Wednesday, September 30, 2015

குழந்தைகளை கடிதம் எழுத வைக்க ஒரு சிறு முயற்சி


கடிதப்போக்குவரத்து கிட்டத்தட்ட் 0%க்கு சென்றுவிட்டது. ஆனால் ஒரு கடிதம் கொடுக்கும் சுகத்தை அனுபவித்த தலைமுறையினர் நாம். அந்த சுவையை அடுத்த தலைமுறையினருக்கு சிறிதளவேனும் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை கடிதம் எழுதி கிடைக்கப்பெற்றவர் பதில் அளிக்காமல் போய்விட்டால் குழந்தை வருத்தம் கொள்ளுமே என கவலை வேண்டாம். ஏனெனில் உங்கள் குழந்தை எழுதப்போகும் கடிதத்திற்கு பதில் கடிதம் போடப்போவது அடியேன் தான். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். கேட்ட கதை குறித்தோ, பள்ளி அனுபவம் குறித்தொ, விடுமுறை குறித்தோ, தன் நண்பர்கள் குறித்தோ, எதைப்பற்றி வேண்டுமானாலும் அனுப்பச்சொல்லுங்கள். 100% அதற்கு கடிதம் மூலம் பதில் கொடுப்பேன். ஒரு கடிதம் அவர்கள் பெயருக்கு வந்தால் அது கொடுக்கும் சந்தோஷம் அலாதியானது. இந்த செய்தியை பார்ப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கு கடிதங்களை எழுதுங்கள். இந்த முயற்சியின் நோக்கம் கடிதம் எழுதுவதை அதிகப்படுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு அந்த சுவையை கொடுப்பதும் தான்.

கடிதம் தமிழில் இருந்தால் நலம் . ஓவியங்களுடனும் வண்ணங்கள் கூடிய மழலைகளின் கடிதங்களை கையில் ஏந்த ஆவலுடன் காத்திருக்கின்றேன். கடிதம் எழுதியவுடன் ஒரு பிங் செய்யவும் வீட்டு முகவரியை அனுப்பி வைக்கிறேன். சர்வதேச கடிதங்களுக்கும் பதில் உண்டு.

கடைபிடிக்க வேண்டிய Whatsapp நாகரீகங்கள்


வாட்ஸப் ஒரு நெருக்கமான மூடப்பட்ட சமூக வலைத்தளம். அதனைப் பயன்படுத்தும்போது சில அடிப்படை நாகரீகங்களை கடைப்பிடிக்கலாம்.

1. வீடியோக்களை அனுப்பும்போது ஒரு இரண்டு வரியாவது அந்த வீடியோவைப்பற்றி பகிருங்கள். இந்த வீடியோ ஏன் பிடித்திருக்கின்றது, ஏன் பார்க்கவேண்டும், அதில் எதனை ரசித்தீர்கள் என விவரிப்பது நல்லது. சுமார் 10-15 MBக்கள் வரையிலான பெரிய வீடியோக்களுக்கு கூட ஒரு வரி விவரிப்பு இல்லை. உங்களுக்கு வசதியான இணைப்பு இருக்கலாம் ஆனால் எதிர்முனையில் இருப்பவரின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும். அதுவும் குழுக்களுக்கு அனுப்பும்போது அவசியம் இந்த நெறியை பயன்படுத்துதல் அவசியம்

2. ஏதாவது செய்தியை அனுப்புவதற்கு முன்னால் ஒரே ஒரு நொடி இதனை அனுப்பலாமா என யோசித்துவிட்டு அனுப்பலாம். பெரும்பாலான Forwardகள் இந்த ஒரு நொடி யோசனையில் குறையும். இதனால் பல பெயருடைய நேரத்தையும் சேமிக்கலாம்.

3.பதட்டம் ஏற்படுத்தும் Forwardகளை ஒருமுறை இணையத்தில் சரிபார்த்துவிட்டு அனுப்பலாம். நூற்றுக்கு நூற்று ஐம்பது சதவிகிதம் தவறான தகவல் கொண்ட Forwardகளே வருகின்றன. இந்த பெரும் வெள்ளத்தில் நல்ல தகவல்கள் தாங்கிவரும் செய்திகள் அடிபட்டுப்போகின்றது.

4. தொடர்பில் இருக்கும் ஒரே காரணத்திற்காக பல சமயங்களில் பல Forwardகள் செய்யப்படுகின்றன. அதனை தவிர்த்துவிடலாம்.

5. இந்த மெசேஜை பார்வர்ட் செய்தால் இன்னாருக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என்ற செய்திகளில் சுத்தமாக நம்பகத்தன்மை இல்லை. வாட்ஸப் அம்மாதிரியான எந்த வேலையையும் செய்யாது.

தரமான இணைய இணைப்பு இருப்பதாலேயே அதனை ஏகபோகத்திற்கு பயனபடுத்தலாம் என்பது தவறான மனப்போக்கு. வாட்ஸப் போன்ற நெருக்கமான இணைப்பினை சரியாக பயன்படுத்து முக்கியம்.

பியானாவின் பிறந்தநாள்


பியானாவிற்கு அன்று பிறந்தநாள். தன்னுடைய வீட்டில் அனைவருக்கும் விருந்து வைத்திருந்தாள். பியானா ஒரு மயில். அந்தப்பகுதி காட்டில் இருந்த அனைவரும் வருவதாக சொல்லி இருந்தார்கள். எல்லோரும் அருகருகே தான் வசித்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு. பியானாவின் வீடு இளமஞ்சள் நிறத்தில் இருந்தது. இரண்டு பெரிய குச்சிகளுக்கு மேலே அந்த வீடு இருந்தது. பறவைகள் எளிதாக பறந்து வந்துவிட்டன. ஆனால் சில விலங்குகளால் ஏற முடியவில்லை. யானையார் ஏற முடியாததால் முயல் ஒன்றிடம் தன் பரிசினை கொடுத்து அனுப்பினார். சிங்கம் பக்கத்து ஊரில் ஒரு பஞ்சாயத்திற்கு சென்றதால் வரமுடியவில்லை.

விருந்தினர் அனைவருக்கும் சூடான சூப் தயாராக இருந்தது. சோள சூப். சிலரால் சூடாக குடிக்க முடியவில்லை, அதனால் கொஞ்சம் ஆறிய பிறகு குடிக்கலாம் என்று காத்திருந்தனர். பியானாவின் முகத்தில் சோகம் தெரிந்தது. குக்கூ ஒன்று என்ன சோகம் என விசாரித்தது. தன்னுடைய நெருக்கிய நண்பர் விசாகன் இன்னும் வராதது தான் வருத்தம் என கூறியது பியானா. விசாகன் ஒரு பட்டாம்பூச்சி. மழை நாள் ஒன்றில் இருவரும் மரத்தின் கீழே சந்தித்தனர். பியானாவிற்கு பட்டாம்பூச்சியின் வண்ணம் பிடித்திருந்தது. விசாகனுக்கும் பியானாவின் இறகு பிடித்திருந்தது. விசாகனுக்கு தன் இறகு ஒன்றினை பியானா கொடுத்தாள். அதனை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச்சென்று வைத்திருப்பதாக விசாகன் ஒரு நாள் கூறினான்.

வீட்டின் கீழே இருந்து டிங்டாங் என மணி அடித்தது. விசாகன் தான் விருந்திற்கு வந்திருக்கின்றான் என பியானா கீழே ஓடினாள். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. விசாகன் வரவில்லை. அங்கே வந்திருந்தது பக்கத்து ஊரில் கேக் கடை வைத்திருக்கும் கரடி ஒன்று. “உங்கள் பிறந்தநாளுக்காக இந்த கேக்கினை கொடுக்கும்படி விசாகன் என்ற வண்ணத்துப்பூச்சி பணம் கொடுத்து இருந்தது. இங்கே யார் பியானா” என்றது. நான் தான் பியானா என்றதும் பிறந்தநாள் வாழ்த்துகள் என சொல்லிவிட்டு கைக்குலுக்கி விடைபெற்றது கரடி.

கேக்கினை எடுத்து வீட்டிற்குள் நுழைந்தது. எல்லோரும் கைத்தட்டினார்கள். ஆஹா கேக் வந்துவிட்டது. விருந்து களைகட்டுகின்றது என்றனர். ஆனாலும் பியானாவின் முகத்தில் இன்னும் சிரிப்பு வரவே இல்லை. குக்கூ, தானே விசானனின் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என பார்த்துவிட்டு வருவதாக கிளம்பியது. விசாகனின் வீடு அதிக தூரம் இல்லை. அந்த வீட்டில் இருபது வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. குக்கூ சென்ற போது வீட்டில் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். விசாகன் எங்கே என விசாரித்தது குக்கூ. காலையிலேயே வெளியே கிளம்பிவிட்டது, யாருக்கோ பிறந்தநாளாம் அதனால் விருந்து இருக்கின்றது அதனால் இரவு உணவு கூட வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்பியது என்றனர் அறைவாசிகள்.

குக்கூவிற்கு பதட்டமாகிவிட்டது. விருந்திற்கு வருவதாக சொல்லிவிட்டு எங்கே சென்றது விசாகன். பியானா வீட்டிற்கு பறந்தது. குக்கூவிடம் இருந்து செய்தி வந்தது கேக் வெட்டுவற்கு காத்திருந்தது பியானா. குக்கூவின் சோக முகத்தை பார்த்ததும் செய்தி புரிந்துவிட்டது. எங்கோ காணவில்லை. விசாகனுக்கு ஏதோ நடந்துவிட்டது. சரி விருந்திற்கு வந்திருப்பவர்கள் வருத்தப்படக்கூடாது, கேக்கை வெட்டுவோம் என எல்லாம் தயாரானார்கள்.

கடைசி நிமிடம் வரையில் வெளியே பார்த்தது பியானா. கேக்கில் கத்தி பட்டதும் டமால் என சத்தம். அது கேக் அல்ல. மேலே க்ரீம் தடவப்பட்ட பலூன். பலூன் வெடித்து உள்ளே இருந்து பதினைந்து வண்ணத்துப்பூச்சிகள் வெளியே வந்தது. “பிறந்தநாள் வாழ்த்துகள் பியானா..பிறந்தநாள் வாழ்த்துகள் பியானா” என அனைத்தும் ஒரே குரலில் பாடின. விருந்தினர்களும் சேர்ந்துகொண்டார்கள். உண்மையான கேக்கை கரடி மீண்டும் எடுத்து வந்திருக்கின்றது என தெரிவித்தது விசாகன். குக்கூ அதனை வாங்கி வந்து அனைவருக்கும் கொடுத்தது. பியானா மகிழ்ந்தாள். தன் தோழி பியானா மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த விசாகனுக்கும் அளவற்ற மகிழ்ச்சி.

(இந்த ஓவியத்தை வரைந்தவர் ப்ரவீன் துளசி. இந்த கதைக்காகவே பிரத்தியேகமாக வரைந்தார்)

இரவு நேரக்கதைகள் செய்யும் மாயமென்ன?


இரவு நேரக்கதைகளில் ஒன்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகத்திலிருந்து வாசித்து காட்டுவது அல்லது தானாக கதைகள் சொல்வது. இரண்டாவது குழந்தைகள் தானாக ஒவ்வொரு இரவும் வாசிப்பது. அந்த சமயம் பெற்றோர் உடன் இருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். இரவு நேரக்கதைகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லும்போது என்ன நேர்கின்றது?

1. குழந்தைகளுடன் நேரம் செலவழித்தல் ஒரு நாளின் ஒட்டுமொத்த இறுக்கத்தையும் போக்க வல்லது கதைகள். பெற்றோருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு நிறைய இறுக்கம் இருக்கும். சக குழந்தையுடன் சண்டை, நினைத்தது செய்யமுடியாமல் போவது, பெற்றோரிடம் திட்டு வாங்குவது, விளையாட்டு என நிறைய இறுக்கம் இருக்கலாம். இரவு தூங்குவதற்கு முன்னர் அதனை தகர்ப்பது என்னது சுவாரஸ்யமான விஷயம்? கதைகள் அதனைச் செய்யும்

2, புதியவை அறிமுகம் புதிய சொற்கள், புதிய உயிரினங்கள், புதிய செடிகள், புதிய மரங்கள், புதிய விலங்குகள், புதிய மனிதர்கள். ஆதிகாலத்தின் கற்பனை உலகம், யாருமற்ற புதிய உலகம் என பற்பல புதிய விஷயங்கள் அறிமுகமாகின்றன. வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல கதையின் ஊடாக பல்வேறு சத்தங்களும் அறிமுகமாகும். கதை சொல்லும்போது பெற்றோர்கள் கொஞ்சம் அதனை செய்யலாம். அது கதையினை சுவாரஸ்யமாக்குவதோடு அல்லாமல் அந்த சத்தமும் அவர்களுக்கு உள்ளே செல்லும்.

3. உரையாடலுக்கான சாத்தியங்கள் கதை சொல்லும் ஆரம்ப நாட்களில் உங்கள் குழந்தைகள் அதிகமாக கதையினை குறுக்கிடுவார்கள். கதையை குதறுவார்கள்/ கதாபாத்திரங்களை மாற்றுவார்கள், அவர்களுக்கு விருப்பமான பெயர்களை உள்ளே நுழைப்பார்கள். இது மிக இயல்பானது. கதையை சொல்ல முடியவில்லையே என வருத்தமே வேண்டாம். இது தான் கதை சொல்லலின் வெற்றி. அப்படி அவர்கள் குறுக்கிடும்போது பேச விடுங்கள். அவர்களின் உலகினை உள்வாங்க இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்துவிடப்போவதில்லை. மெல்ல மெல்ல கதை கேட்க ஆரம்பிப்பார்கள். கதை சொல்லும்போது அவர்களையும் கதைசொல்லலில் ஈடுபடுத்த வேண்டும், எங்கே விட்டேன், அந்த மான் பேரு என்ன சொன்னேன், அந்த காக்கா நிறம் என்ன ? அப்படி…

4, கேட்கும் திறன் இதைத்தான் நாமும் இழந்திருக்கின்றோம். பெரிய காதுகள் தேவைப்படுகின்றது. குழந்தை வளர்ப்பில் இது முக்கியமான ஒன்று. அதே போல குழந்தைகளுக்கு இந்த கேட்கும் திறனை வளர்த்தெடுப்பது அவசியம். அவர்களுடைய கவனை அலைபாய்ந்து கொண்டே இருக்கும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தவும் குவிய வைத்தால் தான் பின்நாட்களில் அவர்களின் வலுவான ஆளுமைக்கு வித்திடும். கதைகளை சொல்லச் சொல்ல அவர்களின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

5, கற்பனை வளம் கற்பனைத்திறன் வளர்க்கும் என சொன்னால் என் குழந்தை ஒன்னும் கதை எழுத தேவையில்லை, ஓவியம் வரையத்தேவையில்லை என பேச்சு அடிபடும். ஆனால் கற்பனைத்திறன் என்பது வெறும் கலைகளில் கவனம் செலுத்த அல்ல. அது வாழ்வின் அன்றாட தேவைகளில் உதவும். ஒரு அறையில் நான்கு சோபாக்களை போடவேண்டும் இடமும் வசதியாக இருக்க வேண்டும் அதனை திறம்பட நடைமுறைப்படுத்த கற்பனை வளம் வேண்டும். கதைகள் அவர்களுடைய கற்பனை உலகினை பெரியதாக்குகின்றன. கதை கேட்கும் போது சொல்லும் கதையை ஒரு வீடியோவாக மனதில் ஓட்டிப்பார்க்கின்றான். விடுபட்ட விஷயங்களை தன் கற்பனை உலகில் தானே நிரப்பி முழுமையாக பார்க்கின்றான். கதை கேட்பதிலும் வாசிப்பதிலும் தான் இது சாத்தியமாகும்.

கதை கேட்டலின் அடுத்த கட்டம் தானாக வாசித்தல். இதனை 7-8 வயது முதல் செய்யலாம். ஆரம்பத்தில் பெற்றோருடன் அமர்ந்து கூட்டாக வாசித்தலில் ஆரம்பிக்கலாம். இந்த பெரிய உலகினை வாசித்தல் மூலமே மேலும் கற்றுக்கொள்ளலாம் என கதைகள் சொல்லிக்கொடுத்துவிடும்.

இப்படி நன்மைகள் இருக்கே என கதை சொல்ல முற்பட வேண்டாம். கதையே ஒரு மகிழ்ச்சியான் அனுபவம். அதற்காகவேனும் கதைகள் சொல்லலாம், அது உங்கள் குழந்தையின் மொழி வளத்தை, கற்பனைத்திறனை, விலாசமானை பார்வையை, கேள்வி கேட்கும் பாங்கினை, காதுகொடுத்து கேட்கும் பண்பினை, வாழ்வின் மதிப்பீடுகளை, நெறிகளை வளர்த்தெடுக்கும் என்பதில் ஐயமே இல்லை. உங்கள் சிரமமானது சரியான கதைகளை சேகரிப்பதும் கொஞ்சம் மெனக்கெட்டு முன்னரே வாசித்துவிடுவதும், குழந்தைகளுடன் அமர்ந்து அந்த கதைகளை சொல்வது தான். நம் குழந்தைகளுக்காக இதனை செய்தே தீரவேண்டும். வளர்ப்பது மட்டுமல்ல நம் கடைமை அவர்களை உயர்த்துவதும் நம் கடமையே.

Friday, August 28, 2015

அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை


நிலாவிடன் ஏற்கனவே பேசியபடி அந்த இரவு மொட்டைமாடியில் இருந்து பட்டம் விட்டான். நிலா கொஞ்சம் கீழ் இறங்கிவந்து பட்டத்தின் ஒரு முனையை பிடித்துக்கொண்டது. நூலை பிடித்து மேலே ஏறி நிலாவில் அமர்ந்தான் சரண். நிலாவில் இருந்து பூமி சிறியதாக இருந்தது. கீழே இருந்த ஒவ்வொரு பகுதியாக காட்டியபடி வந்தது நிலா. நிலாவிற்கு சகல மொழிகளும் தெரியும் அதோ இமய மலை, அதோ சீனப்பெருஞ்சுவர், அதோ ஜப்பான், அதோ பசபிக் பெருங்கடல் என காட்டியபடியே வந்தது. முதுகில் மாட்டியிருந்த பள்ளிப்பையை கீழே இறக்கி வைத்தான். அதில் இருந்த கலர் பென்சில்களை எடுத்த “நான் சில நட்சத்திரங்களுக்கு வண்ணம் தீட்டப்போகிறேன்” என்றான். “வேண்டாம் சரண், பூமியில் இருக்கும் மக்கள் பயந்துவிடுவார்கள்” என்று சொன்னதை கேட்காமல் வண்ணம் தீட்டினான். திடீரென வானத்தில் வண்ண வண்ண நட்சத்திரங்களை பார்த்து நிஜமாகவே மக்கள் பயந்துவிட்டனர். ::உலகிற்கு ஆபத்து என கடவுளை வேண்ட ஆரம்பித்தனர். தன் பாட்டிலில் இருந்த தண்ணீரைக்கொண்டு வண்ணம் தீட்டிய நட்சத்திரங்களை கழுவினான். பூமியில் வண்ண மழை. கடல் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிட்டது.

கொஞ்ச நேரம் தூங்கலாம் என படுத்ததும் “ஐயோ காப்பாத்துங்க ஐயோ காப்பாத்துங்க” என அழுகை சத்தம். தீபாவளி ராக்கெட் பிடித்து ஒரு சீன சிறுவன் வானத்திற்கு வந்துவிட்டிருக்கான். ஒரு நட்சத்திரத்தில் அந்த ராக்கெட் குத்தி அந்த சிறுவன் தொங்கிக்கொண்டிருந்தான். “சரண், அந்த பையனை” காப்பாத்து என்றது நிலா



==============================

(அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை - ஜனவரி 2013ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருதும் பெற்றது. இது அதனுடைய ஷார்ட் வெர்ஷன்)

உருமாறும் நண்பன்


பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அபிநயா சோகமாக இருந்தாள். பள்ளியில் தன் தோழியுடன் சின்ன சண்டை. தன்னுடைய அறைக்கு வந்து அவளுடைய நண்பர்கள் எங்கே என தேடினாள். “மேகம்...மேகம்” என அழைத்தாள். பீரோவிற்கு பின்னால் இருந்து சொயிங் என உத்திரத்திற்கு சென்றன. சோகமாக இருந்ததை புரிந்து கொண்ட மேகங்கள் அவளுக்கு விளையாட்டு காட்டின. விதவிதமான உருவங்களாக மாறின. ஓடும் சிங்கம், குதிக்கும் யானை, பெரிய்ய்ய்ய மீன். அம்மா வந்து இரவு உணவினை ஊட்டிவிட்டு சென்றாள். “காலையில சீக்கிரம் எழுந்துக்கோ அபிநயா, ஓட்டப்பந்தையம் இருக்கு. காலையில 5 மணிக்கு எழுந்துக்கோ” எனச் சொல்லிவிட்டு போய்விட்டாள். தூங்க நேரமாச்சு நீங்க போங்க என்றாள். மேகங்கள் போகவேயில்லை. “சொல்றேன் இல்ல, போங்க” என்றாள். சன்னலை திறந்துவைத்தாள். மேகங்கள் வெளியே போவதற்கு பதிலாக தன்னுடைய மற்றொரு நண்பன் தென்றலை சன்னல் வழியே அழைத்தனர். தென்றல் வந்ததும் சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் அபிநயா. உறங்கும் முன்னர் காலையில 5 மணிக்கு எழுந்துக்கனும் 5 மணிக்கு எழுந்துக்கனும் என முனுமுனுத்தாள்.

