Friday, August 28, 2015

என் பேரு என்ன?


ரொம்ப காலத்துக்கு முன்னாடி. ரொம்ப காலம்னா ரொம்ப ரொம்ப காலத்து முன்னாடி. எவ்வளவு முன்னாடின்னா யாருக்குமே பேரே வெக்காத காலத்துக்கு முன்னாடி. எந்த மிருகத்துக்கும், பறவைக்கும், பூச்சிகளுக்கு, மரங்களுக்கும் பழங்களுக்கும், எந்த விலங்கிற்கும் பெயரே வெக்கல. எல்லோரும் எப்படி பேசிக்கிட்டு இருப்பாங்க பாருங்க. நீள்கழுத்து மிருகமே, கருப்பு பறவையே, வெள்ளை பறவையே, வண்ண வண்ண நிறம் கொண்ட பூச்சியே, இப்படித்தான் கூப்பிட்டுக்கிட்டாங்க. கொஞ்சம் இல்லை ரொம்பவே சிரமம் தான் இல்லை.

அப்ப தான் அந்த மலை மேல இருந்து அந்த பெரியவர் இறங்கி வந்தார். தலை முழுக்க வெள்ளை நிறம். பெரிய தாடி. சிரிச்ச முகம். அவர் முதுகில ஒரு பெரிய்ய்ய பையை சுமந்துகிட்டு வந்தார். அந்த பையில் என்ன இருந்துச்சு தெரியுமா? பெயர்கள். ஆமாம் பெயர்கள். மிருகங்களுக்கும், விலங்குகளுக்கும், செடி கொடி மரங்களுக்கும், பறவைகளுக்கு வைக்க வேண்டிய பெயர்கள். யானை, பூனை, சிங்கம், ரோஜா, புறா, காகம், கோழி, வாத்து, பாம்பு, பருந்து, நாய், ஓநாய், நரி, புலி என அந்த பை முழுக்க பெயர்கள் தான். அந்த பை எடுத்துகிட்டு வர ரொம்பவே சிரமப்பட்டார். எதிரில் ஒரு மிருகம் வந்தது. விநோதமாக இருந்த பெரியவரைப்பார்த்து ’என்ன விஷயம் பெரியவரே, பையில் என்ன இருக்கு?’ எனக் கேட்டது.

‘அதுவா இந்த உலகத்தில இருக்கிற எல்லாருக்கும் பெயர்கள் இந்த பையில் இருக்கு’ என்றார்.

நீண்ட தும்பிக்கை வைத்திருந்த அந்த மிருகம் எனக்கு ஒரு பெயரை முதலில் தாங்க என்றது. கையை பையிற்குள் விட்டு ஒரு பெயரை எடுத்தார். ‘யானை’ என இருந்து. ஆஹா எனக்கு இந்த பெயர் ரொம்ப பிடிச்சிருக்கு பெரியவரே என சந்தோஷத்தில குதிச்சது. ‘இனி எல்லாரும் என்னை யானைன்னு கூப்பிடுங்க’ன்னு சொல்லிகிட்டே ஓடியது. இந்த சத்தத்தை கேட்ட மற்ற காட்டு மிருகங்கள் எல்லாம் அந்த தாத்தாவிடம் ஓடி வந்தன. எங்களுக்கும் பெயர் தாங்க எங்களுக்கு பெயர் தாங்கன்னு கேட்டாங்க.

