குள்ள மனிதனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம் அவனே தான். கட்டைவிரல் அளவிற்கு மட்டுமே வளர்ந்த அவனை பற்றிய கதை தான் இது. குள்ளனுக்கு நெட்டையளுக்கும் திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றது. குள்ளன் எந்த வேலையும் செய்யவில்லை. அவன் மனைவி அவனை திட்டிக்கொண்டே இருந்தாள். அவள் வாழ்கை பாழாய் போனது என புலம்பினாள். காசு சம்பாதிக்காமல் வீட்டிற்கே வராதீர்கள் என மனைவி விரட்டிவிட்டாள்.
மனம் உடைந்த குள்ளன் தன் நிலத்திற்கு சென்று நெல்களை உலர்த்தினான். நெல்களை உலர்த்திவிட்டு அருகே இருக்கும் கட்டிலில் உறங்க சென்றான். மதியம் தூங்கியவன் மறுநாள் காலை தான் எழுந்தான். எழுந்தவனுக்கு அதிர்ச்சி. உலர்த்திய நெல்லில் பாதி நெல் நாசமாகி இருந்தது, மீதி காணாமல் போயிருந்தது. இரவு இந்திரலோகத்தில் இருந்து ஒரு வெள்ளை யானை வந்து நெல்களை நாசம் செய்தது. இது குள்ளனுக்கு தெரியவில்லை. யானையின் கால் தடங்களை பார்த்துவிட்டு ஏதோ உரல் தான் இந்த நாசவேலையை செய்தது என்று எண்ணி ஊரில் இருந்த அனைத்து உரல்களையும் பெரிய கயிற்றால் கட்டிப்போட்டான்.
மறுநாளும் இதே போல நடந்தது. குள்ளன் குழம்பிவிட்டான். உரல்களைத் தான் கட்டி போட்டிருக்கோமே, யார் இந்த வேலையைச் செய்வது எனத் தீவிரமாக யோசித்து யோசித்து இரவு மீண்டும் வந்துவிட்டது. சரி இரவு தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என தீர்மானித்து விழித்து இருந்தான். அதிசயம். திடீரென வெளிச்சம். வானில் இருந்து பெரிய வெள்ளை யானை தரை இறங்கியது. யானையின் கழுத்தின் தங்க ஆபரணங்கள். அதன் மீது பளபளக்கும் போர்வை. நீண்ட தந்தம். ஒரு நிமிடம் அசையாமல் ஆச்சரியத்தில் நின்றான் குள்ளன். சமாளித்துக்கொண்டு யானையின் அருகே சென்றான். யானைக்கு தெரியாமல் அதன் வாலை பிடித்துக்கொண்டான். யானை நெல்களை சாப்பிட்டு வானில் பறந்தது. குள்ளனும் அதனுடன் பறந்து சென்றான்.
இந்திரலோகத்திற்கு சென்ற வெள்ளை யானை தன் இருப்பிடத்திற்கு சென்றது.குள்ளன் இறங்கி சுற்றி பார்த்தான். பெரிய பெரிய அறைகள். ஒவ்வொரு அறையிலும் தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள் , ஆபரணங்கள் என ஜொலித்தது. குட்டியாக இருந்ததால் நிறைய இடங்களுக்கு போகமுடியவில்லை. தன்னால் முடிந்த அளவு தங்கத்தை எடுத்துக்கொண்டான். சில வைரக்கற்களை எடுத்துக்கொண்டான். தான் வந்த யானையின் அறையினை தேடினான். அங்கே நிறைய வெள்ளையானைகள் இருந்தன. மறுநாள் வரை அவன் வந்த யானையின் பின்னாலே ஒளிந்துகொண்டான். மறுநாள் இரவும் யானை பூமிக்கு புறப்பட்டது. தன் நிலத்திற்கு வந்தபோது இறங்கிக்கொண்டான். இப்படியே அடிக்கடி நிறைய தங்கம் எடுத்துவந்தான்.
நெட்டையள் மிகவும் சந்தோஷப்பட்டாள். கணவன் கை நிறைய தங்கம் கொண்டு வந்த ரகசியத்தை குள்ளனிடம் கேட்டள். நீண்டநாட்களுக்கு பிறகு அவன் அந்த ரகசியத்தை கூறினான். மனிதர்களுக்கே உண்டான பேராசை நெட்டையளுக்கு பற்றிக்கொண்டது. அடுத்த நாள் இரவு தானும் வருவதாகவும், அவள் வந்தாள் நிறைய தங்கம், எடுத்துவரலாம். நிறைய ஆபரண போட்டு வரலாம். குள்ளன் நூறுமுறை சென்று வருவதும் அவள் ஒரு முறை வருவதும் ஒன்று என்றாள்.ம்ம் சரி சரி என்றான் குள்ளன்.
மறுநாள் நெல் காயவைக்கப்பட்டது. வெள்ளை யானை வானிலிருந்து பறந்துவந்தது. நெட்டையள் வாயை பிளந்தாள். அதன் அழகை கண்டு. குள்ளனின் யோசனைப்படி யானை பறக்கும் போது குள்ளன் அதன் வாலினை பிடித்துக்கொள்வான், நெட்டையள் குள்ளனின் காலினை பிடித்துக்கொள்வாள். இந்திரலோகம் சென்றதும் இருவரும் பெரிய அறைகளுக்கு சென்று தங்கம் எடுத்து வரவேண்டும்.
அதன்படியே யானை பறக்கும் சமயம் குள்ளன் அதன் வாலை பற்றிக்கொள்ள குள்ளனின் காலினை நெட்டையள் பற்றிக்கொள்ள மூவரும் வானத்தில் பறந்தனர். பறந்து கொண்டு இருக்கும் போதே”ஏங்க இன்னும் எவ்வளவு தூரம்..? ” என்றாள். “அரை மணி நேரத்தில் போய்விடலாம்..” என்றான். அமைதியாக இருக்காமல் ” ஏங்க அங்க என்ன என்ன இருக்குங்க ” ” எத்தனைமுறை சொல்வது, தங்கம், வைரம், வைடூர்யம், வெள்ளி எல்லாம்…” என்றான்.
“என்னங்க அங்க எவ்வளவு தங்கமுங்க இருக்கும்..”
“அடி செல்லமே. இவ்வளவு தங்கம் இருக்கும்..” என கைகளை அகல விரித்தான் குள்ளன். பறந்து கொண்டு இருந்தது ஒன்று மட்டும் தான். விழுந்துகொண்டிருந்தது குள்ளனும் அவன் மனைவியும். தொப்பென அந்த யானை போட்டுச்சென்ற சாணத்தில் விழுந்து உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு யானை திரும்ப வரவே இல்லை. இரவெல்லாம் காத்திருந்து காத்திருந்து தூக்கம் போனது தான் மிச்சம். அதுவரை கிடைத்த தங்கம் வைத்து புதிய தொழில் தொடங்க யோசித்து வருகின்றான் குள்ளன். நீங்களும் உங்க யோசனையை சொல்லுங்க குள்ளனுக்கு.
No comments:
Post a Comment