சரியாக காலை ஐந்து மணிக்கு அபிநயா விழித்தாள். தானாக விழிக்கவில்லை யாரோ அவள் முகத்தில் தண்ணீர் அடித்ததால் விழித்தாள். “டொக் டொக் டொக்” என கதவு தட்டும் சத்தம். “அபிநயா, அங்க உன் அறையில் என்ன இடி சத்தம்?”. மேகங்கள் அறையில் காணவில்லை.



டங்


போட்டியாளர்கள் எல்லாம் வந்துவிட்டார்களா என ஒருங்கிணைப்பாளை சரி சார்த்துக்கொண்டிருந்தார். ஒருவர் மட்டும் வரவில்லை. அது குண்டு எரிதல் போட்டி. காட்டில் நடக்கும் விளையாட்டு தினத்திற்காக இந்த போட்டி நடைபெறுகின்றது. மிகிகா என்ற மனிதக்குரங்கு, டாம்பு என்ற கங்காரு, கிங்கு என்ற கருங்குரங்கு முக்கிய போட்டியாளார்கள். மூவரும் இந்தியாவின் மற்ற காடுகளில் நடக்கும் குண்டெறிதல் போட்டியில் பல பரிசுகளை வென்று இருக்கின்றர்கள். குண்டு எரிதல் போட்டியில் பெரிய குண்டு இருக்கும் அதனை யார் வெகுதூரம் வீசுகின்றார்களோ அவர்களே வெற்றிபெற்றவர். மிகிகா தான் போட்டியில் வெல்லும் என கூடி இருந்த பார்வையாளர்கள் பேசிக்கொண்டார்கள். அந்த ஒரே ஒரு போட்டியாளர் வரவில்லை என்று இன்னும் போட்டி ஆரம்பிக்கவில்லை. அந்த போட்டியாளர் விளையாட்டு திடலுக்கு நுழைந்தார். அவர் அணில். பெரிய அணில் கூட அல்ல, குட்டி அணில். அரங்கமே சிரித்தது இந்த அணிலால் குண்டை தூக்க கூட முடியாது இது போய் எப்படி போட்டியில் கலந்துகொள்ளும் என கிண்டல் அடித்தார்கள்.

மிகிகா, கிங்கு, டாம்பு என எல்லோரும் குண்டு வீசிவிட்டார்கள். மிகிகா தான் அதிக தூரம் வீசி இருந்தது. அந்த அணில் குண்டு வீச வந்தது. கெக்கெக்கே கெக்கே என அரங்கம் சிரித்தது. “பம்பம்போலே பல்பம்போலே” என சொல்லிவிட்டு குண்டினை கஷ்டப்பட்டு எடுத்தது. மூன்று முறை சுற்றிவிட்டி ஸ்வயிங் என வானத்தில் அந்த குண்டை வீசியது. 1 நிமிடம், 2 நிமிடம், 4 நிமிடம், 1 மணி நேரம் பார்த்தார்கள், குண்டு கீழ விழவே இல்லை. ஒரு நாள் பார்த்தார்கள் அப்போதும் கீழே விழவில்லை. மூன்று வாரம் கழித்து ஆப்ரிக்கா காட்டில் “டங்” என பெருத்த சத்தம்.



தேவதைகள்_வாழும்_வீடு2


குழலி உறங்கிக்கொண்டிருந்தாள். முன்னிரவு உள்ளிருந்து அந்த ஆரஞ்சு குதிரை வெளியே வந்திருந்தது. குழலியின் சின்ன வயசு பொம்மை. பிடித்தமான பொம்மை. அதன் காதில் ஊர் பெயர் சொல்லிவிட்டு அதனை அருகே படுக்கப்போட்டால் கனவில் அந்த இடத்திற்கு கூட்டிச்செல்லும் என இன்றும் நம்புகின்றாள். அந்த பொம்மையை வைத்து கொஞ்சம் கதை ஓடிக்கொண்டிருந்தது காலை வேளையில். பொம்மையை என் காதருகில் வைத்து “அப்படியா?” என்றேன். செழியனிடம் திரும்பி “செழியன் நீ குட் பாயாமே. தினமும் காலையில எழுந்தது கக்கா போயிடுவியாம். அப்படியா?” என்றேன். “அப்படி” என்றான்.

“ஓ..தினமும் பல் தேய்ச்சிடுவானா?”

“ஆமா”

“ஓ தினமும் அழாம அம்மாகிட்ட சாப்பிட்டுவானா”

“ஆமா”

“தினமும் குட்பாயா அழாம குளிச்சிடுவானா?”

“ஆமா”

“சாப்பிட்டு, குளிச்சிட்டு யானையில் தூங்கிடுவானா”

“ஆமா”

“அக்காகிட்ட சண்டை போடாம இருப்பானா”

“ஆமா”

”செழியன் எப்படிடா இந்த குதிரைக்கு எல்லாம் தெரியுது. உன்னை டெய்லி பாக்குதா?”

”ஆமா”

குழலி எழும் சமயம் வந்தது. எழுப்பவில்லையெனில் உள்ளிருந்து கூக்குரல் வரலாம். குழலியை எழுப்பிக்கொண்டிருந்தேன்.

“அப்பியா” என குரல். செழியன் காதிற்கு அருகில் அந்த ஆரஞ்சு குதிரை.



#தேவதைகள்_வாழும்_வீடு



மந்திர குமிழி


நீர்குமிழிக்குள் சரண் மாட்டிக்கொண்டான். வித்ரா ஊதிய அந்த நீர்குமிழியில் தான் அவன் மாட்டிக்கொண்டான். நீர்க்குமிழி காற்றில் பறக்க ஆரம்பித்தது. வித்ராவின் மொட்டை மாடியில் இருந்து அவர்கள் பள்ளியின் விளையாட்டு திடலை நோக்கி நீர்க்குமிழி பறந்துகொண்டிருந்தது. மேலே போக போக நீர்க்குமிழியும் பெரிதாகிக்கொண்டே இருந்தது. சரண் கத்துவது யார் காதிற்கும் கேட்கவில்லை. உடன் விளையாடிய சரண் எங்கே என்று வித்ரா “சரண் சரண்” என தேடிக்கொண்டிருந்தாள். சரணுக்கு குஷியாக இருந்தது. குமிழிற்குள் உட்கார்ந்து கொண்டான். அப்படியே படுத்துக்கொண்டான். எப்படி யார் கண்ணுக்கும் இந்த குமிழி தெரியவில்லை என அவனுக்கு குழப்பமாக இருந்தது. பக்கத்து தெருவில் இருக்கும் பெரிய கட்டிடத்தில் மோதச்சென்றபோது பயந்து ஒரு குதி குதித்தான். உடனே குமிழி மேலே சென்றது. அப்போது தான் அவன் குழிமியை இயக்க கற்றிக்கொண்டான். வலது கையை நீட்டியது வலது பக்கம் சென்றது இடது பக்கம் நீட்டியது இடது பக்கம் சென்றது. இப்படியே ரொம்ப உயரத்திற்கு பறந்துவிட்டான். இன்னும் கொஞ்சம் மேலே சென்றால் மேகத்தை தொட்டுவிடுவான்.

அப்போது தான் தன்னை சுற்றி கருப்பாக இருப்பதை பார்த்தான். அவனை சுற்றி பன்னிரண்டு காகங்கள். காகங்களுடைய கூர்மையான அலகுகள் குமிழியை குத்த வந்தது. திடீரென வந்த பருந்தை பார்த்து எல்லாம் ஆளுக்கொரு திசையாக பறந்து சென்றது. அப்போது ”டமார்” என்று ஒரு சத்தம்.

=========================

மந்திரக் குமிழி கதை நெகட்டிவா முடியுதேன்னு சிலர் கேட்டிருந்தாங்க. ஒரு சின்ன விளக்கம். கதை இன்னும் முடியவே இல்லை அதை பாசிட்டிவாக முடிப்பது ஒவ்வொரு குழந்தை + பெற்றோர் கடமை. டமார் என வெடித்ததும் கனவு களைந்தது என்பது ரொம்ப பழைய பாணி. அதை தவிர்க்கலாம். நான் ஒரு ரெண்டு முடிவுகளை கூறுகின்றேன். கற்பனைக்கு எல்லையே இல்லை அதனை குழந்தைகள் உங்களுக்கு உணர்த்துவார்கள்

1. டமார் என வெடித்ததும் காகங்களை துரத்திய பருத்து குமிழி வெடித்து கீழே விழ இருந்த சிறுவனை காப்பாற்றி அவன் பனியனை அலகுகளில் பிடித்து அவனை மொட்டி மாடியில் விட்டு பறந்து சென்றது.

2. கதையை நான் ஆரம்பித்த இடமே வேற. செழியனும் குழலியும் குமிழி ஊதுகின்றார்கள். மாமா வாங்கி கொடுத்த மந்திர சோப்பில் செய்த சோப்பு தண்ணீரில் தயாரித்த குமிழி அது. அதனால் தான் செழியன் அதற்குள் பறக்கின்றான். டமார் என வெடிக்கும் சத்தம் செழியனின் குமிழி வெடிக்கும் சத்தம் ஆனால் அவன் அக்கா குழலி அவனை காப்பாற்ற வருகின்றாள் வேறு ஒரு குமிழியில்.

டக்கரா?



மயிலிறகு குட்டி போடுமா?


அப்பாவின் நண்பருடைய தோட்டத்திற்கு சென்ற போது அங்கே மயில் ஒன்றினை பார்த்தாள் ஓவியா. மழை வருவது மாதிரி போல இருந்த சமயம் மயில் தோகையை விரித்தது. மயிலை இன்னும் பிடித்துவிட்டது. வீட்டிற்கு வரும்போது மயில் இறகு ஒன்றினை எடுத்துவந்தாள். பள்ளிக்கு சென்று தன் தோழிகளிடம் காட்டினாள். எல்லோருக்கும் ஓவியாவைப் பார்த்து பொறாமை வந்தது. “ஏ ஓவியா, இதை நோட்டுல வெச்சிக்க மயிலிறகு குட்டிபோடும். அந்த குட்டிய எனக்கு தருவியா?” என அவளது உற்ற தோழி ப்ரீதா கேட்டாள். அதன்படியே நோட்டு நடுவில் மயிலிறகை வைத்தாள். குட்டி போடுமா குட்டி போடுமா எனப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மாலை அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தாள் எத்தனை நாளில் குட்டி போடும் என கேட்டாள். விளையாட்டின் நடுவே ஓடிவந்து ஓடிவந்து நோட்டினை பார்த்தாள். இரவு படுக்க போகும் முன்னர் பார்த்தாள். நடு இரவு எழுந்து பார்த்தாள். மறுநாள் பள்ளிக்கு செல்லும்போது பார்த்தாள். எந்த மாற்றமும் இருக்கவில்லை. ஒரே ஒரு மயிலிறகு மட்டும் தான் இருந்தது. “வீட்லயே நோட்டை விட்டுட்டு போ ஓவியா, குட்டி போடுதான்னு நான் பார்க்கிறேன்” என்றார் ஓவியா அம்மா.

அன்றைய தினம் அவள் பள்ளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மயிலிறகை நோட்டுகளில் வரைந்தாள். மாலை பள்ளியில் இருந்து வந்ததும் நேராக நோட்டினை திறந்தாள். இரண்டு குட்டி போட்டிருந்தது மயிலிறகு. ஓவியாவிற்கு ரெட்டை சந்தோஷம். இப்ப அவளுடைய கவலை ஒரு இறகை ப்ரீதாவிற்கு தந்துவிடலாம் மற்றொன்று யாருக்கு என்பதே ! உங்களுக்கு வேணுமா?



நீல நிற கலர் பென்சில்


மிதிலா அடம்பிடித்து நேற்று தான் அந்த கலர் பென்சில் டப்பாவை வாங்கினாள். வீட்டில் நிறைய கலர் பென்சில்கள் இருந்தாலும் அவளுக்கு புதிது புதிதாக வாங்க வேண்டும். காலை எழுந்ததும் அந்த கலர் பென்சில் டப்பாவை திறந்துவிட்டாள். அதன் கவரில் மொத்தம் 10 கலர் பென்சில் இருக்குமென எழுதி இருந்தது. திறந்துவிட்டு ஒவ்வொன்றாக எண்ணினாள். பத்து இருந்தது. காபி குடிக்க அம்மா அழைத்தார். சமையல் அறைக்கு சென்று குடித்துவிட்டு திரும்பினாள். திரும்பி வந்து மீண்டும் எண்ணினாள். இப்போது ஒன்பது கலர் பென்சில்கள் தான் இருந்தது. மீண்டும் மீண்டும் என்ணினாள்.ஒன்பது தான். அட்டைப்படத்தில் இருக்கும் கலர்களை பார்த்து தொலைந்து இருப்பது நீல நிறம் என கண்டுபிடித்தாள். கட்டிலுக்கு கீழே, புத்தகங்களுக்கு நடுவே, தலையணைக்கு நடுவே, தன் பள்ளிப்பை என எல்லா இடத்திலும் தேடினாள். பயனில்லை. காபி குடித்துவிட்டு வருவதற்குள் எங்கே போச்சு?

முன் அறைக்கு எதேர்ச்சையாக சென்றாள். அறையை திறந்ததும் திக் என தூக்கி வாரிப்போட்டது. அறை நீல நிறத்தில் இருந்தது. இள மஞ்சள் பெயிண்டாக இருந்தது நீல நிறத்திற்கு மாறி இருந்தது. பேன், ட்யூப்லைட், புத்தகங்கள், இருக்கை, டேபிள், புத்தகம், நோட்டு எல்லாமே நீல நிறம். காலில் ஏதோ இடறியது. பாதி அளவு இருந்த நீல நிற பென்சில் அவள் கால் பட்டு உருண்டது.



Go Live


புதிய தொலைக்காட்சி பெட்டி வந்து இறங்கியது. மணியனுக்கு அதில் காட்டூன் சேனல்களை பார்க்க வேண்டும் என கொள்ள ஆசை. ஆனால் அவன் அப்பா விடவில்லை. இது விசேஷமான தொலைக்காட்சி குழந்தைகள் தனியாக பார்க்ககூடாது என்று சொல்லிவிட்டார். யாரும் ஹாலில் இல்லாத சமயம் அவன் டீவியை ஆன் செய்தான். நேராக காட்டூன் சேனல் ஒன்றிற்கு மாற்றினான். சோட்டா பீம் போய்க்கொண்டு இருந்தது. ரிமோட்டில் "Go Live" என்று ஒரு பொத்தன் இருந்தது. அதனை எதேர்ச்சையாக அழுத்தினான். சில நொடிகளில் திரையில் பார்த்த சோட்டாபீம் டீவியில் இருந்து இறங்கி ஹாலுக்கு வந்துவிட்டான். "உன் பேரு மணியன் தானே" என்றான் சோட்டாபீம். தூக்குவரிப்போட்டது மணியனுக்கு. டீவியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் இல்லாமல் தன் பெயரும் தெரிந்திருக்கின்றதே என ஆச்சர்யம். இவன் பேசுவதற்குள் "மணியன், எனக்கு ரொம்ப பசிக்குது ஒரு இருபது லட்டு எடுத்துகிட்டு வாயேன். அம்மாகிட்ட கேளு மேல ஒரு டப்பாவில் இருக்கு" என்றான்.

கைகள் நடுக்கியபடியே டீவியில் சேனலை மாற்றினான். காட்டூனில் இருந்து வேற சேனலுக்கு மாறிவிட்டது. டக்கென சோட்டா பீமும் மறைந்துவிட்டான். அப்பாடி என நினைத்து கண் மூடினான். அப்போது தான் மூச்சு திரும்ப வந்தது, திடீரென உர் உர் என்று உறுமல் சத்தம். அதுவும் புலியின் உறுமல் போல இருந்தது. அவன் மாற்றியது டிஸ்கவரி சேனல்.



===========================

அந்த குட்டி சிறுவன் ஒரு சகோதரியின் மகன். மெல்லிய ADD - Attention deficit disorder. அவன் மீது எனக்கு எப்போதும் அதிகப்படியான அன்பு உண்டு. நேரில் பார்த்ததில்லை என்றாலும் தினசரி அவன் செய்கைகள் எனக்கு பகிரப்படும். இந்த Go Live (ரொம்ப குட்டி கதை -001) கதையை கேட்டு அவன் கதையை விரிக்கின்றான்.. அடுத்த டாம் & ஜெர்ரிக்கு சேனல் மாறுகின்றது. டாம் முதலில் சீஸ் கேட்கின்றது. பிறகு ஜெர்ரிக்கும் சீஸ் தரும்படி கேட்கின்றதாம்.( சிறு குழந்தை என்றாலும் அவனுக்கு தெய்வ பக்தி அதிகம்) சேனர் TTDக்கு மாறுகின்றது. திருப்பதி தேவஸ்தல நிகழ்ச்சி. வெங்கடாசலபதியும் அவர் நண்பர்களும் மணியனை பார்க்க வருகின்றர்கள். இந்த சிறுவன வெங்கடாசலபதியுடன் விளையாட மணியன் கடைக்கு நண்பர்களுடன் சென்று பெயிண்ட் வாங்குகின்றார்கள். பிறகு மணியனை விட்டுவிட்டு திருப்பதி சென்றுவிடுகின்றார்கள்.

இந்த மெசேஜ்களை படித்துவிட்டு வெகுநேரம் எந்த வேலையும் ஓடவில்லை. “நன்றி சகோ” என கடைசியில் அவனுடைய தாய் மெசேஜ் செய்திருந்தார். என்ன சொல்றதுன்னு தெரியல சார். பசங்களுக்கு நிறைய கதை எழுதனும்னு மட்டும் தோனுச்சு.



மாறாவின் விசித்திர சேவை


அழுதுகொண்டிருந்த எறும்பிடம் என்ன விஷயம் என விசாரித்தது தும்பி. “தம்பி, ஏன் அழுவுற?” என்றது. தும்பியின் பெயர் மாறா. அழுதுகொண்டிருந்த எறும்பின் பெயர் அல்லி. ”நானு..நானு வேகமா அடிச்ச காத்துல பறந்து வந்துட்டேன். ஒரு காய்ந்த இலை மேல இருந்தேனா அப்ப வேகமா காத்து அடிச்சுது அதனால அப்படியே வந்துட்டேன். எனக்கு எங்க வீட்டுக்கு போகனும்..ம்ம்ம்” என சொல்லிச் சொல்லி அழுதது அல்லி. “அவ்வளவு தானே, உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு நானே உன்னை விட்டுட்றேன்” என்றது மாறா.

“எங்க வீடு அங்க இருக்கு” – இது அல்லி. சரி எறும்பிற்கு இடம் தெரியவில்லை என மாறாவிற்கு புரிந்தது. “சரி உங்க வீடு எப்படி இருக்கும்?” என்றது. அதற்கும் “எங்க வீடு எங்க வீடு மாதிரி அழகா இருக்கும்” என்றது மல்லி. ரொம்ப குட்டி எறும்பு அதனால் அதற்கு எதுவும் தெரியவில்லை. சரி முதுகில் ஏறிக்கோ எப்படியும் ரொம்ப தூரம் வந்திருக்க முடியாது என அல்லியை முதுகில் ஏற்றிக்கொண்டது.

மாறாவை கெட்டியாக பிடித்துக்கொண்டது அல்லி. மாறா ஒவ்வொரு வீடாகச் சென்றது. வீட்டிற்குள் அல்ல தெருவிலேயே தான் சென்றது. “இதுவா?..” ”இதுவா” என விசாரித்தபடி பறந்தது மாறா. “அதோ அந்த வண்ணத்தில தான் வீடு இருக்கும்” . அது காட்டிய வண்ணம் மஞ்சள். அதன் பிறகு மஞ்சள் வீட்டின் வாசலில் மற்றும் நின்றது. இல்லை இல்லை என்றது. திடீரென்று அதோ அது மாதிரி மரத்துக்கு கீழே தான் இருக்கும் என்றது. அது தென்னை மரம்.

சில வீடுகள் தள்ளி ஒரு வீட்டை கடக்கும்போது “இது தான் இது தான். இந்த மரத்துக்கு கீழ தான் எங்க வீடு” என்றது மல்லி. சர்ர்ர் என நின்று மரத்தை நோக்கி பறந்தது மாறா. “மாறா அண்ணா, எனக்கு பசிக்குது, காலையில இருந்து சாப்பிடவே இல்லை. வீட்டுக்குள்ள சமையலறையில ஒரு சக்கரை டப்பா இருக்கு அங்க போய் கொஞ்ச சாப்பிட்டு அப்படியே கொஞ்சம் சக்கரையையும் வீட்டுக்கு எடுத்துட்டு போலாமா? நாங்க வீட்ல இருந்து அந்த டப்பாவுக்கு போகவே அறை நாள் ஆகிடும். உங்க கூட போனா சீக்கிரம் போயிடலாம்” என விண்ணப்பம் போட்டது அல்லி. சிரித்தபடி வீட்டிற்குள் சென்றது மாறா. திசையை சொல்லச் சொல்ல மாறா அந்த டப்பாவின் மேலே நின்றது. டப்பா நல்ல உயரத்தில் இருந்தது. அல்லி சக்கரையை பார்த்ததும் புரண்டு விளையாடியது. மற்ற எறும்பகளோடு வரும்போது விளையாட நேரம் இருக்காது, வந்ததும் வேலை முடித்துக்கொண்டு சரசரவென போய்விட வேண்டும். அது தான் விதிமுறை.

