Friday, August 28, 2015

டாலும் ழீயும்


டர்ர்ர்ர்ர்…சத்தம் போட்டுட்டே போறாங்க டாலும் ழீயும்.முதல்ல டால் யாரு ழீ யாருன்னு தெரியுமில்லையா? ஓ தெரியாதா? ’டால்’ ஒரு அழகிய டால்பின். ’ழீ’ ஒரு தங்க மீன். இரண்டும் நண்பர்கள். இருவரும் ஒரே வழியில் தான் பள்ளிக்கு போக வேண்டும். இரண்டு பேரும் வேறு வேறு பள்ளியில் தான் படிக்கின்றார்கள். ஆனால் ஒரே வழி தான். அப்படி பள்ளிக்கு செல்லும் போது தான் நண்பர்களாக மாறினார்கள். காலையும் மாலையும் ஒன்றாக பள்ளிக்கு சென்று ஒன்றாக திரும்பி வருவார்கள். விடுமுறை நாட்களில் மட்டும் வெகு தூரம் விளையாட செல்வார்கள். ரொம்ப தூரம் போகும் போது எல்லாம் ழீ, டாலுக்கு மேல் உட்கார்ந்து கொள்ளும். ழீயால வேகமா நீந்த முடியாது இல்லையா?

அப்படி தான் ஒரு நாள் இருவரும் வெகு தூரம் சென்றுவிட்டார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். “குழந்தைகளே கடற்கரை பக்கம் போகவேண்டாம் அங்கே மனிதர்கள் இருப்பார்கள், அவர்கள் உங்களை பிடித்துக்கொள்வார்கள்”. டாலும் ழீயும் வசித்து வந்த ஊரில் இருந்து மீனூர், சுராபுரம், சிப்பிப்பாடி என எல்லா ஊர்களை தாண்டி கடற்கரை அருகில் வந்துவிட்டார்கள்.மற்ற இடத்தைவிட இந்த இடத்தில் தண்ணீர் வித்யாசமான நிறத்தில் இருந்தது. நிறைய மீன்கள் ழீயின் நிறத்தை பார்த்து "எந்த ஊரில் இருந்து வரீங்க?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ழீக்கு பெருமையாக போய்விட்டது. வழியில் முதுமையான ஒரு ஆக்டோபஸை சந்தித்தார்கள். வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து யாருமே இல்லாத இடத்திற்கு நீந்தி சென்றார்கள்.

டால் மேல் துவாரத்தால் தண்ணீர் விடுவது ழீக்கு ரொம்ப பிடிக்கும். டால்பின்கள் அழகாக தண்ணீரை மேல்வழியாக விடும். அப்படி தண்ணீர் விடச்சொல்லி ழீ ரசிக்கும். சில சமயம் அந்த தண்ணீர் மீது நீந்தி வெளி உலகத்தை பார்க்கும். அப்படி விளையாடிக்கொண்டிருந்த போது திடீர் என்று ஒரு வலை ழீ மீது விழுந்தது. பக்கத்தில் ஒரு மோட்டர் படகு இருந்தது. அதில் இருந்த சின்ன பையன் ஒருவன் தான் இந்த வலை வீசி இருக்கின்றான். அப்பா பெரிய வலை மற்றொரு பக்கம் வீசிக்கொண்டு இருந்தார். நம்ம ‘ழீ’ அந்த சின்ன பையனின் சின்ன வலையில் மாட்டிக்கொண்டது. தங்க மீனை பார்த்ததும் அதிசயித்தான். ஆனந்தம் அடைந்தான்.

ழீ வலையில் மாட்டிக்கொண்டாதும் டாலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தாத்தா அடிக்கடி சொல்வார்கள், வெகுதூரம் தனியே செல்லவேண்டாம், மனிதர்கள் பிடித்துக்கொள்வார்கள் என்று, அதெல்லாம் இப்போது தான் நினைவுக்கு வந்தது. எப்படி தன் நண்பனை காப்பாற்றுவது என யோசித்தது. சரி அந்த பையனிடம் கேட்கலாம் என்று தண்ணீருக்கு மேலே வந்து

"நண்பனே!!!" என்றது டால்

டால்பின்னை முதன்முதலாக பார்த்த பையன் முதலில் பயந்தான். பின்னர் அது டால்பின் என்று தெரிந்து கொண்டான். எப்பொழுதோ புத்தகத்தில் பார்த்த நியாபகம்.

"என்ன டால்பின்?" என்று கேட்டான்.

"என் பெயர் டால். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என் நண்பன் ழீயை நீ விடுவிக்க வேண்டும்.."

"ழீ யா?"

"ஆமாம். உன் வலையில் மாட்டி இருக்கே தங்க மீன், அதனுடைய பெயர் தான் ழீ"

"ஓகோ..முடியாது..தர முடியாது.."

என்ன இந்த பையன் இப்படி சொல்லிவிட்டான். இனி ழீயை பார்க்கவே முடியாதே என்று டாலுக்கு வருத்தமாக போய்விட்டது. "சரி நான் உன் நண்பனை விட்டுவிடுகின்றேன், ஆனா பதிலுக்கு நீ என்ன தருவாய்?"

டால் யோசித்தது. என்ன தருவது? ழீக்கு இணையா எதுவேண்டுமானாலும் தரலாம். உடனே தன் கை பையை துழாவியது. வாலை சீவிக்கொள்ள பயன்படுத்தும் சீப்பு இருந்தது, சில விளையாட்டு பொருட்கள் இருந்தன, ஒரு அழகிய விலை உயர்ந்த முத்து இருந்தது, ஒரு வழவழப்பான கூழாங்கல்லும் இருந்தது.

முத்தையும், கூழாங்கல்லையும் சிறுவனிடம் நீட்டி

"இது தான் இருக்கு…" சிறுவன் அந்த கூழாங்கல்லை எடுத்துக்கொண்டு.."ஐ..ரொம்ப நல்லா இருக்கு…" என்றான்.
"ழீயை விட்டுவிடேன்…" என்று டால் கொஞ்சியது…
”இதோ விட்டுவிடுகிறேன் டால். என் நினைவா இந்த கண்ணாடி ஸ்கேலை வெச்சிக்கோங்க. என்றான். ழீயை வலையில் இருந்து விடுவித்து "சந்தோஷமா போ ழீ…உனக்கு சிறந்த நண்பன் கிடைச்சிருக்கான். உங்க நட்பை பத்தி என் நண்பர்களிடம் சொல்வேன்…." என்று ழீக்கு முத்தம் கொடுத்து கடலில் விட்டான். கண்ணாடி ஸ்கேலையும் வீசினான்.

விட்டால் போதும் என்று டால் மீது ஏறி ழீ பறந்தது. ச்ச்ச..எப்படி பறக்க முடியும்? நீந்தி சென்றது. பள்ளியில் எல்லோரும் அந்த கண்ணாடி ஸ்கேல் எங்க கெடைச்சதுப்பா என கேட்டார்கள். இருவரும் சொல்லவே இல்லையே !

No comments:

Post a Comment