம் இவங்க பேசுறதை கேட்டு பயந்துட்டாங்க. அய்யய்யோ இனி இருட்டுலயே இருக்க வேண்டியது தானான்னு ரொம்ப அச்சப்பட்டாங்க. "சூரியனே ஏதாச்சும் செய்யுங்க.."ன்னு கெஞ்சினாங்க. சூரியன் கொஞ்சம் நேரம் தவம் இருந்து அங்கிய பார்த்து 'வேகமா பூமிய சுத்திட்டு வா குழந்தை. ஒரு ராத்திரி முழுக்க ஓடினா ஏதாச்சும் நடக்கலாம்..' ன்னு சொல்லுச்சு. தன்னுடைய எல்லா பலத்தையும் திரட்டி அங்கி ஓட ஆரம்பிச்சுது. பயங்கர பயங்கர வேகம். டுர்ர்ர்ர்னு ஓடுச்சு. யார் கண்ணுக்கும் தெரியாத அளவிற்கு வேகமா ஓடுச்சு. பூமிய இரவெல்லாம் சுத்துச்சாம். காலையில் சூரியன் திரும்ப வந்தப்ப அங்கி முன்ன இருந்த போலவே சின்னதா மாறி இருந்துச்சு.  

ஆனா சாப்பிட்ட நட்சத்திரம் எல்லாம் எங்க போச்சு? அங்கி ஓடினப்ப நிறைய வேர்வை வந்துச்சு. அந்த வேர்வை வழியா எல்லா நட்சத்திரமும் வெளியே போய் பூமியில அங்கங்க விழுந்து இருக்கு. சூரியன் ஒரு பெரிய்ய்ய்ய பைய தூக்கி போட்டு, இந்த நட்சத்திரத்தை எல்லாம் இந்த பையில போட்டுட்டு வான்னு சொல்லுச்சாம். பகல்ல நட்சத்திரம் எங்க இருக்குன்னு தெரியல அதனால ராத்திரி வரை காத்திருந்து ஒரே ராத்திரியில எல்லா நட்சத்திரத்தையும் அந்த பெரிய்ய்ய பையில் எடுத்து போட்டுச்சாம் அங்கி. சூரியன் ரொம்ப சந்தோஷமாகி அங்கியை கிட்ட வான்னு சொல்லுச்சாம். பையை தூக்கிகிட்டு அங்கி போச்சாம். ஒரு பெரிய பந்து மட்டும் வழியில விழுந்துடுச்சு. நட்சத்திரத்தை ஒவ்வொன்னா சாப்பிட ஆரம்பிச்சதாம் சூரியன். அப்படியே பயங்கர பிரகாசமா மாறிடுச்சாம். பாதி பை வரைக்கும் தான் சாப்பிடுச்சாம். அதுவே அடுத்த பத்தாயிரம் வருஷத்துக்கு போதும்னு தோனுச்சு. மீதி நட்சத்திரத்தை என்ன பண்றதுன்னு தெரியாம பையை அப்படியே உதறுச்சாம். நட்சத்திரம் அப்படியே ஒவ்வொரு திசைக்கு போய் உக்காந்துகிச்சாம். நீங்க இரவில பார்க்கும் நட்சத்திரம் இப்படி தான் வானத்துக்கு போச்சு, வழியில விழுந்த அந்த வெள்ளை பந்து தான் நிலா. சூரியனும் இப்படித்தான் பிரகாசமாச்சு.

உலக மக்கள் எல்லாம் அங்கிக்கு நன்றி சொன்னாங்களாம். அதுக்கு அப்புறம் அங்கி சூரியனை விட்டு வெளிய வருவதே இல்லையாம்.



No comments:

Post a Comment