இப்படி விளையாடிக்கொண்டிருந்த அல்லிக்கு கீழே நடப்பது தெரியவில்லை. சமையலறை திட்டில் அமர்ந்திருந்த மாறாவை அந்த வீட்டு சிறுவன் பிடித்துவிட்டான். துன்புறுத்த ஆரம்பித்துவிட்டான். சிறிது நேரம் கழித்து இந்த காட்சியை பார்த்த அல்லி என்ன செய்வது என புரியாமல் திகைத்தது. அங்கிருந்து ஒரு குதி. நேராக மாறாவை பிடித்திருந்த சிறுவனின் கைமேல் அமர்ந்தது. வெடுக் என ஒரு கடி. “அம்மா ..” என அலறிபடி மாறாவை விட்டுவிட்டான். கையை உதறினான் அவன் உதறியதில் அல்லியும் பறந்தது. அல்லி கீழே விழும் முன்னர் சொயிங் என பறந்து முதுகில் பிடித்தது மாறா.

அதன்பின்னர் நேராக அல்லியின் வீட்டிற்கு சென்றனர். வழியின் “அண்ணா, அந்த பையனுக்கு வலிக்குமா? பாவம் இல்லை” என்றது. “கொஞ்ச நேரத்தில சரியாகிடும் அல்லி” என்றது மாறாம். வீடு வந்தது. அங்கே ஆயிரக்கணக்கில் எறும்புகள். அல்லி காணாமல் போனதால் அதன் நண்பர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஒருமுறை காணவில்லை என்றால் திரும்ப கிடைக்கமாட்டார்கள். ஏதாவது ஆபத்து வந்துவிட்டிருக்கும். டாங்சிக்கு டாங்கிக்கு என அழகு நடை நடத்து வீட்டிற்குள் நுழைந்தது அல்லி. அங்கே சோகமாக இருந்த வீடு குதுகலமானது. விசில் பறந்தது. கடகடவென மாறாவுடன் வீடு வந்த கதையை அனைவருக்கும் கூறியது. எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே வந்து மாறாவிற்கு நன்றி தெரிவித்தனர். அல்லி வானத்தில் பறந்த அனுபவத்தை கேட்ட அதன் இரண்டு நண்பர்கள் “மாறா அண்ணா எங்க ரெண்டு பேரையும் இந்த மரத்தோட உச்சி வரைக்கும் கூட்டிகிட்டு போய் கீழ கொண்டு வர்ரீங்களா?” என்றன. மகிழ்ச்சியுடன் உஸ்ஸ்ஸ் என மேல அழைத்து சென்றது. இரண்டு எறும்புகளுக்கும் அவ்வளவு ஆனந்தம். கீழே மெதுவாக வந்த மாறாவிற்கு அதிர்ச்சி.

இரண்டு இரண்டு எறும்புகளாக சீரான வரிசையில் நின்று கொண்டிருந்தன எறும்புகள். “எங்களையும் ஒரு சுற்று கூட்டிகிட்டு போங்க மாறா அண்ணா” என்றன ஒருமித்த குரலில்.



ராஜ உபச்சாரம் பெற்ற மையூ


எப்படியோ ராக்கெட்டில் நுழைந்துவிட்டது. தீபாவளிக்கு வெடிக்கும் ராக்கெட் அல்ல, நிஜமான ராக்கெட் தான். ராக்கெட்டில் ஏறிச்சென்றது பட்டாம்பூச்சி. அதன் பெயர் மையூ. அந்த ராக்கெட் நேராக நிலாவிற்கு செல்கின்றது. ஆளில்லாத ராக்கெட். நிலாவில் இருக்கும் கற்களை எடுத்துவர அனுப்பப்பட்ட ராக்கெட். ராக்கெட் வானத்தில் போகப்போக கொஞ்சம் கொஞ்சம் பகுதியாக உதிர்ந்து கீழே விழுந்தது. நிலாவில் விண்களம் இறங்கியது.

மையூ நிலவிற்குள் பறந்தது. அங்கே பறப்பது கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. பூமியில் இருப்பதைவிட நிலாவில் புவியீர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு. அப்படின்னா என்னாகும் என்பது உங்கள் கேள்வி. சரியா. புவியீர்ப்புவிசை பற்றி பெரிய வகுப்பில் படிப்பீங்க. இப்போதைக்கு பூமியில ஒரு நொடியில் நடந்தா நிலாவில் ஆறு நொடி ஆகும். கிட்டத்தட்ட ஸ்லோ மோஷனில் நடப்பது போலத்தான் இருக்கும். மையூ பறப்பதற்கும் அப்படித்தான் நேரம் எடுத்தது.

மையூ அங்கே இருக்கும் இடங்களை பார்த்தது. அங்கிருந்து பூமியை பார்த்தது. ரொம்ப குட்டியா நீல நிற பந்துபோல இருந்தது பூமி. நிலாவில் ஏகப்பட்ட குழிகளும் பள்ளங்களும் இருந்தன. மெல்ல மெல்ல பட்டாம்பூச்சி மையூ சுற்றிப்பார்த்தது. மலர்கள் எதுவும் இல்லாததால் உணவிற்கு வழியே இல்லாமல் போனது. பசி. பசி. பயங்கர பசி. முந்தையநாள் ராக்கெட்டிற்குள் நுழைவதற்குள் சாப்பிட்டது அப்புறம் எதுவுமே சாப்பிடவில்லை.

தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. அட யாருப்பா அது நிலாவில் இருப்பது என ஆச்சர்யமாக பார்த்தது. அங்கே ஒரு பாட்டி இருந்தார்கள். ஆமாம் நிலாவில் வடை சுடும் பாட்டி தான். அந்த பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருந்தார்கள். மெல்ல மெல்ல அந்த பாட்டியிடம் பறந்தது மையூ.

“பாட்டி பாட்டி எனக்கு ரொம்ப பசிக்குது பாட்டி, ஏதாச்சும் சாப்பிட தாங்க” என்றது மையூ.

”உன் பேரு என்ன பட்டமபூச்சி. ரொம்ப வருஷமா வடை சுட்டு சுட்டு வீணா போகுது. இப்பவாச்சும் சாப்பிட நீ வந்தியே. ஆமாம் உன் பேரு என்ன?”

“என் பேரு மையூ. ரொம்ப வருஷமா இங்க தான் இருக்கீங்களா? “

“உங்க தாத்தாக்கு தாத்தாக்கு தாத்தாக்கு தாத்தாக்கு தாத்தா காலத்தில இருந்தே இங்க தான் இருக்கேன்”

“நான் வடையே சாப்பிட்டதில்லை பாட்டி”

“இந்த பாட்டியோட வடை அருமையா இருக்கும். இந்த வடை. எனக்கு நேரமாச்சு அதோ என்னோட பஸ் வந்துடுச்சு நான் அதோ தெரியுது பாரு வீனஸ் அங்க தான் இருக்கேன். தெனக்கும் வந்து வடை சுட்டுட்டு போயிடுவேன். வரட்டா. பத்திரம். நாளைக்கும் நீ இங்க இருந்தா பாக்கலாம்” என கடகடவென பாட்டி கிளம்பிவிட்டார்கள். நிலாவுக்கு பேருந்துபோல ஏதோ வந்தது பாட்டி உள்ளே நுழைந்தாள்.

வடையை கொஞ்சம் சாப்பிட்டதும் பசி அடங்கியது. “ச்ச அந்த பாட்டி கூடவே வீனஸுக்கு போயிருக்கலாமே” என யோசித்தது மையூ. ரொம்ப நேரம் சுற்றியதாலும் குளிர் எடுத்ததாலும் தூங்கலாம் என முடிவெடுத்தது மையூ. அங்கே ஒரு பெரிய கோர்ட் இருந்தது. அதற்குள் தூங்கலாம் என அதற்குள் சென்றது. கோர்ட்டிற்கு வெளியே “நீல் ஆர்ம்ஸ்டிராங்” என எழுதி இருந்தது (இவர் யார்னு உங்க அப்பா/அம்மா கிட்ட கேளுங்க)

எவ்வளவு நேரம் தூங்கியதுன்னு தெரியல. தனியா இருக்க ரொம்ப சோர்வா இருந்துச்சு மையூவிற்கு. தான் வந்த விண்களத்திலேயே திரும்ப சென்றுவிடலாம் என அதனை தேடியது. விண்களத்தில் இருந்து இறங்கிய ரோபோக்கள் சில கற்களையும் நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தது.

அதனருகே பறந்ததும் பட்டாம்பூச்சியின் புகைப்படமும் எடுக்கப்பட்டது. பூமியில் இருந்த விஞ்ஞானிகள் அந்த படத்தினை பார்த்ததும் “நிலாவில் பட்டாம்பூச்சி – வேற்று கிரக வாசியோ என அச்சம்” என செய்தி வெளியிடப்பட்டது. விண்களத்தில் பூமிக்கு வந்த பட்டாம்பூச்சிக்கு அதன் பிறகு ராஜ உபச்சாரம் தான் போங்க.



மாமழை


இன்றோடு மழை பெய்ய ஆரம்பித்து துவங்கி ஐந்து வருடங்கள் ஆகின்றது. ஆமாம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக ஒரு நிமிடம் கூட நிற்காமல் மழை. சூடாமணி வீட்டில் இன்று கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். மழைக்காக அல்ல. சூடாமணி பிறந்ததும் சரியாக மழை துவங்கிய இந்நாளில் தான். சூடாமணி இதுவரை வெய்யிலையே பார்த்ததில்லை.  

மழை துவங்கிய முதல் நாள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள், இரண்டாவது நாள் சந்தோஷம் குறைந்தது, ஒரு வாரத்தில் பயப்பட ஆரம்பித்தார்கள். ஊரெல்லாம் தண்ணீர், சாலையெல்லாம் தண்ணீர், மைதானங்களில் தண்ணீர். கார், பஸ், லாரி, சைக்கிள், ஸ்குட்டர் என எந்த வாகனமும் வெளியே வரவில்லை. கொஞ்ச நாட்களில் அவைகளை அடுத்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டனர். நீரை கடலுக்குள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஊர் முழுக்க சின்ன சின்ன படகுகள் தான். அதில் தான் மக்கள் வெளியே சென்று வந்தனர். பக்கத்து ஊரில் இருந்து தான் உணவுப்பொருட்கள் வந்தன. சில நாட்களில் மழை வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.  

சூடாமணியின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் அன்று தான் அந்த செய்தியை வானொலி அறிவித்தது. செய்தித்தாள்கள் இந்த ஊருக்கு வந்து ஐந்து வருடமாகிவிட்டது. செய்திகளை கேட்க வானொலி மட்டும் தான். “ஊர் மக்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி, நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்யாது. வெயில் காய இருப்பதினால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.”  

அந்த இரவு ஊரே தூங்கவில்லை. சூரியனை பார்க்க ஆவலாக இருந்தனர். மழை பெய்துகொண்டே இருப்பததினால் ஊரே எப்போதும் கொஞ்சம் இருட்டாக தான் இருக்கும். காலை 5 மணி வரை மழைவிட்டபாடில்லை. 5.30க்கு தூறலாக மாறியது. 6 மணிக்கு மழை நின்றது. சூரியன் ஐந்து வருடங்களுக்கு பிறகு எட்டுப்பார்த்தது. சூடாமணி முதல்முறையாக சூரியனை நேரில் பார்க்கின்றாள். அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

”அப்பா, என்னை சைக்கிளில் வெளிய கூட்டிகிட்டு போறீங்களா?” என்றாள் சூடாமணி. பரண்மேல் இருந்த சைக்கிளை கீழே இறக்கினார் அப்பா. மழை நின்றதுமே சாலையில் கொஞ்ச நேரத்திலேயே தண்ணீர் காணாமல் போனது. சூடாமணி மண்ணையும் முதன்முதலாக பார்க்கின்றாள். மின்சாரம் நிறைய தரமுடியாததால் வீடுகளில் கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் பயன்படுத்த முடியவில்லை. சில புத்தகங்களில் மண்னை பார்த்திருக்கின்றாள். அவ்வளவே.  

சைக்கிளின் முன் கம்பியில் சூடாமணி அமர, அப்பா வண்டியை ஓட்டினார். பலவருடங்கள் கழித்து சைக்கிளை எடுத்ததால் கடக்முடக் கடக்முடக் என ஓடியது. நல்லவேளை காற்றடிக்கும் பம்பு இருந்ததால் காற்றடித்துக்கொண்டார்கள்.

  காற்று ஜிலுஜிலுவென அடித்தது. காற்றில் இன்னும் ஈரப்பதம் குறையவே இல்லை. சாலையில் யாருமே இல்லை. ஆனால் எல்லோரும் வீட்டு வெளியே நின்றுகொண்டு வானத்தையும் சூரியனையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வழக்கமாக தாமதமாக எழுந்துகொள்ளும் சிறுவர்கள் எல்லாம் சீக்கிரமே எழுந்து மாடியில் நின்றுகொண்டிருந்தார்கள்.

  கண்ணைமூடி கைகளை அகல விரித்தாள் சூடாமணி. அப்பா இன்னும் வேகம் எடுத்தார். சர்ர்ர் என்று பிரதான சாலைக்கு சைக்கிள் சென்றது.

“அப்பா”

“சொல்லுமா”

“இப்ப மழை வந்தா நல்லா இருக்குமில்லை”



கோடுகள்


சாக்பீஸை கையில் எடுத்திருக்கிறார் செழியன். வீடு முழுக்க கோடுகள் தான். நேற்றி கட்டிலில் அமர்ந்து சுவற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தான். என்ன வரையற செழியன் என்றதற்கு “கோடு” என்றான். கைகளை அகல நீட்டி அமரச்செய்துவிட்டு இடதுகை நடுவிரல் நுனிமுதல் வலதுகை நடுவிரல் நுனி கோடு போட்டான். “அப்பா, அவன் கிறுக்குறான்பா” என்று குழலி கம்ளையிண்ட். “உன்னைவிட குறைவா தான் கிறுக்குறான். ஹால் முழுக்க கிறுக்கினவ நீ”. சர்கிள் போடு செழியன் என்றேன். நேராக கோடு கிழித்து சர்கிள் என்றான். தற்சமயம் கோடுகளால் ஆனது அவனுலகு. குழலி கிறுக்கியபோது எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது.

கோடுகளும் அவளும்

——————————————

பென்சில் பிஞ்சுவிரலில் தவழ்கின்றது

சுற்றி சுற்றி கோடுகள் பிறக்கின்றது

”கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்கிறாள்

சிங்கம் – இல்லை

மான் – இல்லை

மயில் – ஆமாம்

வேகமாக தலையசைக்க

கோடுகள் வளைந்து நெளிந்து

அவள் அசைத்ததற்கு மாறிக்கொண்டன

——————————————



தேவதைகள்_வாழும்_வீடு‬


செழியன் உறங்கிவிட்டான். குழலி ஒரு கதையை ஆங்கிலத்தில் கூற முயற்சித்தாள். ஒரு வரியை சொன்னதும் அதில் இருக்கும் தவறு என்ன? எப்படி வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று வித்யா விளக்கிக்கொண்டிருந்தாள். அங்கிருந்து எங்கு எங்கோ சென்றது. கதையை முடிக்கவில்லை. சில கணக்கு புதிர்களை அவர்கள் இருவரும் விளையாடினார்கள். கூட்டல் தான். குழலி எதிர் புதிர்களை போட்டாள். பதில் சொன்னதும் சரியா என அவளே கூட்டி சரிபார்த்தாள். கணக்கு என்றால் எனக்கு கொள்ளை ப்ரியம். 'நான் ஒரு கணக்கு பைத்தியம்' என்ற நூலுக்கான அடிப்படை வேலைகள் ஸ்கெட்ச் எல்லாம் போட்டு அப்படியே நிற்கின்றது. கணக்கினை எப்படி வாழ்வின் எல்லா இடத்திலும் பார்க்கலாம் எண்களுடன் எப்படி விளையாடலாம் என்பதே அந்த புத்தகம். அதில் முதல் பக்கமே திகிலானதாக இருக்கும். ஆசிரியர்கள் இருவர் - உமாநாத் & விழியன்.

குழலிக்கு கணக்கின் மீது ப்ரியம் வரவேண்டும் என வித்யாவிடன் சில புதிர்களை போட்டுக்கொண்டிருந்தேன். கடைசியாக "ஒரு ப்ரிட்ஜ் இருக்கு. அதுனுடைய ஆரம்பத்தில ஒரு லாம்ப் போஸ்ட் இருக்கு.சீரான இடைவெளியில் மொத்தம் பத்தி லாம்ப் போஸ்ட் இருக்கு. பத்தாவது லாம்ப் போஸ்ட் ப்ரிட்ஜ்ஜோட அந்த முடிவில் இருக்கு. ரெண்டு பக்கம் இருந்தும் ஒவ்வொரு வண்டி ஒரே வேகத்தில வருது. ரெண்டும் எங்க மீட் பண்ணும்?"

வித்யா சில நொடிகள் எடுத்துக்கொண்டாள். குழலி திடீரென "அப்பா எனக்கு தெரியும்.சொல்லட்டா?"

"சொல்லு பாக்கலாம்"

"ப்ரிட்ஜ்ல.."



‪#‎தேவதைகள்_வாழும்_வீடு‬



காக்கா ஏன் கறுப்பாச்சு? (2)


(பர்மா நாட்டு நாடோடிக்கதை - Retold)

ரொம்ப காலத்துக்கு முன்னாடி எல்லா காக்காவும் வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப உயரத்துக்கு பறக்குமாம். சூரியன் வரைக்கும்கூட பறந்து போகுமாம். அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்க. அவங்க கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலை. நல்ல பெரிய பொண்ணான பிறகு தான் வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு "காக்கா காக்கா இந்த பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் இருக்கு, அதோ அந்த இளவரசி அங்கிகாகிட்ட கொடுத்துடு"ன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆயிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சு.

வழியில திருமண ஊர்வலம் நடந்துகிட்டு இருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு பைய கொடுத்துட்டு வந்தா தாமதமாகி போகும். ஊர்வலம் முடிஞ்சிடும், சாப்பாடும் காலியாகிடும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிவிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பையை வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். பையில் இருந்து நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள, சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா கல்யாண மண்டபத்தில செம சாப்பாடு வந்துச்சாம்.  ஒரு பாட்டு வேற 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்..இந்த கெளரவப் பிரசாதம் இதுவே எனக்கு போதும்..  " ஏப்பம் வேற. பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். நமக்கு தான் பையில என்ன இருக்குன்னு தெரியுமே. திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. பரிசா இந்த குப்பையா கொடுப்பாங்க. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.

மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்ததை பார்த்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை கோவமா பார்த்ததால வெள்ளையா இருந்த காக்கா உடனே கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?



யார் வென்றது


அன்றைய விளையாட்டு போட்டிகளில் கடைசிப் போட்டி ஓட்டப்பந்தையம். காடுகளில் விலங்குகளுக்கு இடையே நடக்கும் விளையாட்டு போட்டிகள். ஓட்டபந்தையத்திற்கு குல்பி என்கின்ற யானை, முயல், ஆமை, மான்கள் இரண்டு, காண்டாமிருகம்,  மனிதக்குரங்கு என எல்லா போட்டியாளர்களும் ஓடுகளத்தில் தயாராக இருந்தார்கள். போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சள் சட்டைபோட்ட அந்த கரடியார் தான். ஒலிப்பெருக்கியில் “நண்பர்களே, இதோ இந்த விளையாட்டு தினத்தின் கடைசிப் போட்டி. வடக்கு பகுதி காடும் தெற்கு பகுதி காடும் சரிசமமாக வென்று இருக்கின்றார்கள். இந்த ஓட்டப்பந்தயத்தில் யார் வெற்றி பெறுகின்றார்களோ அதை பொறுத்தே எந்த காட்டுப்பகுதி வெல்லப்போகின்றார்கள் என முடிவாகும். அனைவரும் போட்டியை காண தயாரா?” எனக் கேட்டது.  

