Friday, August 28, 2015

எங்கே சென்றார்கள்?


மணி, வேலன் மற்றும் சந்தியா என்ற மூன்று மான்களும் உற்ற நண்பர்கள். ஒரு நாள் மாலை விளையாடிவிட்டு வீடு திரும்பினார்கள். அப்போது மணியின் அப்பா அவர்களிடம் மறுநாள் பக்கத்து ஊருக்கு போகப்போகும் திட்டத்தை கூறினார். அந்த திட்டம் மூவருக்கும் பிடித்தமானதாக இருந்தது. வெகுநாட்களாக இவர்கள் மூவரும் ஏங்கிய அந்த நாள் வந்துவிட்டது. தங்களுடைய பள்ளிப் பாடத்தில் அந்த இடத்தை பற்றி படித்ததில் இருந்தே அங்கே போகவேண்டும் என்று ஆவலாக இருந்தனர்.

காலையில் பழங்களை சாப்பிட்டுவிட்டு மணியின் தந்தையும் மூன்று மான்களும் அவர்கள் போகப்போகும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர். மெல்லமாக ஓடவும் செய்தனர். அப்பா எப்படி சென்றாரோ அவரின் வழியினை பின்பற்றினார்கள். வழியில் கரடியார் வைத்திருந்த பழரச கடையில் எல்லோரும் பழரசம் அருந்தினர். பின்னர் சுமார் 1 மணி நேரத்தில் அந்த இடத்தினை அடைந்தனர். அது என்ன இடம் தெரியுமா? அது “மயிலூர் மனிதகாட்சி சாலை”.

ஆமாம் இங்கே மனிதர்களை காட்சிக்காக வைத்திருக்கின்றார்கள். குளுகுளு ஏ.சி அறையில் மனிதர்கள் இருப்பார்கள். இது இந்தியக்குடும்பம், இது அமெரிக்க குடும்பம், இது ஆப்ரிக்க குடும்பம், இது ஜெர்மனியக்குடும்பம், இது ஜப்பானிய குடும்பம் என ஒவ்வொரு அறையிலும் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த அந்த நாட்டின் பாரம்பரிய உடையில் அவர்கள் அந்த அறையில் இருப்பார்கள். அறையை விட்டு அவர்கள் வெளியே வர முடியாது. நேரத்திற்கு உணவு வழக்கப்படும். நண்பர்கள் மூவரும் ஒவ்வொரு அறையையும் வெளியில் இருந்து பார்வையிட்டனர். வேலன் மிகவும் பொறுப்பாக அங்கே இருந்த அந்த மனிதர்கள் பற்றி இருந்த குறிப்புகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு வந்தது. சந்தியா அந்த இந்திய பெண்ணை காட்டி “அந்த பெண் ரொம்ப அழகா இருக்காங்க இல்ல மணி” என்றது. மணி எதுவும் பேசவில்லை. அதற்கு இப்படி மனிதர்களை அடைத்து வைத்திருப்பது கவலையாக இருந்தது. மணியின் தந்தையிடம் ஏன் இப்படி அடைத்து வைக்க வேண்டும் அப்பா? எனக்கேட்டது.

“மனிதர்கள் இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உலகில் இருக்கின்றார்கள். பல வருடங்கள் முன்னர் வரையில் பல நூறு கோடி மனிதர்கள் இருந்தார்கள். அடுத்த தலைமுறை பற்றி கவலைப்படாமல் மரங்களை வெட்டினார்கள், இயற்கையை சீரழித்தார்கள். ஒரு கட்டத்தில் சுத்தமான தண்ணீர் கிடைக்கவில்லை, சுத்தமான காற்று கிடைக்கவில்லை, உணவும் கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் இறக்க ஆரம்பித்தார்கள். சிலர் பக்கத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்திற்கு சென்றுவிட்டார்கள். மீதம் இருக்கும் இவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை”

மூவர் தலையாட்டியபடி அந்த சோகக்கதையை கேட்டார்கள். மனிதகாட்சி சாலைக்கு போகின்றோம் என்றதும் கரடியார் பெரிய பாட்டிலில் பழரசத்தை தயார் செய்து கொடுத்தார். அங்கிருக்கும் மனிதர்களுக்கு கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். பழரசத்தை பரிசோதித்த காவலாளி குரங்கார் ஒவ்வொரு அறைக்கும் ஒரு டம்பள்ர் பழரசத்தை பகிர்ந்தளித்தார்.

ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது அங்கே குரங்கு காவலாளி மூன்று மரக்கன்றுகளை கொண்டு வந்தார். “இங்கே வரும் சிறுவர்களுக்கு ஒரு மரக்கன்று கொடுக்கப்படும், அதனை அவர்கள் ஊரில் பத்திரமாக வளர்க்க வேண்டும்” என்றார். பின்னாடி இருந்த தோட்டத்தை காட்டி “அங்கே நிறைய செடிகளும் மரங்களும் உள்ளன, இன்று நீங்கள் அதற்கு தண்ணீர் விடமுடியுமா?” என உதவிகேட்டது. உடனே மூவரும் கிளம்பிச்சென்று உற்சாகமாக எல்லா செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் விட்டனர். அந்த தோட்டத்தில் அவ்வளவு பூச்செடிகள் இருந்தன. அவர்களுக்கு அந்த இடத்தை விட்டுவரவே மனமில்லை.

மதிய உணவினை முடித்துவிட்டு மீதம் இருந்த அறைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தர்கள். மணியின் தந்தை அங்கே வந்து “சீக்கிரம் கிளம்பனும் பிள்ளைகளா, இருட்டுவதற்குள் ஊருக்கு போகணும்” என்றார். அனேகமாக எல்லா மனிதர்களையும் பார்த்துவிட்டார்கள். கடைசி அறையில் சிகப்பு சட்டை சிகப்பு கால்சட்டை அணிந்திருந்த சிறுவன் இவர்களை கையசைத்து அழைத்தான். மூவரும் மெல்ல அருகே சென்றார்கள். காவலாளி மூலம் மூவருக்கும் ஒரு பரிசினை கொடுத்தான். மூன்று கோலிக்குண்டுகள். “உங்க மூனு பேருகிட்டையும் ஏதோ சொல்லனுமாம் அந்த ஓட்டை அருகே காது வைத்து கேளுங்க” என்றது காவலாளி குரங்கு.

”நண்பர்களே, இந்த உலகத்தை நாங்க பாதுகாக்க தவறிட்டோம். இனி நீங்க தான் இதை பத்திரமா பாத்துக்கனும். செய்வீங்களா?” எனக்கேட்டான் அவன். அவன் கண்களில் நீர் இருந்தது.

மூவர் தலையாட்டியபடியே தங்கள் ஊர் நோக்கி நடந்தார்கள். இனி என்னென்ன செய்ய வேண்டும் என பேசிக்கொண்டே ஊர் சேர்ந்தார்கள்.

No comments:

Post a Comment