அந்த நெரிசலில் இருந்து பெரியவரை காப்பாற்றி ஒரு சின்ன குன்றில் மீது நிற்க வைத்தது ஒரு மிருகம். “அமைதி அமைதி எல்லோரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா வாங்க, பெரியவர் நிறைய பெயர்கள் வெச்சிருக்கார். பொறுமையா வாங்க”ன்னு தலைவன்போல செயல்பட்டது. அதை கேட்ட காட்டு மிருகங்களும் விலங்குகளும் சரியென ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா வந்தாங்க. அது நீண்ட வரிசையா இருந்து. காட்டினுடைய எல்லை வரை நீளமாக இருந்தது. அவங்களுக்கு வந்த பெயர்களை பார்த்து சந்தோஷம் அடைந்தனர். நீளமனா கழுத்தை உடைய மிருகத்திற்கு ஒட்டகச்சிவிங்கி என பெயர் வந்தது, குட்டியா வெள்ளையா இருந்த விலங்கிற்கு முயல் என பெயர் வந்தது. மீசை வெச்ச அந்த விலங்கிற்கு பூணை என பெயர் வந்தது. ‘ஹைய்யா என் பேரு நரி’ என ஓடியது நரி. இப்படி எல்லா மிருகத்துக்கும் விலங்கிற்கும் பெயர் கிடைச்சது.

சரி வரிசை முடிஞ்சதுன்னு பார்த்தா,அதுக்குள்ள பார்த்தா எல்லா பறவைகளும் வந்துடுச்சு. பறவைகள் எல்லாம் வரிசையில் நின்றது. பறவைக்கு எல்லாம் பையில் இருந்து பெயர் கிடைச்சது. டக்ன்னு பார்த்தா எல்லா செடி, மரங்கள் எல்லாம் வரிசையா நின்னுகிட்டு இருந்துச்சு. பெயர்களை கொடுத்து விட்டு அந்த தாத்தா எச்சரித்தார் “செடிகளே, மரங்களே இனி நீங்க அந்த அந்த இடத்திலேயே இருக்கனும், இப்படி எல்லாம் நகர்ந்து வரக்கூடாது” என்றார். சரி சரி என இலைகளை ஆட்டியபடி செடிகளும் மரங்களும் நகர்ந்தன.

கடைசியா இருந்தது அந்த தாத்தாவும் தலைவனும் தான். “நீ எனக்கு நிறையவே உதவி செய்துவிட்டாய். நீ தான் இனி இந்த காட்டுக்கு ராஜா. சரி சரி உனக்கான பெயரை எடுத்துக்கோ வா” என பையை நீட்டினார். உள்ளே ஒரே ஒரு பெயர் தான் இருந்தது. “சிங்கம்”. ”அருமையான பெயர். நன்றி பெரியவரே”. என்றது சிங்கம்.

”ஆமாம் பெரியவரே, உங்க பெயர் என்ன? “ எனக்கேட்டது சிங்கம். அப்போது தான் அந்த பெரியவருக்கும் புரிந்தது தனக்கு இன்னும் பெயரே இல்லை என்று. பையில் இருந்து பெயர் எடுக்கலாம் என கைவிட்டால் பைக்குள் பெயரே இல்லை. ஆமாம் சிங்கம் தான் கடைசியாக உள்ளே இருந்த பெயர். ஒரு நிமிடம் சிங்கத்தை உற்றுப்பார்த்தார். எங்கே தன்னுடைய பெயரை பறித்துக்கொள்ளப்போகிறார் என பயந்து விட்டது ஓட்டம். அடுத்த நொடி சிங்கம் அங்கு இல்லை. காட்டில் இருந்தே காணாமல் போய்விட்டது.

சோர்ந்து உட்கார்ந்த பெரியவர் அருகே ஒரு குட்டி மான் வந்தது. “என்னாச்சு” எனக் கேட்டு முழு கதையையும் கேட்டது. அட உங்களுக்கு பெயர் வேணுமா. நான் வைக்கிறேன். ’குயாங்கிடியாங்கி’. ‘ஹைய்யா என் பேரு குயாங்கிடியாங்கி என் பேரு குயாங்கிடியாங்கி’ன்னு அந்த மலை மேல ஓடிப்போனாரு அந்த பெரியவர். அதுக்கு அப்புறம் அவரை யாருமே பார்க்கலையாம்.

No comments:

Post a Comment