கரடியார் எப்போது ஓட ஆரம்பிக்க வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். “ஒன்று” “இரண்டு” “மூன்று” என சொல்லிவிட்டு விசில் ஊதுவேன் பிறகு எல்லோரும் ஓடவேண்டும். எந்த வழியாக ஓட வேண்டும் என்று இதோ இந்த அம்புகுறிகள் வழிகாட்டும். தூரத்தில் தெரியும் அந்த மரங்களை சுற்றிவிட்டு திரும்ப இதே வழியாக வரவேண்டும். யார் முதலில் இந்த கோட்டினை தொடுகின்றார்களோ அவர்களே வெற்றிபெற்றவர்.” எல்லா மிருகமும் தயார் நிலையில் இருந்தார்கள். “ஒன்று இரண்டு…” என சொல்வதற்குள் ஒரு மான் துள்ளி ஓடியது. மூன்று முறை இதே போலச் செய்தது. நான்காவது முறையும் அப்படி செய்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது. “ஒன்று..இரண்டு..மூன்று” விசில் ஊதப்பட்டது. எல்லா போட்டியாளர்களும் ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

குல்பி என்கின்ற யானை தான் எல்லோருக்கும் முன்னே சென்றது. குல்பி ஒரு ஓட்டப்பந்தைய வீரர்.ஆமையும் வேகமாவே சென்றது. முயல், மான், மனிதக்குரங்கு இவை அனைத்தும் அந்த யானையை முந்தி செல்ல போட்டி போட்டன. ஓயாத விசில் சத்தம். மஞ்ச சட்டை கரடியாரில் விசில் சத்தமில்லை இது பார்வையாளார்களின் விசில் சத்தம். காட்டில் வசித்த சின்ன சின்ன விலங்குகளும் பறவைகளும் மரத்தில் இருந்து போட்டியை பார்த்தன.  

விளையாட்டு திடலில் இருந்து வெளியே இருக்கும் அந்த மரங்களை சுற்றிவர வேண்டும். குல்பி யானை தான் முதலில் சென்றது. அங்கே தான் அந்த விபரீதம் நடந்தது. குல்பி யானை வடக்கு பகுதியை சேர்ந்தது. குல்பி தான் வெற்றி பெறும் என ஏற்கனவே கணித்த தெற்கு பகுதி நரிகள் ஒன்றாக கூடி திட்டமிட்டன. கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஒரு மெல்லிய கயிறை தயார் செய்து குல்பிக்கு முன்னார் கட்டிவிடலாம். குல்பி கீழே விழுந்ததும் மற்ற மிருகங்கள் வேகமாக ஓடி வெற்றி பெறும். இது தான் திட்டம். அதன்படியே கயிறும் கட்டப்பட்டது. குல்பியும் கயிறு அருகே ஓடிவந்தது.  

தமால் என்ற சத்தம். குல்பி விழுந்துவிட்டது. பின்னால் ஓடிவந்த போட்டியாளார்கள் இன்னும் வேகமெடுத்தனர். திட்டமிட்ட நரிகள் மகிழ்ந்தனர். ஆனால் அங்கே தான் ஒரு திருப்பம். ஓடி வந்த போட்டியாளர்கள் குல்பிக்கு அருகே நின்றனர். பதறினார்கள். “அய்யோ குல்பி எழுந்திடுங்க எழுந்திடுங்க” என்றது ஆமை. தன் கழுத்தில் மாட்டி இருந்த தண்ணீர் பாட்டிலை குல்பிக்கு கொடுத்தது முயல். குடிங்க குடிங்க குடிச்சிட்டு பேசுங்க என்றது. முதலில் எழுந்து அமர்ந்தது குல்பி. அதற்குள் மனிதக்குரங்கும் மானும் ஒரு பெரிய குச்சியை எடுத்து வந்தனர். யானையை எழுப்புவது சிரமம் என அவர்களுக்கு தெரியும். குச்சி உதவக்கூடும் என நினைத்தார்கள். எல்லோரும் குச்சியை பிடித்துக்கொண்டனர். குல்பி மெல்ல எழுந்தது.  நின்றது. “காலை உதறிவிடுங்க யானையாரே” என்றது மான். “கீழ விழுந்து எழுந்தா எங்கம்மா அப்படித்தான் சொல்லுவாங்க”. காலை உதறியது குல்பி.  

இந்த காட்சிகள் எதுவும் பார்வையாளர்களுக்கு தெரியவில்லை. அந்த மரங்களுக்கு பின்னாடி நடந்தது. கைத்தட்டியபடியே யார் திரும்ப விளையாட்டு திடலுக்கு முதலில் வருவார்கள் என ஆவலுடன் இருந்தார்கள். அதோ குல்பியின் உருவம் தெரிகின்றது. நினைத்தது போலவே குல்பி தான் முதலில் வருகின்றது என வடக்கு பகுதி விலங்குகள் குஷியில் குதித்தன. ஆனால் குல்பியின் உருவம் அருகே வர வரத்தான் உண்மை எல்லோருக்கும் புரிந்தது.  

ஆமாம் குல்பி மட்டும் வரவில்லை. டாங்குடிங்கா டங்கா டாங்குடிங்கா டங்கா என பாட்டுக்கு நடனமாடியபடி குல்பி வந்தது. குல்பியின் முதுகில் மற்ற போட்டியாளர்கள் அமர்ந்து இருந்தனர். ஆமைக்கு மேலே முயல். கையை உயர்த்தி உயர்த்தி பஞ்சாபி நடனமத்தை போல மனிதகுரங்கு முதுகில் அமர்ந்து வந்தது. மான் முதுகில் ஏற முடியாததால் தும்பிக்கையில் பிடித்து வந்து. இந்த காட்சியை பார்த்ததும் அந்த திடலே எழுந்து நின்றது. காடே உற்சாகத்தில் அதிர்ந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கைத்தட்டி விசில் அடித்தனர். சிறப்பு விருந்தினர்கள் மேடையில் இருந்தே இறங்கி முடிவு கோட்டிற்கு வந்தார்கள். குல்பியை எல்லோரும் பாராட்டினார்கள். நடந்ததையும் விளக்கினார்கள். நரிகள் அங்கு வந்து சேர்ந்தன. நடந்த தவறுக்கு அவர்கள் தான் காரணம் என சொல்லி எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டன. ஒலிப்பெருக்கியில் உற்சாக குரல் “ஆஹா ஆஹா என்ன அற்புதம்,  போட்டி நிறைவு பெற்றது. எல்லோருக்கும் என்ன ஒரு மகிழ்ச்சி. எல்லோரும் வெற்றி பெற்றுள்ளோம். மிக்க நன்றி நண்பர்களே. அடுத்த விளையாட்டு தினத்தில் சந்திப்போம்” எனக் ஒலித்தது. போட்டி முடிந்தது என எல்லோரும் தங்கள் வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்தார்கள்.  

அப்போது தான் அந்த சத்தம் கேட்டது. டன் டன் டன் டன். அடடே எல்லோருமே போட்டியில் கலந்துகொண்ட காண்டாமிருகத்தை மறந்தே விட்டோமே. இதோ அந்த மரங்கள் நிறைந்த பகுதியை கடந்தவிட்டு மீண்டும் விளையாட்டு திடலுக்கு வந்துவிட்டது. விளையாட்டு திடலே உறைந்தது. அவரவர் அப்படியே நின்றனர். ச்ச இவரை மறந்தே போய்விட்டோமே என நினைத்தது குல்பி. டன் டன் டன் டன். வலுவாக திடமாக நடந்துவந்தது காண்டமிருகம். அது ஒரு ராஜநடை.வீரநடை.  

மீண்டும் ஒலிப்பெருக்கியில் குரல் “நண்பர்களே நண்பர்களே, என் குரல் தழுதழுக்கின்றது. ஒரு போட்டியில் வெற்றி தோல்வி முக்கியமல்ல பங்கேற்பதே முக்கியம் என தன் வீர நடையால் எல்லோருக்கும் புரியவைத்துள்ளது காண்டாமிருகம். கைத்தட்டி உற்சாகப்படுத்துவோம்”.

  டன் டன் டன் டன். கைத்தட்டலும் விசிலும் சுத்துப்பட்டி 18 காட்டிற்கும் கேட்டது.



பொம்மையானேன்


தலை வாரிவிடுகின்றார்கள் என ஆரம்பித்தார்கள் குழலியும் செழியனும். நானும் அலுவலகத்திற்கும் மட்டம், குழலியும் மட்டம். காரணம் எதுவும் இல்லை. ஜஸ்ட் லைக் தட். முடிவாரிவிடும்போதே அப்பா மசாஜ் செய்யறோம் என எண்ணெய் எடுத்துவந்தாள் குழலி. உச்சந்தலையில் எண்ணெய்விட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். குழலி கூட பரவாயில்லை இன்னொரு சின்னகை டாம்டூம் என அடித்தது. கொஞ்ச நேரத்தில் வலது பக்கத்திற்கு வந்தார்கள். அப்புறம் இடது பக்கம். பொம்மையின் தலையை திருப்புவதுபோல திருப்பி திருப்பி மசாஜ். ஒருத்தி மசாஜ் செய்ய ஒருத்தர் பவுடர் அடித்துக்கொண்டு வந்தார். கழுத்து முகம் எல்லாம் பவுடர். முடிக்கு கூட போட்டுவிட்டார். வாசலுக்கு சென்று குழாயில் தண்ணீர் எடுத்துவந்து முகத்தை துடைத்தான். பாவம் அவனுக்கு இன்னும் தண்ணீரை கையில் ஏந்திவர தெரியவில்லை. நனைந்த கையால் துடைத்தான். பின்னர் தலைவாரப்பட்டது. அந்த சீப்பு குத்துது என வேறு சீப்பு மாற்றப்பட்டது. செழியனை நல்லவேளை வித்யா குளிக்க அழைத்துசென்றுவிட்டாள். அடுத்து திருநீறு. முதலில் விரல் அளவிற்கு வைத்தாள். பின்னர் பட்டை போட்டாள். சரியாக வரவில்லை என நெற்றியை கழுவினாள். வைத்தாள் கழுவினாள். ‘அப்பா குட்நைட்’ என காலை தூங்கும் செஷனுக்கு சென்றான் செழியன். கண்ணாடியை வேற முதலிலேயே கழுற்றவிட்டார்கள். என்ன நடக்குது என்றே தெரியவில்லை. மசாஜிற்கு சொக்கியது. “அப்பா சிட் ப்ராப்பர்லி” என கட்டளைவேறு. திருநீறு சரியாக இல்லை என கலர்கலர் சாந்து டப்பா வந்தது. கலர் காம்பினேஷன் சரியில்லை என 4 முறை நெற்றி கழுவப்பட்டது. கடைசியாக திருநீறு கொஞ்சம் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி பட்டையடித்தாள். உண்மையை சொன்னால் நெற்றி முழுக்க தேய்த்துவிட்டாள். ஒவ்வொரு நிலையிலும் கெக்கபெக்கே கெக்கபெக்கே என சிரிப்பு. அடுத்து செல்பி செஷன் வேறு. அப்பா கண்ணை திறந்து சிரிங்க. ஈ சொல்லுங்க. சொக்கிக்கொண்டு வந்தது. கடைசியாக கண்ணாடி போட்டு கண்ணாடி முன்னர் நின்றால் கண்ணாடியில் நான் தெரியவில்லை வேற யாரோ இருந்தாங்க.

எங்கே இருக்கு சின்னு மரம்?


சின்னு மரம்.”உஷ் உஷ்” என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம்.காட்டின் நடுவிலே இருக்கின்றது. அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றித் தெரிந்து இருக்கும். அதன் பெயர் காரணம் தெரியாமல் போனாலும் அது எந்த இடத்தில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். இந்த மரத்தை “சின்னு மரம்” “சின்னு மரம்” என்று தான் அழைப்பார்கள். பக்கத்துக் காட்டில் இருந்து ஏதாவது விலங்கு இந்தக் காட்டிற்கு வந்து, வழி கேட்டால் “சின்னு மரத்திற்கு முன்னால் போங்க” , "சின்னு மரத்திற்கு இரண்டாம் மரம்" என மற்ற விலங்குகள் வழி காட்டும். அந்த அளவிற்குச் சின்னு மரம் காட்டின் முக்கியச் சின்னமாகக் கருதப்பட்டது.

அது சரி அது என்ன சின்னு மரம். அந்தக் கதை ரொம்பச் சுவாரஸ்யமா இருக்குமா?. முன்னொரு காலத்தில் இதே மரத்தில் செம்பன், செம்பி என்று இரண்டு அணில் வாழ்ந்து வந்தன. அவர்களுக்குச் சின்னு என்ற அழகான அணில் குழந்தை பிறந்தது. பிறந்த சில மாதங்களுக்கு இது மற்ற அணில்களைப் போல அமைதியாக நல்ல பிள்ளையாகத் தான் இருந்தது..ஓட ஆரம்பித்த பிறகு வால்தனம் வந்துவிட்டது. கொஞ்ச வால்தனம் எல்லாம் இல்லை, பயங்கர வால்தனம். எந்த மரத்திற்குச் சென்றாலும் கலாட்டா தான். கலாட்டா செய்தால் பரவாயில்லையே, அடாவடி செய்ய ஆரம்பித்துவிட்டது. குறும்பு செய்யும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் அடாவடி செய்தால், வேண்டும் என்றே அடம்பிடித்தால் யாருக்கு தான் பிடிக்கும் சொல்லுங்க. மற்ற அணில்கள் விளையாடும் போது தான் மட்டும் தான் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் எனச் சொல்லும். தங்களுடைய வயதான காலத்திலும் செம்பனும் செம்பியும் சின்னுவிற்கு உணவினை தேடி எடுத்து வந்து தந்தனர். சின்னு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.

சின்னு என்ற பெயரை கேட்டாலே சக வயது அணில்கள் ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டன. சின்னுவிற்கு நண்பர்கள் என்றே யாரும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நண்பர்கள் கிடைப்பார்களாம்? பெரிய அணில்களுக்கு மரியாதையே தராது சின்னு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது எனச் சொல்லும் தன் அம்மா அப்பாவையும் சில சமயம் விட்டுவைக்காது சின்னு. இந்தக் கவலையில் செம்பன் செம்பி இருவரும் மனம் வருந்தி இறந்துவிட்டனர்.

சரி பெற்றோர் இறந்த துக்கத்திலாவது சின்னு சரியாகிவிடும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். அப்பா அம்மா உயிருடன் இருந்த போது கொஞ்சமாவது அவர்களுக்குப் பயந்து இருந்தது. இப்போது அட்டகாசம் தாங்கமுடியவில்லை.எல்லா அணிலும் கூடி ஒரு முடிவினை எடுத்தது. 'நாங்கள் அனைவரும் உனக்குத் தினமும் வேண்டிய உணவினை தருகிறோம்.இந்த மரத்தைவிட்டு வரவே வராதே' என்று வேண்டின. சின்னுவால் மற்ற அணில்களின் தின வாழ்கையே பாதிக்கபடும் நிலையில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை அனைவரும் எடுத்தனர்.

அதன்படி தினமும், பழம், உணவு அனைத்தும் மரம் தேடி வந்தது. எந்த வேலையும் செய்யாமல் தினசரி உணவு உண்பதே வேலையாக இருந்தது. காடே அதிசயிக்கும்படி ஒன்று நிகழ்ந்தது. சின்னுவின் வால் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போனது. காட்டில் இது தான் பேச்சு. சிங்கம்,புலி, யானை, மான், பாம்பு என எல்லா உயிரினமும் இந்த அதிசயத்தைக் காண வந்தது. மரத்தின் உச்சியில் சின்னு இருந்தால் தரை வரை வால் நீண்டுவிட்டது. மரத்தில் உயரம் முப்பது அடி இருக்கும்.பெருத்த வால் இருப்பதால் நகர்ந்து செல்வதே சிரமமாகிவிட்டது. வால் எங்காவது சிக்கி கொள்ளும்.காட்டிலே ஒரு காட்சி பொருளாகிவிட்டது சின்னு, மற்ற காடுகளில் இருந்துகூட விலங்குகள் வர ஆரம்பித்துவிட்டன.முதலில் பெருமையாக இருந்தது, பிறகு அவர்களின் கேலிப்பேச்சு சின்னுவை என்னவோ செய்தது.

தன் தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்பட்டது. அப்பா அம்மா சொல்லை கேட்கவில்லையே, யாருக்கும் மரியாதை தரவில்லையே என நினைத்து அழுதது. சின்ன சின்ன வேலைகளை மெதுவாகச் செய்ய ஆரம்பித்தது.உணவு கொண்டு வருபவர்களிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தது.நல்ல அணிலாக மாறிவிட்டது .சில மாதங்களில் அந்தப் பெரிய வால் மறைந்து சின்னு மற்ற அணில்களைப் போல மாறிவிட்டது. பொறுப்பும் வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தது. ஆனந்தமாக வாழ்ந்தது.ஆனாலும் அந்த மரத்தின் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. சின்ன அணில்களுக்குச் சின்னுவின் கதை சொல்லி நல்லபடி நடக்கச் சொல்வது அந்தக் காட்டின் வழக்கத்தில் வந்துவிட்டது.



தொலைந்த மூக்கு


பரத் - நந்தினி இருவரும் அண்ணன் தங்கை. வழக்கம்போல இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் இருக்கானே அவன் மகா குறும்பன். அவன் இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை. சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் தான் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் ஐந்து மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் வசிக்கின்றார்கள்.

அது ஒரு சனிக்கிழமை காலை. அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றுவிட்டனர். பின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்.

“பரத், இங்க வா. நந்துவை சீண்டாமல் விளையாடனும். சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்திட்ரேன்”

“சரிங்க தாத்தா” - என இருவரும் கூறினர்.

விளையாட்டுச் சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாட துவங்கினர். எந்த பொருளை பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் “உஷ் உஷ்” என்று கத்தியபடி ஓடினான்.

“அண்ணா என்ன ஆச்சு?” பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

“ஒரு பருந்து வந்தது பார்த்தியா?”

“இல்லையே”

“பெரிய பருந்து”

”அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிட்டு போனீங்க?”

“அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துகிட்டு போயிடுச்சு. அது தான் துரத்திகிட்டு ஓடினேன். ஆனா அதுக்குள்ள பறந்தே போயிடுச்சு”..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.."அம்மா என் மூக்கு..என் மூக்கு.. ” என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள். கையையும் காலையும் உதைத்தாள். பக்கத்துவீட்டு அம்மா வந்தும் அடங்கவில்லை. சிரித்துக்கொண்டே அவரும் போய்விட்டார்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் இப்படி அழுது?” என்று பதட்டமுடன் கேட்டார்

தன் அழுகையை நிறுத்தி “தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக்கிட்டு இருந்தோமா.ஒரு பெரிய பருந்து கறுப்பு கலர்ல வந்துச்சா. என் மூக்கை..” மீண்டும் அழுகை..

“அழாமல் சொன்னால் தானே புரியும் நந்து”

“என் மூக்கை கடிச்சி எடுத்துட்டு போயிடுச்சு தாத்தா....ம்ம்ம்..ம்ம்ம்”

நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. “ஓ உன் மூக்கு தானா அது? ” என்றார்.

அதுவரையில் அடங்காமல் அழுதுகொண்டிருந்த நந்தினி அமைதியானாள். “நான் தெருவில் வந்தப்ப ஒரு பருந்து வந்து என்கிட்ட பேசுச்சு. ஒரு அழகான குட்டி பொண்ணுடைய மூக்கை எடுத்துகிட்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண்ன்னு சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்திட்டு பறந்து போயிடுச்சு”

“இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வெச்சிருக்கேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கோ..”

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார். ‘ஜெய் ஜம்போலி’  - ஒரு மந்திரம் சொன்னார்.

“ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்.” நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்..”படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாத்துற” என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

“ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு..ஜாலி ஜாலி..” மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.



வானில் குள்ளன்


(சிறுவர்களுக்கான நாடோடி சிறுகதைகள்)

குள்ள மனிதனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம் அவனே தான். கட்டைவிரல் அளவிற்கு மட்டுமே வளர்ந்த அவனை பற்றிய கதை தான் இது. குள்ளனுக்கு நெட்டையளுக்கும் திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றது. குள்ளன் எந்த வேலையும் செய்யவில்லை. அவன் மனைவி அவனை திட்டிக்கொண்டே இருந்தாள். அவள் வாழ்கை பாழாய் போனது என புலம்பினாள். காசு சம்பாதிக்காமல் வீட்டிற்கே வராதீர்கள் என மனைவி விரட்டிவிட்டாள்.

மனம் உடைந்த குள்ளன் தன் நிலத்திற்கு சென்று நெல்களை உலர்த்தினான். நெல்களை உலர்த்திவிட்டு அருகே இருக்கும் கட்டிலில் உறங்க சென்றான். மதியம் தூங்கியவன் மறுநாள் காலை தான் எழுந்தான். எழுந்தவனுக்கு அதிர்ச்சி. உலர்த்திய நெல்லில் பாதி நெல் நாசமாகி இருந்தது, மீதி காணாமல் போயிருந்தது. இரவு இந்திரலோகத்தில் இருந்து ஒரு வெள்ளை யானை வந்து நெல்களை நாசம் செய்தது. இது குள்ளனுக்கு தெரியவில்லை. யானையின் கால் தடங்களை பார்த்துவிட்டு ஏதோ உரல் தான் இந்த நாசவேலையை செய்தது என்று எண்ணி ஊரில் இருந்த அனைத்து உரல்களையும் பெரிய கயிற்றால் கட்டிப்போட்டான்.

மறுநாளும் இதே போல நடந்தது. குள்ளன் குழம்பிவிட்டான். உரல்களைத் தான் கட்டி போட்டிருக்கோமே, யார் இந்த வேலையைச் செய்வது எனத் தீவிரமாக யோசித்து யோசித்து இரவு மீண்டும் வந்துவிட்டது. சரி இரவு தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என தீர்மானித்து விழித்து இருந்தான். அதிசயம். திடீரென வெளிச்சம். வானில் இருந்து பெரிய வெள்ளை யானை தரை இறங்கியது.  யானையின் கழுத்தின் தங்க ஆபரணங்கள். அதன் மீது பளபளக்கும் போர்வை. நீண்ட தந்தம். ஒரு நிமிடம் அசையாமல் ஆச்சரியத்தில் நின்றான் குள்ளன். சமாளித்துக்கொண்டு யானையின் அருகே சென்றான். யானைக்கு தெரியாமல் அதன் வாலை பிடித்துக்கொண்டான். யானை நெல்களை சாப்பிட்டு வானில் பறந்தது. குள்ளனும் அதனுடன் பறந்து சென்றான்.

இந்திரலோகத்திற்கு சென்ற வெள்ளை யானை தன் இருப்பிடத்திற்கு சென்றது.குள்ளன் இறங்கி சுற்றி பார்த்தான். பெரிய பெரிய அறைகள். ஒவ்வொரு அறையிலும் தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள் , ஆபரணங்கள் என ஜொலித்தது. குட்டியாக இருந்ததால் நிறைய இடங்களுக்கு போகமுடியவில்லை. தன்னால் முடிந்த அளவு தங்கத்தை எடுத்துக்கொண்டான். சில வைரக்கற்களை எடுத்துக்கொண்டான். தான் வந்த யானையின் அறையினை தேடினான். அங்கே நிறைய வெள்ளையானைகள் இருந்தன.  மறுநாள் வரை அவன் வந்த யானையின் பின்னாலே ஒளிந்துகொண்டான். மறுநாள் இரவும் யானை பூமிக்கு புறப்பட்டது. தன் நிலத்திற்கு வந்தபோது இறங்கிக்கொண்டான். இப்படியே அடிக்கடி நிறைய தங்கம் எடுத்துவந்தான்.

நெட்டையள் மிகவும் சந்தோஷப்பட்டாள். கணவன் கை நிறைய தங்கம் கொண்டு வந்த ரகசியத்தை குள்ளனிடம் கேட்டள். நீண்டநாட்களுக்கு பிறகு அவன் அந்த ரகசியத்தை கூறினான். மனிதர்களுக்கே உண்டான பேராசை நெட்டையளுக்கு பற்றிக்கொண்டது. அடுத்த நாள் இரவு தானும் வருவதாகவும், அவள் வந்தாள் நிறைய தங்கம், எடுத்துவரலாம். நிறைய ஆபரண போட்டு வரலாம். குள்ளன் நூறுமுறை சென்று வருவதும் அவள் ஒரு முறை வருவதும் ஒன்று என்றாள்.ம்ம் சரி சரி என்றான் குள்ளன்.

மறுநாள் நெல் காயவைக்கப்பட்டது. வெள்ளை யானை வானிலிருந்து பறந்துவந்தது. நெட்டையள் வாயை பிளந்தாள். அதன் அழகை கண்டு. குள்ளனின் யோசனைப்படி யானை பறக்கும் போது குள்ளன் அதன் வாலினை பிடித்துக்கொள்வான், நெட்டையள் குள்ளனின் காலினை பிடித்துக்கொள்வாள். இந்திரலோகம் சென்றதும் இருவரும் பெரிய அறைகளுக்கு சென்று தங்கம் எடுத்து வரவேண்டும்.

அதன்படியே யானை பறக்கும் சமயம் குள்ளன் அதன் வாலை பற்றிக்கொள்ள குள்ளனின் காலினை நெட்டையள் பற்றிக்கொள்ள மூவரும் வானத்தில் பறந்தனர். பறந்து கொண்டு இருக்கும் போதே”ஏங்க இன்னும் எவ்வளவு தூரம்..? ” என்றாள். “அரை மணி நேரத்தில் போய்விடலாம்..” என்றான். அமைதியாக இருக்காமல் ” ஏங்க அங்க என்ன என்ன இருக்குங்க ” ” எத்தனைமுறை சொல்வது, தங்கம், வைரம், வைடூர்யம், வெள்ளி எல்லாம்…” என்றான்.

“என்னங்க அங்க எவ்வளவு தங்கமுங்க இருக்கும்..”

“அடி செல்லமே. இவ்வளவு தங்கம் இருக்கும்..” என கைகளை அகல விரித்தான் குள்ளன். பறந்து கொண்டு இருந்தது ஒன்று மட்டும் தான். விழுந்துகொண்டிருந்தது குள்ளனும் அவன் மனைவியும். தொப்பென அந்த யானை போட்டுச்சென்ற சாணத்தில் விழுந்து உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு யானை திரும்ப வரவே இல்லை. இரவெல்லாம் காத்திருந்து காத்திருந்து தூக்கம் போனது தான் மிச்சம். அதுவரை கிடைத்த தங்கம் வைத்து புதிய தொழில் தொடங்க யோசித்து வருகின்றான் குள்ளன். நீங்களும் உங்க யோசனையை சொல்லுங்க குள்ளனுக்கு.



பூ பூ மிக்கி ஸ்பெஷல்


செழியனிடம் பசிக்குது என்றேன். உடனே ஸ்ஸ்ஸ்ஸ் என சத்தம் போட்டுவிட்டு “தோச” என நீட்டினான். நானும் சாப்பிட ஆரம்பித்தேன். “தொட்டுக்க?” என்றேன். சாம்பார் செய்து தருவான் என நினைத்தேன். தோசை சுடுவதை போல ஏதோ செய்து “இட்லி” என கொடுத்தான். “டேய் தோசைக்கு தொட்டுக்க இட்லியா? எப்படிடா சாப்பிட்றது” என்றேன். ரொம்பவே அசால்டாக “சாப்பிடுங்க” என்றான். சரியென பாதி தோசை சாப்பிட்டுவிட்டேன். குழலி பள்ளிக்கு தயாராகி எங்கள் பக்கம் வந்தாள் “குழலி, இவன் தோசைக்கு தொட்டுக்க என்ன கொடுத்தான் தெரியுமா?” என்றேன். “தெரியுமே, இட்லி” எனச் சொல்லிவிட்டு ஹாலுக்கு நகர்ந்துவிட்டாள். தோசை காய்ந்து கொண்டிருந்தது. “சாப்பிடுங்க” என பூபு குரல் கொடுக்க. நாம இன்னும் டெக்னிக்கலாவும் டெக்னாலஜியிலும் நிறைய வளரனும்னு தோனுச்சு.



நிறம் மாறிய உலகம்


இன்னைக்கு ரம்யாவிற்கு எட்டாவது பிறந்தநாள். நாள் முழுக்க அவளுடைய நண்பர்கள் வாழ்த்துக்களைச் சொன்னாங்க. அவளுடைய அப்பா அவளுக்கு ஒரு பரிசு தரேன்னு சொல்லி இருந்தாரு. அதனால வாசல்ல காத்துகிட்டு இருக்கா. இதோ அவங்க அப்பா வந்துட்டாரு. கையில ஒரு பெரிய பெட்டி வேற. அது தான் அவளுக்கு பிறந்தநாள் பரிசு போல. ஒரு கூண்டும் அதற்குள்ள ஒரு கிளியும். ஐ!! ரம்யாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவளுடைய ரொம்ப நாள் ஆசையும் அது தான். எல்லா கிளையைப் போலவே இந்த கிளியும் பச்சை நிறத்தில் தான் இருந்துச்சு. மூக்கு சிகப்பா இருந்துச்சு. அதுக்கு என்ன பேரு வெக்கலாம்னு யோசிச்சு யோசிச்சு ‘கீக்கீ’ன்னு பேரு வெச்சிட்டா ரம்யா.

இப்ப கீக்கியும் ரம்யாவும் செம நண்பர்கள். எப்பவும் ரம்யா கீக்கியுடன் தான் இருக்கா. கீக்கீ கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிடுச்சு. முதல்ல சொன்ன வார்த்தையே ‘ரம்யா’ தான். ரம்யா அதுக்கு தேவையான சாப்பாடு தண்ணி எல்லாம் ஒழுங்கா கொடுத்திட்டு வந்தா. இப்படியா போயிட்டு இருந்த சந்தோஷாமான நேரத்தில தான் அந்த சம்பவம் நடந்தது.

ஒரு நாள் காலையில எழுந்து பார்த்தா...உலகமே மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்துச்சு. வானம் மஞ்சள் நிறம், கடல் மஞ்சள் நிறம், காடு, மலை, மக்கள், காரு, பங்களா, குடிசை, ஷூ, சைக்கிள், ரோடு, கடை,வீடு, வீட்டுக்குள்ள இருக்கிற சாமான் எல்லாமே மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்துச்சு. எல்லோருக்கும் ஒரே குழப்பம் என்னடா இது இப்படி மஞ்சளா மாறிடுச்சேன்னு. அப்ப தான் ரம்யா ஒரு விஷயத்தை கவனிச்சா உலகமே மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்தாலும் கீக்கீ மட்டும் அதே பச்சை நிறத்தில இருந்துச்சு. 

உலகமே மஞ்சள் நிறத்தில் இருக்கு, இந்த கீக்கீ மட்டும் வேற நிறத்தில இருக்குன்னு அவங்க தெருவில இருக்கிற மக்கள் கீக்கீயை அதிசயமா பார்க்க வந்தாங்க. கொஞ்ச நாள்ல அந்த பகுதி மக்கள் வந்தாங்க, கொஞ்ச நாள்ல அந்த ஊர்ல இருக்க எல்லாரும் வந்து பார்க்க ஆரம்பிச்சாங்க.

ஒரு வாரம் கழிச்சு ஒரு காலையில உலகம் சிகப்பு நிறந்துக்கு மாறி இருந்துச்சு. முன்ன மஞ்சள் நிறத்தில இருந்தது எல்லாம் இப்ப சிகப்பு நிறம். ஐய்யோன்னு ஆயிடுச்சு மக்களுக்கு. ஆனாலும் கீக்கீ மட்டும் அதே பச்சை நிறத்தில இருந்துச்சாம். அவங்க ஊரை தாண்டி இப்ப அந்த மாவட்டத்தில பிரபலம் ஆகிடுச்சு. அதனால் மாவட்ட தலைநகருக்கு கீக்கீயை கூட்டிகிட்டு போயிட்டாங்க. கலெக்டர் ஆபிசில கீக்கீயை வெச்சிட்டாங்க. அந்த மாவட்டத்தில இருக்கிற மக்கள் வந்து பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. கீக்கீ ஒரு கண்காட்சி பொருளா மாறிடுச்சு. ஆச்சரியமா பார்த்தாங்க. ரம்யா தான் கீக்கீ இல்லாம ரொம்ப வாடிட்டா. கீக்கியும் ரம்யாவை பார்க்காம ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

இன்னும் ஒரு வாரம் கழிச்சு உலகம் ஊதா நிறத்துக்கு மாறிடுச்சு. மாவட்ட தலைநகரில் இருந்த நம்ம கேக்கி இப்ப மாநில தலைநகர் சென்னைக்கு மாறிடுச்சு. முதலமைச்சர் கூட வந்து பார்த்துட்டு போனாங்க. அடுத்த வாரம் நீல நிறத்துக்கு மாறிடுச்சு. எல்லா டீவி சேனல்லையும் நம்ம கீக்கீ பிரபலம் ஆயாச்சு. இப்ப கீக்கீ இருக்கிறது டெல்லியில. விமானம் பிடிச்சு எல்லா கீக்கீயை பார்க்க மக்கள் வந்து போனாங்க. நாள் முழுக்க வரிசையில் நின்னு பார்த்துட்டு எல்லாம் போனாங்க. 24 மணி நேரமும் கீக்கியை பார்த்தாங்க. செய்தி தாளில் எல்லாம் தினமும் கீக்கீ படம் வந்துடும்.

இங்க ஊர்ல ரம்யா சாப்பிடறதே இல்லை. கீக்கீ வேணும்னு அழ ஆரம்பிச்சி இருந்தா. டீவில கீக்கீயை பார்த்து கொஞ்சம் சமாதானம் அடைஞ்சா. ஒரு இரவு முழுக்க அழுதிட்டே இருந்தா. அழுதுட்டே தூங்கிட்டு இருந்தா. காலையில ஒரு குரல் கேட்டுச்சு. ‘ரம்யா... ரம்யா’ன்னு. பழக்கப்பட்ட குரல் ஆனா அம்மா அப்பா குரல் இல்ல, பின்ன யாருடையது? ஆஹா நம்ம கீக்கீயோட குரல் தான் அது. கீக்கீ கூண்டில் இல்லாம ரம்யா பக்கத்தில நின்னுகிட்டு இருந்துச்சு.

வெளிய எட்டிப்பார்த்தா உலகம் பச்சை நிறத்துக்கு மாறி இருந்தது. கீக்கியும் பச்சை நிறத்தில இருந்ததால அதுக்கு இனி கவனம் இல்லை. அதனால் ரம்யாவோட வீட்டில் வந்து விட்டுட்டாங்க. இனி உலகம் எந்த நிறத்தில இருந்தா என்ன ரெண்டு நண்பர்கள் ஒன்னு சேர்ந்துட்டாங்க. இனி அவங்களுக்கு கொண்டாட்டம் தான்.

நாளைக்கு காலையில சீக்கிரம் எழுந்து உலகம் அதே மாதிரி தான் இருக்கான்னு சரிபார்த்துக்கோங்க. சரியா?

(ஒரு சர்வதேச நாடோடிக்கதையை தழுவியது)



சற்றே பெரிய காதுகள்


(நன்றி தி இந்து)

குழந்தைகளின் உலகம் எப்படிப்பட்டது என நாமாக ஒன்றினை விவரிக்கலாம் அல்லது கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் அதில் நித்தமும் வாழ்வது சாத்தியமல்ல அதனைக் கடந்து வந்த நாம் நிச்சயம் அதனை மிச்சம் மீதியின்றி மறந்திருப்போம். குழந்தைகளின் செயல்களின் வார்த்தைகளின் விவரிப்புகள் கொண்டு அது இப்படி இருக்கலாம் என யூகம் மட்டுமே செய்யலாம். ஆனாலும் அவர்களின் உலகத்தை பெற்றோராகிய நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு பெற்றோருக்கும் அந்தத் தேவை அதிகரித்து உள்ளது, முன் எப்போதும் இல்லாதது அளவிற்கு. மாறி வரும் சமூகச் சூழலும், புதிய தொழில்நுட்பமும், அவசர வாழ்வும், கலாச்சார மாற்றங்களும் குழந்தைகளை இன்னும் அக்கறையுடன் அணுக நம்மை நகர்த்துகின்றது.

குழலியின் பள்ளி வாழ்கை எப்படி இருக்கும் எனப் பல சமயம் யோசனை செய்தும், பயந்ததும் உண்டு. குழந்தைகள் தான் மீண்டும் மீண்டும் தாங்கள் வளர்ந்துவிட்டதை உணர்த்துகின்றார்கள். சிறுதுளி கண்ணீர் இல்லாமலே பள்ளியினை உள்வாங்கிக்கொண்டாள். அவளது உலகில் அது ஒரு அறை, ஒரு நாடு, ஒரு ஊர். பள்ளிவிட்டு வந்த முதல் நாள் மாலை ஆரம்பித்த அவளுடைய விவரிப்புகள் அந்த ஆண்டின் கடைசி நாள் வரை முடியவே இல்லை.

அவளின் கற்பனை உலக நண்பர்கள் அனைவரும் எங்களுக்கு அத்துப்படி. அவளது நிஜ உலக நண்பர்களின் ஒவ்வொரு பெயராக ஏதோ ஒரு சம்பவத்தின் ஊடே அறிமுகம் செய்வாள். சில்வா பானு மஞ்ச பூ வெச்சு இருந்தா, மணிகண்டன் காலில் அடி, ரோஷன் ஸ்கூலுக்கு வரல, வசந்த கிருஷ்ணன் வீடு மாறிட்டான்/ வகுப்புகளுக்கு இடையேயும், உணவு இடைவேளைகளின் பொழுதும், காலை வேளையும், பயண வேளைகளும் தான் வகுப்புகளில் கற்காத பாடங்களையும் அனுபவங்களையும் உறவுகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தருகின்றது.

எங்க வீட்டில் குழலி பேச ஆரம்பித்த உடனே நாங்கள் (நான், மனைவி, அப்பா, அம்மா) சற்றே பெரிய காதுகளை வளர்க்க ஆரம்பித்தோம். நிதானமாகக் குழந்தை சொல்வதை மாறி மாறி கேட்போம். கேட்பதோடு அல்லாமல் அதனைக் கவிதையான தருணங்களாக்கி இரசிக்கவும் செய்தோம். குழந்தைகளுக்கு அதிக நேரம் அவர்களின் பிரச்சனைகளை, பயங்களை, தவறுகளை நம்மிடம மறைக்க முடியாது, தெரியவும் தெரியாது. அவர்களின் சொற்களின் வழியே அவை வழிந்தபடியே இருக்கின்றன. நாம் தான் அவற்றை அடையாளம் கண்டு கொண்டு நிவர்த்திச் செய்ய வேண்டும்.

நாளின் மிகச் சிறப்பான தருணங்களாக நான் உணர்ந்தது மகளை வண்டியின் டேங்கில் அமர்த்திப் பள்ளிக்குச் செல்லும்போது நிகழ்த்தும் உரையாடல்களைத்தான். அவளின் பள்ளி நண்பர்களிடம் செலவிடும் சில விநாடிகளில் அந்நாளிற்கான உற்சாக பானமாய் அமைந்துவிடும். விநோதமாக, வண்டியில் செல்லும் போது குழலியின் கவனமும் கேட்கும் திறனும், கதை வளமும் அதிகமாக இருந்தது. பள்ளியில் சேரும் முன்னரே அவளுக்குச் சொல்லிக்கொடுத்த பாடல்கள் அனைத்தும் இந்த டேங்கரில் அமர்ந்த படியே.

குழலியின் நண்பர்களுக்குள் என்னையும் இணைக்கத் துவங்கினேன். பள்ளி வேனில் வரும் குழந்தைகள் வகுப்பிற்குக் கொஞ்சம் முன்னரே வந்துவிடுவார்கள். தினமும் அவர்களுடன் பத்து நிமிடம் தான் செலவு செய்வேன். அன்றைக்குத் தேவையான சக்தியினையும் உற்சாகத்தையும் ஊட்டிவிடுவார்கள். வெறும் களத்தினையும் உரையாடலுக்கான ஆரம்பத்தினை மட்டுமே அவர்களுக்கு நான் தருவேன், அதுவும் சில நேரத்தில் தான்.

ஊருக்கு போன கதை, போகப்போகிற கதை, அவள் லீவு, அவனுக்கு முட்டியில அடி, குர்ஷாத்துக்கு உடம்பு சரியில்லை, எங்க சித்தி தான் என்னை ஸ்கூட்டர்ல விட்டாங்க, எங்க அப்பா யாரு தெரியுமா?, எனக்கு தம்பி பாப்பா பொறந்திருக்கே, எனக்கு கைல அடி, நான் ஹோம்வொர்க் செய்யல, நான் ஏரோப்ளைன் பார்த்தேன், நானும், நான் கூட, மிஸ் என்னை குட் பாய் சொன்னாங்க, என் பொம்மை உடைஞ்சிடுச்சு, உங்க வீட்டுக்கு வரேன், குழலிக்குச் சாக்லெட் கொடுத்தேன், நான் லட்டு சாப்பிட்டேன், எனக்கு வயித்து வலி...இவ்வாறாகக் கதைகள் நீளும் சுவாரஸ்யமாக.

இங்கே இவர்களுடன் நான் பகிர்ந்ததெல்லாம் ஒரு கைநீட்டலும் காது நீட்டலும் தான். அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டேன். தினமும் இருந்த உரையாடல் தொடர்ந்தது. அப்போது கவனித்த விஷயம் இவர்களின் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் காது கொடுத்து கேட்கப்படுவதே இல்லை. நமக்குச் சின்ன விஷயமாக இருக்கலாம், ஆனால் அவர்களின் குதூகலத்திற்கு அதுவே வித்தாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் பேச விடப்போவதில்லை, எத்தனை மாணவர்களுக்குத் தான் அவர்கள் காது கொடுப்பது ? முடிந்த அளவிற்கு அவர்களும் தர தான் வேண்டும். அடுத்தது பெற்றோர்கள். இவர்களுக்கு இந்த முழுப் பொறுப்பும் இருக்கின்றது. அவர்கள் கூறுவதைத் கவனமாக கேளுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளைக் காது கொடுத்துக் கேளுங்க, கேள்விகளை நசுக்கிவிட வேண்டாம். கேள்விக்கு பல சமயம் பதில் தெரியாமல் போகலாம், அல்லது கேள்விகேட்கும்போது நமக்கு உடல்சோர்வு, வேலை பளு இப்படி இருக்கலாம், ஆனால் கேள்விகேட்கும் அவர்கள் ஆர்வத்தை நசுக்கிவிட வேண்டாம்.

குழந்தைகளின் உலகினை முழுமையாகப் புரிந்துகொள்ளப் பெரிய காதுகள் அவசியமாகின்றது. அதன் மூலமே அவர்களின் சொல் வளமும் நமக்குத் தெரியும். அவர்களின் கதை சொல்லும் திறன் நமக்கு விளங்கும். அவர்கள் நம்மிடம் விரும்புவது எதைவிடவும் நம் காதுகளைத்தான்.

பள்ளியின் கடைசி நாள். குழலியை வகுப்பில் விட்டு அவளுடைய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வெளியே வந்தேன். கொஞ்சம் சோர்வாககூட இருந்தது கடைசி நாள், இனி கொஞ்ச காலத்திற்கு எல்லோரையும் பார்க்க முடியாது என்று. தூரத்தில் குழலியின் வகுப்பு தோழி மிகச்சோர்வுடன் மெல்ல அவள் தாயுடன் நடந்து வந்தாள். இந்த வயதில் என்ன வாட்டம் என்று தெரியவில்லை. சில முறை அவளுடன் பேசி இருக்கேன். எனக்குக் கை கொடுப்பதில் அவ்வளவு ப்ரியம் அவளுக்கு. தூரத்தில் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்து ஓடி வந்தாள். கை கொடுத்தாள். 'குழலி எனக்கு நேத்து ஒரு நூல் கொடுத்தா' ( துணியில் இருக்கும் நூல். அது இவர்களுக்குள் ஒரு விளையாட்டு) 'லீவுக்கு நான் நாளைக்கு ஊருக்கு போனேன் (போறேன்)..' இப்படியாகப் பேச ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா 'வா வா நேரமாச்சு பாரு..' எனத் தள்ளிக்கொண்டு போனார்கள்.சோர்வாக இருந்தவள் மிக உற்சாகமாக மாறி இருந்தாள். திரும்பி ஒரு டாட்டா காட்டிவிட்டு மறைந்தாள். என்னிடம் வந்து பேசியதற்கு முக்கியக் காரணம் அவர்களிடம் காட்டிய என் பெரிய காதுகளை மட்டும் தான்.

பெற்றோர்களே, கொஞ்சம் பெரிய காதுகளை வளர்த்துக்கொள்ளுங்கள் !



குமாரின் சுற்றுலா


குமார் ஐந்தாம் வகுப்பிற்குச் செல்கிறான். முதல் நாளில் இருந்தே அவன் கனவு அந்த வருட சுற்றுலாவிற்குச் செல்வது தான். அப்பா ஆட்டோ ஓட்டுனர். அம்மா வீட்டின் அருகே இருக்கும் துணிக்கடையில் வேலை செய்கிறாள். குமார் முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறான். முத்தையா என்கின்ற பெரியவர் ஒருவர் இந்தப் பள்ளியை நிர்வகிக்கிறார். நல்ல மனம் படைத்தவர். குமார் போன்ற ஏழை மாணவர்களுக்குப் புத்தகத்திற்கான கட்டணம் மட்டும் வாங்கிக் கொள்வார். குமார் ஓரளவு சுமாராகத் தான் படிப்பான். 

அவன் கனவினைச் சொல்லவில்லையே. அவன் அந்த வருடத்தின் கனவெல்லாம் அவர்கள் பள்ளியிலிருந்து வருடா வருடம் செல்லும் சுற்றுலாவிற்குச் சென்று வருவது தான்.நான்காம் வகுப்பில் படிக்கும் போது சுற்றுலா செல்லும் சமயம் வீட்டில் காசில்லாமல் போய்விட்டது. அதனால் குமாரால் சுற்றுலாவிற்குச் செல்ல முடியவில்லை. நண்பர்கள் சென்று வந்து அவர்கள் அனுபவத்தைச் சொன்னபோது பேராசையாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் அழுதான். அடுத்த வருடம் எப்படியும் தானும் சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான். சின்ன உண்டியல் தயார் செய்தான்.எப்போதெல்லாம் காசு கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் அதில் சேமித்து வந்தான். ஊரில் இருந்து அத்தை, பாட்டி வரும் போது காசு கொடுப்பார்கள், அதையும் போட்டு வைத்தான். கடைக்குச் சென்று வரும்போது மீதம் இருக்கும் ஒரு ரூபாய், 50 காசுகளை அம்மாவின் அனுமதியோடு உண்டியலில் போட்டுச் சேமித்து வந்தான். 

ஐந்தாம் வகுப்பில் நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஒரு நாள் ஆசிரியர் வகுப்பிறகு வந்து "அடுத்த வாரம் சென்னைக்குச் சுற்றுலா செல்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை 3 நாட்களுக்குள் தெரிவுக்க வேண்டும்'' என்றார். ''கட்டணம் 200/- ரூபாய்" என்றார்கள். குமாருக்கு உண்டியலில் 200 ரூபாய் சேர்ந்து இருக்குமா இல்லையா என்ற சந்தேகம். வீட்டிற்குச் சென்று உடைத்துப் பார்த்தான். 128 ரூபாய் இருந்தது. அப்பாவிடம் தனக்கு 72 ரூபாய் வேண்டும் என்று கேட்டான். ஆசிரியரிடம் பெயரும் கொடுத்துவிட்டான். சுற்றுலா கட்டணத்தைக் குமார் மட்டும் கட்டவில்லை மற்றவர்கள் கட்டிவிட்டார்கள். அவன் அப்பா கடைசி நாள் தான் தர முடியும் என்றார்.ஆசிரியரிடம் பேசி பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் தரவேண்டும் என்ற ஒப்புதல் பெற்றான்.அன்றிருந்து தினமும் சுற்றுலா பற்றிய கனவு தான். 

மறுநாள் சுற்றுலா. அன்றிரவு தூக்கமே வரவில்லை.அம்மாவிடம் தனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று சொல்லிவிட்டான். பேருந்தில் யார் அருகினில் உட்கார வேண்டும் என முடிவுச் செய்துவிட்டான். புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவேயில்லை. சென்னை எப்படி இருக்கும்? படத்தில் காண்பிப்பது போல அழகாக இருக்குமா? நிறைய மக்கள் இருப்பார்களா? மெரினா கடற்கரையில் குளிக்கலாம்.ஏதாவது கதாநாயகனை பார்க்கலாம்.முதலமைச்சரை வழியில் காணலாம். இன்னும் ஏகப்பட்ட யோசனைகள். 

காலை சரியாக 5.30 மணிக்கு பள்ளிக்குப் பேருந்து கிளம்பும், 5 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.குமார் 4 மணிக்கே தயாராகிவிட்டான்.அம்மாவை எழுப்பிக் காலை, மதிய உணவினை செய்து தரச்சொன்னான். அப்பா இரவு வரவில்லை, இந்த வாரம் இரவில் வண்டி ஓட்டுகின்றார். முடிந்தால் வந்து பள்ளியில் விடுவதாகவும், இல்லையெனில் குமாரே பள்ளிக்கு செல்லுமாறும் சொல்லிவிட்டு சென்று இருந்தார் அப்பா. காலை 4.30 மணியாகியும் அவர் வரவில்லை, அதனால் தானே கிளம்பி பள்ளிக்குச் சென்றான். 

விடியற்காலை என்பதால் இன்னும் இருட்டாகத் தான் இருந்தது. பள்ளி நெருங்கும் தெரு முனையில் முனகல் சத்தம் கேட்டது. முதலில் பயந்துவிட்டான், பின்னர், சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்வை திருப்பினான். வயதான பாட்டி ஒருத்தியின் முனகல் தான் அது. கூனிக்குறுகியத் தெருவின் ஓரத்தில் உள்ள ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் படுத்திருந்தாள். வாடிய முகம். இரவெல்லாம் கத்தி தொண்டை வரண்ட சத்தம். 

"என்ன பாட்டி? என்னாச்சு?" 

"இரண்டு நாளா சாப்பிடல." பாட்டியிடம் இருந்து ஒரு பெரும் மூச்சு " உடம்புக்கு முடியல.மருத்துவரை பார்க்க காசில்லே.ஆங்.." மீண்டும் முனகல் யோசித்தான் குமார். தன் சுற்றுலா முக்கியமா, இல்லை இந்தப் பாட்டி முக்கியமா என்று. தன் கையில் இருந்த 200 ரூபாயும், காலை மதிய உணவு பொட்டலத்தையும் கொடுத்துவிட்டு, தனது வீட்டை நோக்கி மெல்ல நடந்தான். 

பாட்டியிடம் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும் தன் சுற்றுலா ஆசை நிறைவேறவில்லையே என்று, அழுது கொண்டே அம்மாவிடம் நடந்ததைச் சொன்னான். வாரி அணைத்துக்கொண்டாள் அம்மா. வாசலில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா சென்று திறந்தாள். அங்கே குமாரின் ஆசிரியர் நின்றுகொண்டிருந்தார்.பயந்துவிட்டான் குமார். அவன் வீட்டு வாசலில் பள்ளி பேருந்து நின்று கொண்டிருந்தது .மாணவர்கள் "ஹோ" எனச் சத்தமிட்டு குதூகலித்தபடி. 'குமார் சீக்கிரம் வாடா'.. 

"நான் வரவில்லை சார். பணம் இல்லை". அழுதுகொண்டே கூறினான் குமார். 

"குமார் உன் நற்செயலை நம் பள்ளி முதல்வர் முத்தையா தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அந்தப் பாட்டியை அவர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டா.உனக்கு தன் பாராட்டினை தெரிவித்து, வீட்டிற்குச் சென்று சுற்றுலாவிற்கு அழைத்து வர கூறினார். நீ என் மாணவன் எனச் சொல்லிக் கொள்வது பெருமையாக இருக்கின்றது குமார்"

அம்மா ஆனந்த பூரிப்பில் தன் மகன் சுற்றுலா செல்வதைப் பார்த்து கையசைத்தாள். ஹே என்ற சத்தம் ஓய வெகுநேரமானது.



'பேரு மறந்துபோச்சு' - ரஞ்சன குழலி


ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்தா. இல்லை இல்ல அது ஊர் இல்ல, அது ஒரு காடு. அவ பேரு..'பேரு மறந்துபோச்சு'. அவன் ரொம்ப உயரமா இருப்பா. வானம் உயரம். அந்த காட்டுல எல்லோரும் மண்ணு தான் சாப்பிடுவாங்க. ஆனா இவ மட்டும் தான் சோறு சாப்பிடுவா. இவளுக்கு ஒரு அம்மா ஒரு அப்பா (அட). அவங்க அம்மா இவளை தேடிட்டு இருந்தாங்க. "செல்லம்மா, கண்ணு..எங்க இருக்க..வந்து சாப்பிடு..". "இதோம்மா, மேகத்தோட விளையாடிட்டு இருக்கேன். வரேன்"ன்னு சொன்னாளாம். அவளோட பேர நீங்க கேட்கவே இல்லையே. மறந்துட்டீங்களா? அவ பேரு 'பேரு மறந்துபோச்சு'

அவங்க அப்பா அம்மா குட்டியா நம்மள போலத்தான் இருப்பாங்க. அவ மட்டும் பெருசா இருப்பா. அவ பெருசா இருந்து குட்டியா மாற 'ஜீபூம்பா' சொல்லுவா. ராத்திரி தூங்கும்போது குட்டியா மாறி வீட்ல படுத்துப்பா. திரும்ப அவ பெரிசா ஆகணும்னா 'பாம்பூஜி'ன்னு சொல்லுவா. பெருசா மாறிடுவா.

அவங்க வீட்டு பக்கத்தில அவளுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பேரு 'வீடு'. ஆனா அவன் இருந்தது ஒரு குடிசை. அவங்க அம்மா அப்பா கூடத்தான் அவன் இருந்தான். குட்டி வயசுல இருந்து ரெண்டு பேரும் ஒன்னா தான் விளையாடுவாங்களாம்.

ஒரு நாள் 'பேரு மறந்துபோச்சு', அவ அம்மா, அவ அப்பா மூனு பேரும் வெளிய எங்கயோ போயிருந்தாங்களாம். அப்ப ஒரு திருடன் அவங்க வீட்டுக்கு வந்தானாம். சுத்தி முத்தி பார்த்துட்டு அந்த வீட்டையே திருடிட்டு போனானாம். குடிசையில இருந்து 'வீடு' இதை எல்லாம் பார்த்துட்டே இருந்தானாம். என்ன செய்யறதுன்னே தெரியலையாம்.

அப்பாவும் அம்மாவும் வெளிய போயிட்டு வந்து பார்த்தா வீட்டை காணோமாம். பேரு மறந்துபோச்சு எங்க போனான்னு தெரியலை. மேகத்தோட போய் மழைய பாக்குறதா சொல்லி இருந்தாளாம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வீட்டை எங்க தேட்றதுன்னு யோசிச்சாங்களாம். பேரு மறந்துபோச்சு எங்க வீடுன்னு பயந்துடுவாளேன்னு நினைச்சாங்களாம். அப்ப தான் 'வீடு' ஓடி வந்து திருடன் வீட்டை எடுத்துட்டு போன விஷயத்தை சொன்னானாம். சரின்னு பேரு மறந்துபோச்சோட அப்பா அம்மா, வீடு, வீட்டோட அப்பா அம்மா எல்லோரும் அவங்க வீட்டை தேடினாங்களாம். ஒரு மரத்து மேல திருடன் வீட்டை வெச்சிருந்தானாம். பசிக்குதுன்னு சமைச்சு வெச்சிருந்தானாம். இவங்களும்மும் பசியா இருந்ததால எல்லாரும் அங்க சாப்பிட்டாங்களாம். அப்புறம் எப்படி எங்க வீட்டை திருடலாம்னு செம அடி அடிச்சு திருடனை கட்டி போட்டுட்டாங்களாம்.

'அம்மா அம்மா' எங்க இருக்கீங்கன்னு 'பேரு மறந்துபோச்சு' ராத்திரி ஆனதால தேடிகிட்டு வந்தாளாம். எல்லா கதையையும் சொன்னாங்களாம். திருடன்கிட்ட 'திருடன் திருடன், இனி திருடக்கூடாது சரியா?'ன்னு சொல்லி கயிற கழற்றிவிட்டுட்டாளாம். எல்லாரும் மரத்தில இருந்து வீட்டை குடிசை பக்கத்தில போய் வெச்சாங்களாம். 'அம்மா தூக்கம் வருது தூங்கறேன்'ன்னு பேரு மறந்துபோச்சு தூங்கிட்டாளாம். திருடனும் அவங்களோடையே தூங்கிட்டானாம். அது தான் கிளைமேக்ஸ்.



நீநிஜூஜூவின் சாகச பயணங்கள் - குழலி


    நீநிஜூஜு என்ற சிறுமி  ஒருத்தி இருந்தாள்.  அவள் ஒரு மாயச் சிறுமி, மந்திரங்கள் தெரிந்தவள். அவளுக்கு அடுக் என்ற சிறுவனும், குடுக் என்ற ஒரு தேவதைப் பெண்ணும் நண்பர்களாக இருந்தார்கள். நீநி இவர்களைவிட ஒரு வயது பெரியவள். இவர்கள் நம்முடைய உலகத்தில் தான் வாழ்கின்றார்கள். அவர்களை நம்மால் பார்க்க முடியாது. அது ஒரு சுவையான மாய உலகம்.  நீநி பதமா சுப்பிரமணி பால என்ற ஒரு பள்ளியில் படிக்கிறார்கள்.  அது எங்கே இருக்கின்றது என்று யாருக்குமே தெரியாது.  ஆனால் அந்தப் பள்ளி நிச்சயமாக இருக்கிறது, ஏனெனில் இவர்கள் தான் தினமும் சீருடை அணிந்து செல்கின்றார்களே.  

    இவர்கள் மூவருக்கும் மற்றும் ஒரு நண்பர் உண்டு.  அது ஒரு யானை. அந்த யானையின் பெயர் குல்பி.  நீநி, அடுக் மற்றும் குடுக் மூவரும் குல்பி மீது அமர்ந்து காட்டில் உலா வருவார்கள்.  குல்பி மிக வேகமாக நடக்கும். ஒரு மணி நேரத்தில் காட்டையே ஒரு சுற்று சுற்றி வந்துவிடும், மற்ற யானைகளை விட உருவத்தில் மிகவும் பெரியது.  பெரிய தொப்பையும் வைத்திருக்கும்.  ஒரு நாள் நீநிஜூஜு, குல்பியை தன் குட்டி வீட்டிற்கு அழைத்து சென்றாள். குட்டி வீடு என்பதால் குல்பி உள்ளே நுழைந்தவுடன் அந்த வீடு உடைந்து விட்டது.  டமால் என்ற பெரும் சத்தத்துடன்.  அடுக்கும் குடுக்கும் நீநியை சமாதானம் செய்து ‘நண்பா அழாதே நாம நாலு பேரும் பால் ஊருக்கு போகலாம் வாங்க’ என்று கூறினார்.  

    அந்த ஊரின் பெயர் “Ball” (பந்து). ஆமாம் பால் தான்.  அந்த ஊரில் வீடுகளே இல்லை எல்லாமே பந்து தான்.  பந்திற்குள் தான் தங்கிக்கொள்ள வேண்டும், இல்லை இல்லை பந்து தான் வீடே. பந்துகள் வேறு வேறு அளவிலும், பலவித வண்ணங்களிலும் இருக்கும்.  ஊருக்குள் வந்தவுடன் ஒரு கவுண்டரில் சென்று என்ன அளவில், என்ன வண்ணத்தில் பந்து வேண்டும் என்று சொல்ல வேண்டும்.  உடனே கேட்ட அளவில், கேட்ட வண்ணத்தில் ஒரு பந்து தயாராகும்.  அந்த கவுண்டரும் பந்து தான்.  இந்த ஊருக்கு வந்தவுடன் பந்து போன்ற ஆடைகளை போட்டுக்கொள்ள வேண்டும்.  பேருந்துகளும் பந்து வடிவத்தில் தான் இருக்கும்.  

     நீநியும் அவள் நண்பர்களும் பால் ஊருக்கு பறந்து வந்து சேர்ந்தனர்.  ஊரைச் சுற்றி பார்த்தார்கள்.  அவர்களுக்கு மிகவு பிடித்துவிட்டது.  நீநி பிங்க் நிற பந்தையும், அடுக் வெள்ளை நிற பந்தையும், குடுக் கறுப்பும் சிவப்பும் கலந்து பந்தையும், பெற்றனர்.  குல்பியின் பந்தை தயாரிக்க தான் நேரம் பிடித்தது.  அது கேட்ட இளம் பச்சை நிற பெயிண்ட் வேறு காலியாகி இருந்தது. அதுவும் இல்லாமல் பெரிய அளவு வேறு அல்லவா.

      நால்வரும் அவர்களுடையை பந்துகளை தள்ளிக்கொண்டு ‘Round’ வீதி என்ற சாலைக்கு வந்து சேர்ந்தனர்.  வெகு தூரம் பயணம் செய்து வந்ததால், சீக்கிரமே தூங்கிவிட்டனர்.  மறுநாள் காலை குல்பி தான் மற்ற மூவரையும் எழுப்பியது.  

    ‘நணபர்களே, பசிக்கிறது வாங்க, சாப்பிட போகலாம்’ என்றது.  மற்ற மூவரும் கொஞ்ச நேரத்தில் தயாராகி ஓட்டலுக்கு சென்றனர்.  ஓட்டலும் பந்து வடிவில் தான் இருந்தது.  இருக்கையும் பந்து, மேஜையும் பந்து, என்ன சாப்பாடு இருக்கிறது என்று கேட்கும் முன்னரே மேஜையில் உணவு பரிமாறப்பட்டது.  

        நல்லவேளை தட்டு நம்ம ஊர்களில் இருப்பது போல இருந்தது.  அதில் வட்டமான ஒரு விநோத காய் அரிந்து வைக்கப்பட்டு இருந்தது.  குல்பி கட கடன்னு சாப்பிட்டு விட்டது.  அடுக்கும் குடுக்கும் கூட சாப்பிட்டாங்க தண்ணீர் பாக்கேட்டும் அங்கே பந்து வடிவத்தில் தான் இருந்துச்சாம்.

      ‘ஏய் நண்பா, ஏன் சாப்பிடல’ என்றி நீநியை மூவரும் கேட்டாங்களாம்.

    ‘எனக்கு இந்த சாப்பாடு பிடிக்கல கூடா இட்லியும் சிக்கன் குழம்பும் வேணும்’ன்னு நீநி சொன்னாளாம். சரி இப்ப கிடைப்பதை சாப்பிடு அப்புறமா நீ கேட்டதை தேடலாம் என்று நண்பர்கள் தேற்றினார்கள்.

      ஓட்டலில் கேட்டுப் பார்த்தாங்க, ஆனா அங்கே கிடைக்கல.  மஞ்சள் கலரில் இருந்த உருண்டையான டாக்ஸியில் ஏறி சிக்கன் குழம்பும் இட்லியும் கிடைக்கும் ஓட்டலை தேடினாங்க.  சில ஓட்டலில் சிக்கன் அப்படின்னாலே என்னான்னு தெரியல.  சில கடையில் இட்லின்னா என்னான்னு தெரியல.  அது என்ன இத்தாலியில் கிடைக்கும் சாப்பாடான்னு கேட்டாங்க.

      பந்து ஊரின் மூளை முடுக்கொல்லாம் சுத்தியாச்சு, ஆனா விவரம் எதுவுமே கிடைக்கல.  ரொம்ப சோர்ந்து இருந்த சமயம் தான் அந்த இசை கேட்டது.  எல்லோரையும் மயக்கிற மாதிரியான இசை அது.  ஆமாம் நீநி கண்டுபிடிச்சிட்டா, அது அவளோட அண்ணன் பீப்பியோட இசை.  அவன் ஒரு வீதிப் பாடகன்.  பெயர் பீப்பி.  பீப்பி ஊதுவதால் அவனுக்கு அந்த பெயர் வந்துடுச்சு.  அவன் ஊர் ஊரா பீப்பி ஊதிகிட்டே சுத்திகிட்டே இருப்பான்.  ‘பீப்பி அண்ணா………’ என கத்தினாள் நீநி.

      ஏன் சோகமா இருக்க நீநின்னு கேட்டு, அவளுடைய வருத்தத்திற்கான காரணத்தை கேட்டு அறிந்தான் பீப்பி.  கோழி குழம்பும் சூடான இட்லியும் Bat ஊரில் கிடைக்கும் வாங்க என கூட்டிக்கொண்டு போனான் பீப்பி.  பீப்பி ஊத மற்ற நால்வரும் பின்தொடர்ந்தனர்.

    Bat ஊரில் எங்கும் Batகள் தான்.  பால் ஊருக்கும் Bat ஊருக்கும் இருந்த வித்யாசம் ஒன்று தான்.  அங்கே எல்லாம் வெறும் பந்துகள் இங்கே விதவிதமான Batகள், shuttle Batகள், கிரிகெட் பேட், டென்னிஸ் பேட்கள் என்று இருந்தது.  ஒவ்வொரு ‘பேட்’டிற்கும் ஒரு தெரு.  அந்த தெருவில் அந்த வகையான பேட்கள் மட்டுமே இருக்கும்.

      இங்கும் குல்பிக்கு வீடு செய்து தருவதில் நேரமாச்சு. மற்ற மூவரும் ஒரே வீட்டில்  தங்கினார்கள். பீப்பி இவர்களை வீட்டில் தங்க வைத்துவிட்டு வீதி வீதியாக பீப்பி ஊத சென்றுவிட்டான்.  அவன் இசைக்கு எல்லா ஊரும் மயங்கியேவிடும். ஊதிக் கொண்டே ஓட்டல் ஒட்டலாக சென்று எங்கே சூடான இட்லியும் கோழி குழம்பும் கிடைக்கும் என்பதையும் கண்டுபிடித்தான்.  

    இரவாகிவிட்டது, அதனால் மறுநாள் காலையில் சாப்பிடலாம் என்று எல்லோரும் உறங்க சென்றுவிட்டனர்.  காலையில் எழுந்து பார்த்த போது தான் அந்த அதிசயம் நடந்து இருந்தது.  இரவெல்லாம் மழை பெய்து பெய்து பேட் ஊரே தண்ணீரால் நிரம்பி இருந்தது.  அவ்வளவு மழையாம்.  நிறைய்ய மழை பெய்து பக்கத்து ஊரான பால் ஊரில் இருந்து எல்லா பந்துகளும் தண்ணிரில் மிதந்து இந்த ஊருக்கு வந்துவிட்டது.  அதனால் பேட் ஊரில் சாலையில் எல்லாம் பந்துகள் வந்துவிட்டது.  பந்து வண்டிகளும் இந்த ஊருக்கு வந்துவிட்டது.     

பீப்பி மற்ற நால்வரையும் அழைத்து மெதுவாக வெளியே வந்தது.  படகு போன்ற பேட்டினை பிடித்து அதன்மீது ஏறி அந்த ஓட்டலுக்கு சென்றனர்.  ஆனால் இவர்கள் கொடுமைக்கு, அந்த ஓட்டல் பேட் அங்கே காணவில்லை மழைக்கு அடித்து சென்று விட்டது.  அட ராமா என நினைத்தது பீப்பி.  அந்த ஓட்டல் ‘பேட்’டின் அடையாளங்களை பீப்பி கூறியது.  அது ஒரு டேபிள் டென்னிஸ் பேட்.  பச்சை நிறத்தில் இருக்கும்.

      குல்பி ஒரு மந்திரத்தை சொன்னதும் அது வானம் வரை பறந்து மீண்டும் அந்த வண்டிக்கு வந்தது.  ‘பீப்பி நீங்க சொன்ன மாதிரி இன்னும் கொஞ்ச தூரத்தில ஒரு பேட் இருக்கு, வாங்க என் பின்னாடி’ன்னு சொல்லி கூட்டிகிட்டு போனதாம்.

    சரியா அந்த ஓட்டலுக்கு வந்துட்டாங்க.  அனைவரும் உள்ளே அமர்ந்து ‘சூடான இட்லுயும் கோழி குழம்பும் வேண்டும்’ன்னு கேட்டாங்க.  இதோ ஒரு நொடியிலன்னு சொல்லி சாப்பாடு வந்து, மம்மம்ன்னு எல்லோரும் சந்தோஷமா சாப்பிட்டாங்க.  நீநி வாவ்  என்று ரசித்து சாப்பிட்டாள்.

    வெளிய வந்து பார்த்தா எல்லா தண்ணியும் காணோம்.  குல்பி பாண்டான்னு ஒரு சிங்கம் எல்லா தண்ணியையும் குடிச்சிடுச்சு.  ‘நீநி உங்க கிளால் மிஸ் உன்னை தேடிகிட்டு இருந்தாங்க, சீக்கிரம் கிளம்பு’ன்னு குல்பி பாண்டா சொன்னதும் எல்லாரும் ஊருக்கு கிளம்பி வந்துட்டாங்க.

அவ்ளந்தான்.      



   

இளநெஞ்சம்


அது ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட். அந்த கட்டிடத்தில நிறையப் பால்கனி இருந்துச்சாம். அதுல ஒரு பால்கனி மேல ரெண்டு புறா கூடு கட்டுச்சாம். கூடு கட்டி அதுல ரெண்டு முட்டையும் போட்டுச்சாம். ஒரு அப்பா புறா ஒரு அம்மா புறா. சீக்கிரமே ரெண்டு குட்டிப்புறாக்கள் வரப்போகுதுன்னு ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம். அவங்களுக்கு என்ன பெயர் வெக்கலாம்னு தினமும் ரெண்டு பேரும் பேசி பேசி ரெண்டு பேருக்கும் சண்டையே வந்திடுமாம். ஆனால் ஒரு நாள் ரெண்டு பேரும் சாப்பாடு தேட வெளிய போனப்ப ஏதோ ஒரு பெரிய பறவை வந்து அந்தக் கூட்டுல இருந்த ஒரு முட்டையை உடைச்சிட்டுப் போயிடுச்சாம். ரெண்டு புறாவும் ரொம்ப வருத்தப்பட்டுச்சாம். இருக்கிற ஒரு முட்டையை எப்படியாச்சும் பாதுகாக்கணும்னு முடிவு செய்தாங்களாம். அதுக்கப்புறம் அப்பா புறா கூட்டிலயே இருந்து முட்டையைப் பாதுகாத்துச்சாம். அம்மா புறா சாப்பாடு ஏதாச்சும் எடுத்துகிட்டு வருமாம். அழகான குட்டிப்புறாவும் பொறந்துடுச்சாம். ஆனா அந்தப் பால்கனியில அவங்க இருந்த இடத்தில கட்டை எல்லாம் வெச்சி அடைச்சிட்டாங்கலாம். யாரோ அந்த வீட்டுக்காரங்ககிட்ட புறா வீட்ல இருந்தா கெடுதல்னு சொல்லி இருக்காங்க. பாவம் புறாக்கள் மூனும்.

திரும்ப இன்னொரு பால்கனியில கூடு கட்டினாங்களாம். அங்கயும் ரெண்டு முட்டை போட்டுச்சாம். ஆனால் இந்த முறை ரெண்டு முட்டையும் உடைஞ்சிடுச்சாம். அங்கயும் கட்டை வெச்சிட்டாங்களாம். எங்க போறதுன்னு தெரியாம யாருக்கும் தெரியாம ஒரு சின்ன திட்டுல மூனு பேரும் வாழ்ந்துட்டு வந்தாங்களாம்.

அதே வீட்டில ரஞ்சனான்னு ஒரு குட்டிப் பொண்ணும் இருந்தாளாம். முதலாம் வகுப்புத் தேர்வு முடிஞ்சு விடுமுறை விட்டிருந்தாங்களாம். அவ ஒரு நாள் வாசல்ல உட்கார்ந்துகிட்டு வண்ணம் தீட்டிக்கொண்டு இருந்தாளாம். வெயில் நிறைய வந்துட்டதால வெளிய போய் விளையாட முடியல. அவங்க அப்பா ஒரு பெயிண்ட் பிரஷ்ஷும் கலர்ஸும் வாங்கிக் கொடுத்து இருந்தாராம். என்ன வரையலாம்னு யோசனையா இருந்தாளாம் ரஞ்சனா. ‘நீ அழகா வரைஞ்சி கொடுத்தா ஏதாச்சும் பத்திரிக்கைக்கு அனுப்பி உன் பேரு போட்டோ எல்லாம் போட வெக்கறேன்’ன்னு சொல்லிட்டு அலுவலகம் போயிட்டாராம் அவங்க அப்பா. அவங்க அம்மாவும் குட்டி பாப்பாவுக்கு சாப்பிட பலகாரம் செய்ய சமையல் அறையில இருந்தாங்களாம். அன்னைக்கு மாலை ரஞ்சனாவை பார்க்க ஊரில் இருந்து அவளுடைய உறவினர்கள் வருவதாக இருந்துச்சு.

இன்னும் என்ன வரையறதுன்னு ரஞ்சனாவிற்கு யோசனையே வரல. அப்ப அந்தக் குட்டிப்புறா (மொதல்ல பொறந்தது இல்லையா) தத்தி தத்தி ரஞ்சனா கிட்ட வந்துச்சாம். முதல்ல ரஞ்சனா பயந்துட்டாளாம். அப்புறம் அந்தக் குட்டிப்புறா பேச ஆரம்பிச்சுதாம். “நீ ரஞ்சனா தானே. நான் உன் பேர கேட்டிருக்கேன். என்னை நீ பார்த்திருக்கியா? பயப்படதா ரஞ்சனா. என் பேரு குட்டிப்புறா.”

புறா பேசுதேன்னு ரஞ்சனாவிற்கு ஆச்சர்யம். “நீ எங்கயும் வெளிய போகலையா?”

“இல்லை ரஞ்சனா. ரொம்ப வெயிலா இருக்கில்லையா அதனால அப்பா அம்மா என்னை கூட்டிகிட்டு போகல”ன்னு புறா சொல்லுச்சாம்

“நீங்க ஏன் எங்க வீட்டிகிட்டயே இருக்கீங்க. உங்கள துரத்த இங்க நிறையத் திட்டம் போட்றாங்க. எங்காச்சும் போயிடலாம் இல்ல” என்றாளாம்.

அதற்குக் கொஞ்ச நேரம் யோசிச்சு குட்டிப்புறா சொன்னதாம் “ரஞ்சனா, இதோ இதே இடத்தில தான் சில வருஷங்க முன்னாடி எங்க தாத்தா, அவங்க தாத்தா எல்லாம் ஒரு மரத்தில வாழ்ந்து வந்தாங்களாம். அப்புறம் மரத்தை வெட்டிட்டு இங்க இந்தக் கட்டிடம் கட்டிட்டாங்க. எப்ப அப்பாவுக்கு இங்க இருந்தா தான் தூக்கம் வருதாம். எங்க தாத்தா பாட்டி தாலாட்டுற மாதிரி இருக்காம். எனக்கும் அப்படிதான் தோணுது. இது எங்க எடம்பா”

ரஞ்சனாவிற்கு என்ன சொல்றதுன்னு புரியல. சின்னப்பெண் தானே. “சரி எனக்குக் கொஞ்சம் தண்ணியும் அரிசியும் தருவியா? ரொம்பத் தாகமா இருக்குப்பா. வெளியவும் போக முடியல. பக்கத்தில எங்க தண்ணியும் இல்லை. ஏரி குளம் எல்லாம் தூரமா இருக்கு, அதுலயும் தண்ணியே இல்லைப்பா..” பாவமா சொல்லுச்சாம் குட்டிப்புறா.

கொஞ்ச யோசிச்ச ரஞ்சனா, உள்ள போய் ஒரு அகலமான வாய் வெச்ச பாத்திரத்தில தண்ணீரையும் கைப்பிடி அளவு அரிசி எடுத்துகிட்டு வந்தா. குட்டிப்புறாவோட கூண்டுக்கு பக்கத்தில அதை வெச்சிட்டான். “இனி உனக்குத் தினமும் தண்ணி வெக்கறேன். நாம ரெண்டு பேரும் நண்பர்கள். சரியா? ” சரி என்பது போலத் தலையாட்டியது குட்டிப்புறா.

ரஞ்சனா தண்ணீர் குடிக்க உள்ளே சென்றபோது குட்டிப்புறா தன் கால்களை வண்ணங்களை வைத்துப் பேப்பரில் அழகிய ஓவியம் வரைந்துவிட்டு தன் கூட்டிற்குப் பறந்துபோனது. அவ்வளவு அழகாக இருந்த அந்த ஓவியத்தை அவளுடைய நண்பர்கள் உறவினர்களிடம் காட்டி தன்னுடைய நண்பன் வரைந்தது என மகிழ்ந்தாள். யாருமே யாரந்த நண்பன் என கேட்கவே இல்லை.



அரவிந்தின் குட்டித் தோழன்


அரவிந்த் தினமும் காலையில் மொட்டை மாடியில் தான் படிப்பான். வழக்கம் போல ஒரு நாள் காலை, மாடிக்கு சென்றபோது புதிதாக ஏதோ பொருள் இருப்பதை கவனித்தான். அந்தப் பொருள் லேசாக அசைவதை கண்டான். அதன் அருகே சென்று பார்த்த போது அது அணில் போல தெரிந்தது. எங்கேயோ அடிபட்டு விழுந்து இருந்தது. மிகவும் மென்மையாக இருந்ததால் அதனை எடுக்க கொஞ்சம் தயங்கினான் அரவிந்த். எடுத்தாலும் எங்கே வைப்பது என்ற சந்தேகம் வேறு. மென்மையாக இருந்த அந்த உயிரை மிகவும் மென்மையான இடத்தில் வைக்க வேண்டும் அல்லவா. எதிலே வைப்பது?

சில நாட்கள் முன்னர் அரவிந்திற்கு விளையாடும்போது அடிபட்டது. அப்போது அவனது காயத்திற்கு மருந்திட நிறைய பஞ்சினை அவன் அப்பா வாங்கி வந்திருந்தார். சரி, அந்த பஞ்சினை படுக்கைபோல செய்து அதன் மீது பழைய துணிபோட்டு அதன் மீது அணிலை வைக்கலாம் என முடிவு செய்தான். கீழே சென்றே பஞ்சினையும் கொஞ்சம் துணிகளையும் எடுத்து வந்தான். ஆனாலும் அரவிந்திற்கு அது அணில் தானா என்பதில் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. பெரிய அணிலை பார்த்திருக்கின்றான், ஆனால் குட்டி அணில் எப்படி இருக்கும் என தெரியவில்லை. பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டிக்கு கீழே பாதுகாப்பான இடத்தில் அந்த மெத்தையையும் அணிலையும் வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றான். மாலை தன் நண்பர்கள் கீதா மற்றும் நந்தன் இருவரையும் அழைத்து வந்து காட்டினான். மதியம் சாப்பிடும்போதே அணிலைப்பற்றி சொல்லிவிட்டான். என்ன சாப்பாடு வைத்தாய் என்ற கேட்ட போது தான் அதற்கு சாப்பாடு வைக்க வேண்டிய நினைவு அரவிந்திற்கு வந்தது.

சில பழங்களை கீதாவும் நந்தனும் எடுத்து வந்திருந்தனர். இருவரும் அது அணில் தான் என்று உறுதி செய்தனர். ஏதோ பறவை ஒன்று அணிலை எடுத்துக்கொண்டு பறந்து சென்றபோது தவறி கீழே விழுந்திருக்க வேண்டும் அதனால் அடிபட்டிருக்கும் என்று யூகித்தனர். அணில் தண்ணீர் குடிக்குமா என அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் மொட்டை மாடியில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு வைத்த அகல் விளக்கு ஒன்று இருந்தது. அதில் தண்ணீர் நிரப்பி வைத்தனர். காலையில் செய்து வைத்த பாதுகாப்பினை விட மாலை மூவருமாக சேர்ந்த நல்ல பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். அணிலால் நகர முடியவில்லை. மேலும் அது சின்ன அணிலாக இருந்தது. மூவரும் சில நாட்கள் அணிலை பத்திரமாக பாதுகாத்தனர். காலை, மாலை எந்நேரமும் மொட்டைமாடியில் அணிலுடன் கழித்தனர்.

சில நாட்களில் அணில் நடமாட ஆரம்பித்துவிட்டது. “அரவிந்த், இதற்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று கேட்ட போது தான் அதற்கு பெயரே வைக்கவில்லை என்பதை உணர்ந்தனர். மூன்று நாட்கள் ஆலோசனைக்கு பின்னர் அணிலுக்கு ‘மகி’ என்று பெயர் வைத்தனர்.

மகியின் காயம் ஆறிவிட்டது. மகி பெரிதாகவும் வளர்ந்து விட்டது. அரவிந்த் அதனை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டான். அரவிந்த் பேசுவது மகியிற்கு புரிந்தது. மகியின் வரவால் அரவிந்த் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருந்தனான்.

ஒரு ஞாயிற்றுகிழமை காலை மகியிடம் “மகி. இப்ப நீ பெரிய அணிலாக மாறிவிட்டாய். இனி நீ எங்க வீட்டை மட்டுமே சுற்றி வரக்கூடாது. இன்னும் நிறைய ஊர்களையும் இடங்களையும் நீ பார்க்கவேண்டும். போ நண்பா. நிறைய இடங்களை பார். நிறைய நண்பர்களோடு பழகு. என்னைப் பார்க்க வேண்டும் போல இருந்தால் திரும்பி வந்து பாரு. உன்னை நான் மறக்க மாட்டேன். நீ எனக்கும் என் நண்பர்களுக்கும் நிறைய சந்தோஷம் கொடுத்தாய். நாங்கள் அடிக்கடி உன்னைப்பற்றி பேசுவோம். சரி. இப்ப நீ கிளம்பு” என்றான் அரவிந்த். அரவிந்த் இந்த முடிவினை அவன் நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் மறுத்தனர். ‘மகி’ நம்முடனே இருக்கட்டுமே என்றார்கள். அரவிந்த் ‘இல்லை மகி நம்முடன் இருப்பது நமக்கு பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் அவன் நிறைய இடங்களை பார்க்கவேண்டும். உண்மையான அன்பு அடுத்தவர் நலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்” என்றான். நண்பர்கள் ஒத்துக்கொண்டார்கள். அதன்பிறகே மகியுடன் இதனை கூறினான். மகிக்கு அவன் சொல்வது புரிந்தது.

மகி சில நிமிடம் அங்கேயே இருந்தது. பிறகு மொட்டை மாடியை நான்குமுறை சுற்றி வந்தது, அரவிந்த் மீது ஏறி ஏறி இறங்கியது. பின்னர் கிளம்ப தயாரானது. மகி கிளம்பிய சமயம் கீதாவும் நந்தனும் அரவிந்துடன் சேர்த்துகொண்டனர். மூவர் டாட்டா காட்டி மகியை அனுப்பி வைத்தனர். மகி பாய்ந்து பாய்ந்து மறைந்தது.



மாண்டோக்கள் செய்த உதவி


ஓ என்னு ஒரு மான் அழுதுகிட்டே வந்துது. அதனுடைய நண்பனை அந்தக் கொடூர புலி கொன்றுவிட்டது என்று தெரிவித்தது. இது கிட்டத்தட்ட வழக்கமாகிவிட்டது. சில மாதங்கள் முன்னர் வரையில் அந்தக் காட்டில் சுமார் ஐநூறு மான்கள் இருந்தன. இப்போது வெறும் நானூறு மான்கள் மட்டுமே இருக்கின்றன. என்னாச்சு அந்த நூறு மான்களுக்கும்? புதிதாக வேறு ஒரு காட்டில் இருந்து கொடூர புலி, மான்களின் காட்டிற்குள் நுழைந்துவிட்டது. தினம் 2-3 மான்கள் என வேட்டையாடி குவிக்கின்றது. மான்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. புலி வேகமாக வேறு ஓடுகின்றது தப்பிக்கவும் முடியவில்லை. புலியை சரிகட்ட என்ன செய்யலாம் என்று மான்கள் ஆலோசனை நடத்தின. இரவு ஒரு பெரிய மரத்தின் கீழ் கூடினார்கள். ஒரு மான் ”நாம் காட்டையே காலி செய்துகொண்டு வேற காட்டிற்குச் போய்விடலாம் அல்லது இங்கேயே இருந்து ஒவ்வொருவராக இறக்க வேண்டி இருக்கும்” என்றது. மற்றொன்று “அதெப்படி பிறந்த காட்டிவிட்டு வெளியே போவது?” என்றது. போகலாம் போகவேண்டாம் என மாறி மாறி ஆலோசனைகள் வந்தன.

'13 சிறப்பு மாண்டோக்களை அழைக்கலாம்' என்ற யோசனையை ஒரு புள்ளிமான் தெரிவித்தது. எல்லோரும் அந்த விநோத யோசனையை சொன்ன புள்ளிமானை கவனித்தனர். அதென்ன 13 சிறப்பு மாண்டோக்கள்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. வயதான கவரிமான் ஒன்று அந்த சிறப்பு மான்களைப் பற்றி விளக்கியது. அவர்களை மாண்டோ என அழைப்பார்கள். அவர்களும் மான் தான். எதிரிகளைத் தாக்க சிறப்பு பயிற்சிகளை பெற்றவர்கள். அவை பத்து தென்னை மரங்கள் உயரம் வரை பாயும், புலிகளைவிட எட்டு மடங்கு வேகமாக ஓடும், காடே அதிரும்படியான சத்தங்களை எழுப்பும் என்றது. எல்லா மான்களுக்கும் நம்பிக்கை பிறந்தது. எல்லா மான்களைக் கைதட்டி அவர்களைக் கொண்டுவர ஒப்புதல் அளித்தன.

மறுநாள் காலையிலேயே ஊர் பெரியவர்கள் மாண்டோக்களை சந்திக்க கிளம்பினர். 13 சிறப்பு மாண்டோக்களிடம் அவர்கள் பிரச்சனையை தெரிவித்தனர். உதவி கேட்டார்கள். அவையும் மகிழ்வுடன் உதவி செய்ய சம்மதித்தது. அதன்படி ஒரு திட்டம் தீட்டியது. இது ரகசிய திட்டம், முக்கியமாக அந்த புலிக்கு தெரியக்கூடாது. ரகசியம் காப்பீர்கள் என்பதை திட்டம் உங்களுக்கும் சொல்லப்படுகின்றது.

சாதாரண மான்களுடன் இந்த 13 மாண்டோக்களும் கலந்து ஒன்றாகச் சுற்றுவது எனவும், அந்தப் புலி வந்த பின்னர் ஒவ்வொருவராக வலது பக்கம் அல்லது இடது பக்கமாக ஓடி தப்பிக்க வேண்டும். பாதுகாப்பான இடத்திற்கு சென்று காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். கடைசியில் அந்தச் புலியை இவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.

அன்றைய தினம் புலி மிகவும் பசியுடன் மான்களின் காட்டு பகுதிக்கு நுழைந்தது. தூரத்தில் நூற்றுக்கும் அதிகமான மான்கள் ஒன்றாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தன. அவைகளுடன் மாண்டோக்களும் கலந்து இருந்தன. சில மான்கள் தூரத்தில் புலி இருப்பதைக் காட்டி மற்ற மான்களை உஷார் செய்தது. புலி இவர்களை நெருங்கி மெதுவாக வந்தது. பதுங்கி பதுங்கி வருவதாக நினைத்துக்கொண்டது. திட்டப்படியே ஓட ஆரம்பித்த மான்கள் ஒவ்வொருவராக இடது புறமும் வலது புறமும் தப்பித்தனர். ஆரம்பத்தில் நூறு மான்களும் பதிமூன்று மாண்டோக்களும் இருந்தன. புலி வேகமாகத் துரத்தியது. கொஞ்ச நேரத்தில் ஐம்பது மான்கள் + பதிமூன்று மான்டோக்களானது. புலி இன்னும் வேகமெடுத்தது. கடைசியாக எல்லா மான்களும் தப்பித்து பதிமூன்று சிறப்பு மான்களும் புலியும் மட்டும் இருந்தது. புலிக்கு ஓடி ஓடி நிறையப் பசி எடுத்துவிட்டது. வழக்கத்தைவிட ஒரு 2 மான்களை அதிகம் சாப்பிட்டுவிட வேண்டும் என நினைத்தது. ஆனால் முன்னாடி இருந்த பதிமூன்று மான்களும் நன்றாக கொழு கொழுவென இருந்ததால் இரண்டு மான்களே போதும் என நினைத்தது.

மற்ற மான்கள் பாதுகாப்பாகப் போய்விட்டதைச் சரிபார்த்து மாண்டோக்கள் கண்ணடித்ததுக்கொண்டன. ஒரு விஷேஷ மான விநோதமான கொய்ய்ய்ய்ய்ங்க்க்க்க் என்ற சத்தத்தை ஓடியபடியே எழுப்பியது. காட்டையே கதிகலங்க வைத்தது அந்தச் சத்தம். பயங்கர சத்தம். திடீரென ஒரு மாண்டோ பத்து தென்னை மர உயரத்திற்குப் பாய்ந்தது. ஒரு மாண்டோ துரத்திக்கொண்டு வந்த புலியின் திசையில் ஓடி புலியை இரண்டு சுற்று சுற்றிவிட்டு திரும்பவும் தன் மாண்டோ கூட்டத்துடன் சேர்ந்தது. இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் புஸுக் என நடந்தது. புலிக்கு லேசாகப் பயம் தொற்றிக்கொண்டது.

மாண்டோக்கள் ஓடுவதை நிறுத்திவிட்டது, புலியும் நின்றது. இரண்டும் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தன. பதிமூன்று மாண்டோக்களும் ஒன்றாகச் சத்தம் எழுப்பின. ஒரு மாண்டோ சத்தம் எழுப்பியதற்கே லேசான பயம் வந்து இருந்தது. சாதாரண மான்களுக்கு ஏற்கனவே காதை மூடிக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. மாண்டோக்கள் படுவேகமாக ஒரு பெரிய வட்டத்தை உருவாக்கின. புலி நடுவில் இருந்தது. புலியின் பசி எங்கே போனது என்று கூடத் தெரியவில்லை. அத்தனை கொடூரமான புலிக்கு பயம் வந்துவிட்டது. இவர்களை தாக்க முடியாது என தோன்றியது. இவர்களை தாக்குவதை விட தப்பிப்பதே சிறந்தது என புரிந்தது.

கிடைத்த ஒரு சின்னச் சந்தில் காட்டை விட்டு வெளியே செல்லும் திசையில் புலியின் வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக அந்தப் புலி ஓடியது. இனி இந்தப் பக்கமே தலை வைக்கக்கூடாது என முடிவெடுத்தது. 13 சிறப்பு மான்களான மாண்டோக்களை மற்ற எல்லா மான்களும் வந்து பாராட்டி நன்றியை தெரிவித்தன. நிறைய பழங்களை அன்பின் அடையாளமாக கொடுத்தனர். இருட்டிக்கொண்டு வருவதால் விரைவில் ஊர் திரும்ப வேண்டும் அந்த மாண்டோக்கள் தங்கள் காட்டிற்குக் கிளம்பின. இனி எந்த பயமின்றி காட்டில் சுத்தலாம் என குட்டி மான்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தன.



பால் பாயாசம்


இதுவும் ஒரு குள்ளன் கதை தான். குள்ளன் இப்போது பத்தாவது படிக்கிறான். சுண்டுவிரல் அளவே அவன் வளர்ந்து இருக்கிறான். அவனுக்கு பள்ளியில் எல்லோருமே நண்பர்கள் தான். மதிய வேளையில் எல்லோருடைய சாப்பாட்டையும் சுவைத்துவிடுவான். அப்படி ஒரு நாள் பால் பாயாசத்தை சுவைத்துவிட்டான். அவனுக்கு கிடைத்ததோ இரண்டு சொட்டுக்கள் தான். அவனுக்கு அந்த சுவை பிடித்து விட்டது. அன்று இரவே அவனுடைய அம்மாவிடம் தனக்கு பால் பாயாசம் வேண்டும் எனக்கேட்டான். பால் பாயாசம் செய்ய எந்த பொருளும் இல்லை என்றாள் அவனுடைய அம்மா. என்னென்ன வேண்டும் என விசாரித்தான். ஆமாம் உங்களுக்கு பால் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் தெரியுமா?

பால், சக்கரை, ஏலக்காய், சேமியா, ஜவ்வரிசி ஆகியவை தேவை. பால் பாயாசம் அவனுக்கு மட்டும் போதாதாம். ஒரு அண்டா நிறைய வேண்டுமாம். அவனுடைய எல்லா நண்பர்களுக்கு பால் பாயாசம் கொடுக்கப்போவதாக தெரிவித்தான். மறுநாள் காலை எழுந்தவுடன் குள்ளனுடைய தாயார் அவனிடம் பணம் கொடுத்து, பாத்திரங்கள் கொடுத்து மாட்டுவண்டியினை பூட்டி அடுத்த ஊரில் இருக்கும் சந்தைக்கு அனுப்பினாள். பாத்திரங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டு மாட்டுவண்டியில் கிளம்பினான். “டேய் எப்படி எல்லாத்தையும் எடுத்துகிட்டு வருவ?”

‘ஏலேலலே ஏலேலலே’ என முனுமுனுத்தபடியே சந்தோஷமாக மாட்டுவண்டியை ஓட்டினான். அடுத்த ஊருக்கும் இவன் ஊருக்கும் நடுவே ஆறு ஓடுகின்றது. ஆற்றின் கரையில் வண்டி நின்றது. அங்கிருந்த மக்கள் எல்லாம் இவனைப் பார்த்து சிரித்தனர், கேலி செய்தனர். “குள்ள தம்பி எப்படி அந்த கரைக்கு போவாய்? எதுக்கு அந்தப்பக்கம் போகின்றாய்” எனக்கேட்டனர். “யாருக்கெல்லாம் பால் பாயசம் வேணுமோ என் பின்னாடி வாங்க” என்றான். நிறைய மக்கள் கூடிவிட்டனர்.

அப்போது தான் அந்த அதிசயத்தை அனைவரும் பார்த்தனர். வலது மூக்கினை மூடி இடது மூக்கில் வேகமாக இழுத்தான். உடனே அந்த மொத்த ஆற்றி நீரும் அவன் இடது மூக்கிற்குள் சென்றது. ஆமாம். அந்த கரைக்கு செல்ல வழி வந்தது. கூடி இருந்த மக்கள் எல்லோரும் அவன் மாட்டு வண்டியின் பின்னாலே சென்றனர். நேராக சந்தைக்கு வண்டி சென்றது. மூக்கில் ஆற்று நீரை எடுத்த செய்தி பரவி நிறைய மக்கள் வர ஆரம்பித்தனர். முதலில் பால் பண்ணைக்கு சென்றான். அங்கே இரண்டு பெரிய அண்டாவின் இருந்த பாலின் விலையை கேட்டான். பணம் கொடுத்தான். எடுத்துச்செல்ல பாத்திரம் எங்கே எனக்கேட்டனர். இப்போது இடது மூக்கினை மூடி வலது மூக்கின் வழியே பாலை உறிஞ்சினான்.

இன்னும் மக்கள் கூடிவிட்டனர். சந்தையில் 10 கிலோ சக்கரை வாங்கினான். இவ்வளவு பெரிய மூட்டையை எங்கே வைப்பான் என ஆர்வமுடன் பார்த்தனர். இடது காதினிற்குள் சக்கரையை கொட்டினான். பக்கத்து கடையில் 10 கிலோ சேமியாவை வாங்கினான். அதனை வலது காதினிற்குள் போட்டுவிட்டான். இன்னும் ஜவ்வரிசி மட்டும் வாங்க வேண்டும். ஜவ்வரிசியை நீங்கள் பார்த்ததுண்டா? குட்டி நிலா போல இருக்கும். அதுவும் ஐந்து கிலோ வாங்கினான். குட்டி பையாக இருந்ததால் அந்த மூட்டையை மாட்டு வண்டியில் பின்புறம் வைத்துக்கொண்டான். இதற்குள் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டுவிட்டனர். அவன் மாட்டு வண்டியில் பின்னால் நடந்து சென்றனர்.

மீண்டும் ஆற்றினை கடந்தான். ஏதோ ஒரு மூக்கில் ஆற்று நீர் இருக்கின்றது அல்லவா? இடதா வலதா? ஆம் இடது. வலது மூக்கினை மூடி உஸ்ஸ்ஸ் என மூச்சுவிட்டான். ஆற்று நீர் வேகமாக வெளியே வந்தது. மீண்டும் பழையபடி ஆறு ஓடியது. ஊருக்குள் சென்றுகொண்டிருந்தபோது அவனுடைய பள்ளி நண்பர்கள் எதிர்பட்டனர். “நண்பர்களே, என்னுடன் வீட்டுக்கு வாங்க உங்களுக்கு சுவையான பால் பாயாசம் கிடைக்கும்” என அவர்களையும் வண்டியில் ஏற்றிச்சென்றான்.

“அம்மா…அம்மா” என வீட்டு வாசலில் இருந்து அம்மாவை அழைத்தான் குள்ளன். வெளியே வந்த அம்மாவிற்கு ஆச்சர்யம் சுமார் 200 பேர் மொத்தம் இருந்தார்கள். “அம்மா எல்லோருக்கும் பால் பாயாசம் செய்து கொடுங்க..” என்றான். “நிச்சயம் கொடுக்கலாம் தம்பி. நான் கேட்ட பொருட்களை வாங்கி வந்தாயா? வெறும் ஜவ்வரி மட்டும் தான் இருக்கு இதை வெச்சு செய்யமுடியாதுப்பா” என்றார்கள்.

ஊர்மக்கள் சிரித்தார்கள். “உங்க மகன் பலம் உங்களுக்கே தெரியாதா?” எனக்கேட்டார்கள். ஒரு ஞானியிடம் இருந்த மந்திரத்தை பெற்றது அவன் அம்மாவிற்கே தெரியாது. பெரிய பெரிய பாத்திரங்களை கொண்டுவரச்சொன்னான். வலது மூக்கில் இருந்த பாலினை வரவழைத்தான். இடது காதில் இருந்து சக்கரையையும், வலது காதில் இருந்து சேமியாவையும் வரவழைத்தான். அவன் வீடே திருவிழாப்போல இருந்தது. ஒரு மணி நேரத்தில் சூடான சுவையான பால் பாயாசம் தயார். அந்த பாயாச வாசனையே குள்ளனை மகிழ்வித்தது குள்ளன் மட்டுமல்ல அவனது நண்பர்கள், இரண்டு ஊர் மக்கள் அனைவரும் சுவைத்து மகிழ்ந்தனர். இதோ பாருங்கப்பா உடனே அம்மா – அப்பாகிட்ட பால் பாயாசம் வேணும்னு கேட்கக் கூடாது. அவங்களே செய்து தருவாங்க.

தாம்தூம் சொறக்கா டூம்


“தாம்தூம் சொறக்கா டூம்” - குள்ளனின் குட்டிக்கதைகள்.

குள்ள மனிதனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம் அவனே தான். கட்டைவிரல் அளவிற்கு மட்டுமே வளர்ந்த அவனைப் பற்றிய கதைகள் தான் குள்ளனின் லீலைகள்.

நீண்டவருடங்களுக்கு முன்னர் நடந்த கதைகள் இவை.

குள்ளன் படிப்பறிவு இல்லாதவன்.குள்ளன் ஒரு குறும்புக்காரன். குள்ளன் ஒரு சோம்பேறி. ஏதோ கோளாறினால் அவன் பெரிதாக வளார்வதற்கு பதிலாக உடல் சிறுத்துக்கொண்டே சென்றான். இப்போது உங்கள் கட்டைவிரல் அளவிற்கு தான் இருக்கின்றான். சரி கதைக்கு வருவோம். குள்ளனுக்கும் நெட்டையளுக்கும் திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றது. குள்ளன் எந்த வேலையும் செய்யவில்லை. அதனால் தினமும் வீட்டில் திட்டு தான். வேலை செய்யவில்லை என்றால் யார் தான் சும்மா இருப்பாங்க சொல்லுங்க.

குள்ளனுக்கு கோழிக்கறி என்றால் கொள்ளை பிரியம். அவன் அம்மாவிற்கு கோழிக்கறி சமைக்க தெரியாதலால் அவன் இதுவரை கோழிக்கறி குழம்பை சாப்பிட்டதே இல்லை. ஆனால் அதன் ருசியினைபற்றி நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றான். நண்பர்களிடம் கேட்கவும் அவனுக்கு தயக்கம். திருமணம் நடந்ததும் ஒரு நாள் தன் நெட்டை மனைவியிடம் முழுக்கோழி ஒன்றினை வாங்கி வந்தான், கோழிக்கறி குழம்பு செய்து வைக்கச் சொன்னான். தன் நண்பர்களிடம் சென்று இன்று தான் கோழிக்கறி குழம்பு சாப்பிடப்போவதாக பெருமையாக பேசிவிட்டு வீடு வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி. தன் மனைவி சமைக்கும் போது குழம்பை ருசி பார்த்து இருக்கின்றாள், மிகவும் ருசித்ததால் அனைத்து குழம்பையும் அவளே சாப்பிட்டுவிட்டாள். குள்ளனுக்கு கோபம் வந்ததுவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தான். யார் சொல்லியும் கேட்கவில்லை. அடங்கவில்லை.

கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்தான். வழியில் ஒரு முனிவரை சந்தித்தான். கோவமுடன் இருந்த குள்ளனை சாந்தப்படுத்தினார். சமாதானம் செய்ய உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு குள்ளன், தான் யாரை பார்த்து ஒரு மந்திரம் சொன்னாலும் அவர்கள் சிலையாகி விடவேண்டும். அப்படிப்பட்ட மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுங்கள் என்றான். வேதனையுற்ற முனிவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு குள்ளனின் காதில் அந்த மந்திரத்தை கூறினார். அந்த மந்திரம் தான் “தாம்தூம் சொறக்கா டூம்”.

மந்திரம் வேலை செய்கின்றதா என்பதை பரிசோதிக்க அவன் வீட்டு அருகே எப்போது அவனை துரத்தும் நாயிடம் அந்த மந்திரத்தை கூறினான். நாய் சிலையானது. ஆஹா மந்திரம் வேலை செய்கின்றது என உறுதிபடுத்திக்கொண்டான். அன்று மாலையே மீண்டும் முழுக்கோழி வாங்கிக்கொண்டு மனைவியிடம் கொடுத்தான். குழம்பு சமைக்க சொல்லிவிட்டு வாசலில் வந்து உறங்கினான். மனைவி மீண்டும் அதே போல செய்துவிட்டள். அனைத்து கோழி குழம்பையும் குடித்துவிட்டாள். உள்ளே சென்ற குள்ளனுக்கு கடும் கோபம். எதுவும் பேசாமல் நின்றுகொண்டு இருந்தாள் மனைவி. உடனே “தாம்தூம் சொறக்கா டூம்” என்று தன் மனைவியினை பார்த்து கூறினான். தன் மனைவி அப்படியே சிலையாக மாறிவிட்டாள்.

வாசலில் வந்து அமர்ந்தான். வழிப்போக்கர்கள் தெருவின் முனையில் உள்ள திருமண மண்டபத்தில் கோழிக்கறி விருந்து நடப்பதாக பேசிக்கொண்டு சென்றனர். குள்ளன் அங்கே விரைந்தான். மண்டப வாசலில் அவனை திருமணம் நடத்துவோர் மடக்கி அழைப்பிதழ் இருக்கின்றதா என்றனர். இல்லை என்றதும் அவனை விடவில்லை. அவன் தன் மந்திரத்தை பயன்படுத்தி மடக்கியவர்களை சிலையாக்கினான்.

மண்டபத்திற்குள் நுழைந்து அங்கிருந்த எல்லோரையும் பார்த்து 'தாம்தூம் சொறக்கா டூம்' என்றதும் அனைவரும் சிலையானார்கள். மணமக்களையும் குள்ளன் சிலையாக்கினான். சமையல்கட்டிற்கு சென்று சமையல் செய்து கொண்டு இருப்பவர்களை சிலையாக்கினான். அங்கே அண்டா முழுக்க கோழிக்குழம்பு. அண்டா முழுக்க இருந்த மொத்த கோழிக்குழம்பையும் குடித்தான்.

அளவுக்கு மீறி உண்டுகொண்டே இருந்தான் குள்ளன். வயிறு பெருத்தது. அவனால் நடக்கமுடியவில்லை. மெல்ல மெல்ல நடந்து மீண்டும் ஒரு இறைச்சி துண்டை கடித்தான். வாயினை திறக்கவில்லை. காக்கா ஏதேனும் கொத்தி சென்றுவிடும் அல்லவா. அவன் தொண்டைவரை உணவு இருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு கண்ணாடி முன்னர் நின்றான். வயிற்றுவலி தாங்கவில்லை. கண்ணாடியில் அவனைப் பார்த்து “தாம்தூம் சொறக்கா டூம்” என்று சொல்லி அவனும் சிலையானான்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த முனிவர் சிலையான அனைவரையும் “ம்டூ காக்றசொ ம்தூம்தா” என்ற மந்திரம் மூலம் உயிர்பெறச்செய்தார். என்ன நடந்தது என்றே அனைவரும் மறந்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து வாழ்கையினைத் தொடர்ந்தார்கள். அதன் பிறகு அந்த மந்திரத்தை முனிவரும் மறந்துவிட்டார் குள்ளனும் மறந்துவிட்டான். நீங்களும் மறந்துவிடுங்கள். மறந்துகூட இதை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.